பாவப்பட்ட மக்களின் வலிகளை அழுத்தமாய் பேசும் நூல்!

நூல் அறிமுகம்:

வாசிப்பு மட்டுமே ஒரு மனிதனை மேம்படுத்தும், நல்ல சிந்தனைவாதியாக மாற்றும் எனச் சொல்லி அங்கிருந்த நண்பர் ஒருவர் எழுத்தாளர் கரீம் எழுதிய தாழிடப்பட்ட கதவுகள் என்ற சிறுகதை புத்தகத்தை தந்தார்.

ஒரு புத்தகம் ஒரு மனிதனை தூங்க விடாமல் செய்யும், மனதை உருக்கும், கண்களை கசக்கிப் பிழியும் என்பதை முதன்முதலாக அந்த புத்தகத்தைப் படித்து தான் உணர்ந்து கொண்டேன்.

அந்தப் புத்தகம் படித்து முடித்து குறைந்தது ரெண்டு மாதம் ஆகிவிட்டது. இருந்தும் அதன் பாதிப்பிலிருந்து இன்னும் வெளிவராமல் தவிக்கிறேன்.

படித்த எனக்கே அந்த பாதிப்பு என்றால் அந்தப் புத்தகத்தில் இருந்த கதை மாந்தர்களின் நிலையை என்னும் போதே இரத்தக் கண்ணீர் வராத குறை தான்.

அந்த கதைகள் எல்லாம் வெறும் கற்பனை அல்ல. அந்த புத்தகமே சில உண்மை நிகழ்வின் பிரதிபலிப்பு தான்.

நீங்கள் எந்த மதமாக இருந்தாலும் அடிப்படை வாதமும் – தீவிரவாதமும் – வன்முறையும் தவறு தான். அதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால், முந்தைய கோவை குண்டுவெடிப்புக்குப் பின் அப்பாவி இஸ்லாமிய மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையும் – அதிகார துஷ்ப்பிரயோகங்களும் சொல்லி மாளாது.

இன்றைய சமுதாயப் பார்வையில் இஸ்லாமியன் என்றாலே தீவிரவாதி என்ற கட்டமைப்பை சில மீடியாக்களும் – சில சினிமாக்களும் கட்டமைத்து வைத்திருக்கின்றன.

நூற்றுக்கு தொன்னூறு சதவிகித அப்பாவி முஸ்லிம்களே அந்த கோவை குண்டு வெடிப்பை தவறு தான் என்று சொல்லியிருக்கின்றனர்.

தப்பு செய்தவனை தண்டிப்பதை விட்டுவிட்டு மதக்கலவரத்தை ஏற்படுத்தி அப்பாவி மக்களின் மீது இழைக்கப்பட்ட அநீதி.

இன்றும் கோயம்புத்தூரில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பயத்தோடும் பதட்டதோடும் வாழும் இஸ்லாமிய குடும்பங்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

அன்றாட தினக்கூலிகளான ஏழை இஸ்லாமிய மக்களின் வாழ்வாதாரத்தை நாசம் செய்து, அவர்களுடைய வீடு – வாசல் – கடைகளை நிர்மூலமாக்கியதோடு மட்டுமின்றி நிறைய உயிர்பலி வாங்கியதையும் இந்நூல் பேசுகிறது.

இந்த புத்தகம் குடும்ப உறவுகளின் மூலம் ஆத்மார்த்தமாய் நம் நெஞ்சை பதற வைக்கும் பத்து உண்மை கதைகளை உயிரோட்டமாய் அந்த மக்களின் வாழ்வியலோடு – வட்டார மொழியோடு அழகாய் சொல்லியிருக்கிறார் எழுத்தாளர் கரீம்.

ஒரு மொஹல்லாவின் மய்யத்துக்கள் என்ற கதையில் வரும் இஸ்லாமிய கதாநாயகி வயசுக்கு வந்ததும் படிப்பை நிறுத்தி விடுவார்கள்.

இன்றளவும் நிறைய கிராமங்களில் இஸ்லாமிய பெண்கள் வயதுக்கு வந்தவுடன் படிப்பை நிறுத்தும் பழக்கம் உள்ளது.

எழுத்தாளர் ஒரு இஸ்லாமியராக இருந்தபோதும் தன் மதத்தின் குறைகளை நேர்மையாய் அந்த கதாநாயகியின் வாயிலாக சொல்லி இருந்தார்.

அதே கதையில் சமத்துவ எண்ணம் கொண்ட நல்ல குணநலன்கள் கொண்ட கதாநாயகன் திருமணத்திற்கு ஒருவாரத்திற்கு முன்பு அவன் முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக அவனது ஆணுறுப்பு அறுக்கப்பட்டு பெட்ரோல் ஊற்றி அரசு மருத்துவமனை முன்பாக எரிக்கப்படும் காட்சியை படிக்கும் போதே கோயம்புத்தூரும் இன்னொரு குஜராத்தாக மாறிவிட்டதோ என்ற அச்சம் தொற்றிக் கொண்டது.

அன்புள்ள அத்தாவுக்கு என்ற கதையில் வீண் பழி சுமந்து குண்டு வெடிப்பு வழக்கில் அப்பாவியாய் மாட்டிக் கொண்டு தன் இளமை தொலைந்து வரும் கதாநாயகன், முடிநரைத்த தன் மனைவி, சிறு வயதில் தன்மேல் உயிரையே வைத்த பெண் குழந்தை, வளரும் பருவத்தில் தன் அப்பாவினால் ஏற்பட்ட அவமானத்தின் காரணமாக அப்பாவை வெறுக்கத் துவங்கிறாள்.

அவள் திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்லும் போது நல்ல குணநலன்களை கொண்ட அப்பா ஒரு போதும் தவறு செய்திருக்க மாட்டான்.

இந்த சமுதாயமும் – அதிகாரவர்க்கமும் தான் என் அப்பாவை ஜெயிலுக்கு அனுப்பி அவருக்கு தீவிரவாதி பட்டமும், எனக்கு தீவிரவாதி மகள் பட்டமும் கொடுத்தது என்று உணர்ந்து அவள் அப்பாவை கட்டிப்பிடித்து அழும் இடத்தில் எல்லாம் உங்கள் விழிகளில் நிச்சயம் கண்ணீர் எட்டி பார்க்கும்.

ஒட்டுமொத்த இந்த சிறுகதைத் தொகுப்பை விமர்சனம் செய்ய வேண்டுமென்றால் ஒரு நாள் போதாது.

இந்த சிறுகதைத் தொகுப்பை பற்றிச் சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கு.

என்னைப் பொறுத்தவரை தாழிடப்பட்ட கதவுகள் என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற பத்து சிறுகதைகளும் பாவப்பட்ட மக்களின் வலிகளை நேர்மையாய் அழுத்தமாய் பேசும்!

****

நூல்: தாழிடப்பட்ட கதவுகள்
ஆசிரியர்: அ. கரீம்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ₹160.00

– நன்றி: புக் டே தளம்

You might also like