– திருவண்ணாமலை கலசபாக்கம் விதைத் திருவிழா!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசபாக்கத்தில் பாரம்பரிய இயற்கை வேளாண்மையில் ஆர்வம் கொண்ட விவசாயிகள் விதைத் திருவிழாவை நடத்தினர்.
அதில் பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு விதைகளுடன், தங்கள் விவசாய அனுபவங்களையும் உற்சாகமாகப் பகிர்ந்துகொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவை அவர்கள் நடத்தி வருகின்றனர்.
இங்கு நடந்த சில நிகழ்வுகளைப் பார்க்கலாம். இலவச மின்சாரத்திற்கான போராட்டக் களத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியான விவசாயிகளுக்கு அஞ்சலியும், அந்தப் போராட்டக் களத்தில் பங்குகொண்டவர்களில் ஒருவரான கட்டிபூண்டி தஞ்சி என்பவருக்கு மரியாதையும் செய்யப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தில் நீண்டகாலம் பங்காற்றிய கஸ்தம்பாடி சுப்பிரமணியம், வேளாண்மைத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற திருவெண்ணெய்நல்லூர் வேங்கட சுப்புநாதன், கலசபாக்கம் ஊ.ம. தலைவர் வள்ளிக்கண்ணன் ஆகியோர் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
விதைகள் விற்பனைக்கு
விதைத் திருவிழாவில் கிட்டத்தட்ட 25 கடைகள் வரை விதைகள், உணவுப் பொருள்கள், கைவினைப் பொருள் என விற்பனைக்கு வந்திருந்தன.
கலசபாக்கம் சுற்றுவட்டார விவசாயிகளிடம் புழக்கத்தில் உள்ள 64 நெல் ரகங்கள் விற்பனை மற்றும் பகிர்வுக்கான தகவல் தொகுப்பு வெளியிடப்பட்டது.
விவசாயிகள் நடத்திய கலந்துரையாடலில் நமக்குத் தேவையான, சூழலுக்குத் தகுந்த ரகங்களை மட்டும் வைத்துக்கொண்டு இயங்குவதுதான் விவசாயிகளுக்கு நல்லது என்பது குறித்தும் விதை விற்பனை மற்றும் விதைப் பாதுகாப்பை நோக்கி எளிய விவசாயிகளால் நீண்ட காலம் செயல்பட முடியாது என்பது பற்றியும் விவாதித்தனர்.
பழைய கற்பிதங்கள்
விவசாயி என்பவன் ஏதோ வயதான, உழைப்பும், ஏழ்மையும் நிறைந்தவன் என்ற பார்வை சமூகத்திடமும், ஊடகங்கள், திரைப்படங்கள் முன்வைப்பது மாற்றிக்கொள்ளப்பட வேண்டும்.
இன்று விவசாயிகள் இளைஞர்களாகவும், தொடர்ந்து அறிவார்ந்த பார்வைகளோடு சமூகத்தில் களமாடும் ஆற்றல் கொண்டவர்களாகவும் உள்ளனர் என்ற கருத்தை உரையாடலின்போது இராஜேந்திரன் முன்வைத்தார்.
உணவின் மீதான அக்கறையோடு கடந்த ஓர் ஆண்டாகத் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடக்கும் விவசாயிகள் கூடல்களில் குடும்பமாக வந்து தங்கள் பங்களிப்பை ஆற்றிவரும் மூன்று தம்பதியருக்கு மரியாதை செய்யப்பட்டது.
பாராட்டுக்குரிய தம்பதிகள்
துரிஞ்சிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகந்நாதன் – விஜி தம்பதிகள் சிரட்டை, தென்னை ஓலை இவற்றில் கைவினை பொருள் செய்வது, தேங்காய்ப்பால் மோர், அவல் லட்டு – புட்டு என துரித உணவு வகைகள், அதிரசம், பாயாசம் என எல்லா உணவுகளையும் வழங்கி மகிழக்கூடியவர்கள்.
வேடந்தவாடி கார்த்தி – நீலவேணி இருவரும் தென்னை – பனை ஓலைகளில் பல பொருள் செய்யும் வித்தகர்கள். எப்போதும் உணவில் புதிய முயற்சிகளைச் செய்துகொண்டே இருப்பார்கள்.
நல்வன்பாளையம் கமலக்கண்ணன் – சூர்யகமலா தம்பதிகள் சமூக மாற்றத்திற்கு முன்பு வீட்டில் மாற்றத்தை நிகழ்த்தவேண்டும் என நினைப்பவர்கள்.
உணவு மற்றும் பயன்பாட்டுப் பொருள்களில் சகமனிதர்களோடு சேர்ந்து புதுமை படைக்க விருப்பம் கொண்டவர்கள்.
விவசாயிகள் தன்னிறைவு
மென்பொருள் துறை பணியைத் துறந்து எளிமையான பள்ளி ஆசிரியர் பணியோடு, ஆளில்லா அங்காடியைப் பராமரித்து வருபவர் கமலக்கண்ணன்.
விவசாயிகள் – நுகர்வோர் இருவரோடும் தன்னிறைவு குறித்த ஆழமான அதே நேரத்தில் மிக எளிய உரையாடல்களை நிகழ்த்தும் தம்பதி இவர்கள்.
இதுபோன்ற உள்ளூர் விதைத் திருவிழாக்கள் மாவட்டத்திற்குள் பாரம்பரிய விதைகளைத் தேடும் விவசாயிகளுக்கு வாய்ப்புகளின் புதிய கதவுகளைத் திறந்து வைக்கின்றன.
– எஸ். சங்கமி