வண்ணக் குவியல் செய்யும் மாயம்!

– மலைக்கோட்டை வாலிபன் ட்ரெய்லர் தரும் அனுபவம்

‘காம்பினேஷன்’ என்ற வார்த்தை தான் திரையுலகில் வெற்றிக்கான எதிர்பார்ப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த இயக்குனரோடு இந்த நாயகன் இணைகிறாரா?

இந்த படத்துக்கு இவர் இசையமைத்திருக்கிறாரா? இந்த கேள்விதான் ஒரு படம் குறித்த எதிர்பார்ப்பைப் பூதாகரமாக்குகிறது.

குறிப்பாக, ஒன்றுக்கொன்று எதிர்த்திசையில் இருக்கும் இரண்டு பேர் இணையும்போது அதன் தரமும், அப்படம் தரும் சுவாரஸ்யமும் எப்படியிருக்கும் என்ற எண்ணம் பெருகுகிறது.

அந்த வகையில், மலையாளத் திரையுலகில் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி உடன் மோகன்லால் இணைகிறார் என்பதே பலரது புருவங்களை உயர்த்தியது.

அது ஒரு ‘பேண்டஸி ஆக்‌ஷன் அட்வெஞ்சர்’ படம் என்பது இருவரது ரசிகர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

வரும் 25-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது.

அது, நமது எதிர்பார்ப்பை எந்த அளவுக்கு அதிகப்படுத்தியிருக்கிறது?

லிஜோவின் பங்களிப்பு!

நாயகன், சிட்டி ஆஃப் காட், ஆமன், டபுள் பாரல் படங்கள் வரை வெகுசாதாரணமான கமர்ஷியல் இயக்குனராகவே அறியப்பட்டு வந்தவர் லிஜோ ஜோஸ் பெலிசேரி.

அவற்றின் உள்ளடக்கம் வேறு சில வெளிநாட்டு படங்களின் சாயலைக் கொண்டிருந்தன. ஆனால், அங்கமாலி டைரிஸ் அவற்றில் இருந்து வெகுவாக விலகி நின்றது.

அந்த படத்தின் காட்சியமைப்பு, திரைக்கதை பாணி ஆகியன பலப்பல படங்களை நினைவூட்டினாலும், அதன் அடிப்படைக் கதை கேரளத்தில் உள்ள ஒரு நடுத்தர நகரத்தின் மாற்றங்களைப் பேசியது; அங்கிருக்கும் மனிதர்களின் மனங்களைக் கூறு போட்டது.

கூடவே, வழக்கமான கமர்ஷியல் படமொன்றை எதிர்பார்ப்பவர்களுக்கு வித்தியாசமானதொரு சுவையைத் தந்தது.

அதுதான் லிஜோ மீது பிற மொழி ரசிகர்களின் கவனம் திரும்பிய தருணம்.

தொடர்ந்து ‘ஏ மா யூ’வில் கடற்கரையோரக் கிராமத்து மனிதர்களின் வித்தியாசமான வாழ்வியல் அம்சங்களைப் பட்டியலிட்டார் லிஜோ. அம்மக்களின் கண்ணீர் நிறைந்த வாழ்க்கையைக் காட்டினார்.

அதன் தொடர்ச்சியாக ‘ஜல்லிக்கட்டு’, ‘சுருளி’ படங்களைத் தந்தார். அவற்றின் காட்சியமைப்பும் கேமிரா கோணங்களும் புதியதொரு உலகத்தைக் காட்டின;

ஆனால், வாழ்க்கையின் உன்னதமோ, அவற்றில் நிறைந்துள்ள உண்மைத்தன்மையோ அப்படங்களில் தென்படவில்லை. ஆனால், அப்படங்களைக் கொண்டாடித் தீர்த்தவர்களும் உண்டு.

அந்த நிலையில்தான், ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ குறித்த அறிவிப்பு பலரை வியப்பில் ஆழ்த்தியது.

லிஜோ இயக்கிய அந்த படத்தை மம்முட்டியே தயாரித்தார், பிரதான பாத்திரத்தில் நடித்தார்.

திரைப்பட விழாக்களில் வெளியாகிப் பாராட்டுகளை அள்ளியதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களிடமும் அது வரவேற்பைப் பெற்றது.

‘பேண்டஸி’ படம் என்றபோதும், அப்படத்தின் திரைக்கதை நகர்வு வழக்கமான மலையாளப் படங்களைப் பின்னுக்குத் தள்ளும் வகையில் வெகு யதார்த்தமாகத் தெரிந்தது. கூடவே, சினிமாத்தனம் உண்டுபண்ணும் மாயாஜாலத்தையும் திரையில் நிகழ்த்தியது.

லிஜோவின் படங்களை ரசிக்கும் ஒருவருக்கு, திரையில் அவர் காட்டும் உலகம் வழக்கத்திலிருந்து வேறுபட்டதாகத் தெரியும்.

அதற்காக அவரும் அவரது குழுவினரும் கொட்டும் உழைப்பே அப்படங்கள் பார்க்கும் அனுபவத்தைப் பரவசமானதாக மாற்றுகிறது. அதுவே, மலையாளத் திரையுலக வரலாற்றில் அவரது பங்களிப்பைக் குறிப்பிடத்தக்கதாக மாற்றியிருக்கிறது.

வண்ணக் குவியல்!

‘மலைக்கோட்டை வாலிபன்’ ட்ரெய்லர் 2 நிமிடங்கள் 23 நொடிகள் ஓடுகிறது. ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய ஒருவரின் உண்மைக் கதை இது என்று சொல்லப்படுகிறது.

கிட்டத்தட்ட 1700 தொடங்கி 1947 வரை நிகழ்ந்த சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயரின் கையே ஓங்கியிருந்தது என்பது சிறு குழந்தைக்கும் தெரியும்.

அதில் ஹீரோயிசத்துக்கு எத்தகைய இடம் கிடைக்கும் என்பது தெரியாது.

ஆனால், அப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் முயற்சிகளும் முனைப்புகளும் நிச்சயம் வரலாற்றில் பொறிக்கத்தக்கதாக இருக்கும்.

அதற்கொரு கற்பனை வடிவம தரும்போது, அதுவும் லிஜோ போன்ற இயக்குனரின் பார்வையில் அவ்வுலகம் விரியும்போது நிச்சயம் வித்தியாசமாகத்தான் தெரியும்.

இந்த ட்ரெய்லர் முழுக்க ‘வண்ணக் குவியல்’ நமக்குத் தென்படுகிறது. மனிதர்கள் பெரும் எண்ணிக்கையில் இடம்பெற்றிருக்கின்றனர். அவற்றுக்கு நடுவே நாயகன் மோகன்லாலைத் தேட வேண்டியிருக்கிறது.

ஆனால், அவரைக் கண்டுபிடித்தபிறகே அந்த பிரேமின் அழகை ரசிக்க மனம் ஓடுகிறது. அந்த வடிவமைப்பில் லயிக்கிறது. அந்த வகையில் மது நீலகண்டன் உழைப்பு நம்மை பிரமிப்பில் ஆழ்த்தக்கூடும்.

படம் வெளியாகும்போது அந்த பிரமிப்பு பெருகினால் நிச்சயம் ‘மலைக்கோட்டை வாலிபன்’ பெரிய வெற்றியை ஈட்டும்.

போலவே, மெல்ல மேலெழும் இசையும் நமது ரசனையைச் சுண்டியிழுக்கிறது.

பிரசாந்த் பிள்ளையின் இசையில் பாடல்கள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று தெரியவில்லை.

இதில் மோகன்லால் தவிர்த்து ஹரீஷ் பேரடி, மணிகண்டன் ஆச்சாரி, கதா நந்தி போன்றோரது முகங்கள் தெரிகின்றன. இன்னும் பலர் இப்படத்தில் இடம்பெற்று நம்மை ஆச்சர்யப்படுத்தக்கூடும்.

‘பான் இந்தியா’ படம்!

‘மரக்கார்: அரபிக்கடலிண்ட சிம்ஹம்’ போல, மோகன்லாலின் ‘மலைக்கோட்டை வாலிபன்’னும் இந்தியா முழுக்க வெளியாகிறது; மலையாளத்தில் இருந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் டப் செய்யப்படுகிறது.

பொருட்செலவு தான் பிரமாண்டத்தைத் திரையில் தரும் என்ற விதியைத் தளர்த்தி ‘777 சார்லி’, ‘சப்த சாகரதாச்சே எல்லோ சைடு ஏ & சைடு பி’ போன்ற படங்கள் பரவலான வரவேற்பைப் பெற்றன.

தற்போது குறைந்த செலவில் தயாரான ‘ஹனுமான்’ கூட பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது.

அந்த வரிசையில் ‘மலைக்கோட்டை வாலிபன்’ சேருமா என்பது அதன் உள்ளடக்கத்தைப் பொறுத்தது.

அதனை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது எனினும், இப்படத்தின் காட்சியாக்கம் நிச்சயம் வழக்கமான கமர்ஷியல் படங்கள் போலிருக்காது என்று உறுதியாகச் சொல்லலாம்!

– உதய் பாடகலிங்கம்

You might also like