கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவையொட்டி அவருடனான நினைவுகளைப் பகிர்ந்தவர்கள் அனைவருமே சொன்ன ஒருமித்தக் கருத்து அவருடைய விருந்தோம்பல் பற்றி சிலாகித்தது. அனைவருக்கும் பாகுபாடின்றி சமமாக உணவளித்தது.
தமிழ்க் கலாச்சாரத்தில் உணவின் இடமும் விருந்தோம்பலின் இடமும் மிகவும் முக்கியம்.
“நோக்கக் குழையும் விருந்து” என்கிறான் அய்யன் வள்ளுவன்.
ஒரு பெரிய அரசன் வீட்டு திருமணம். நம் மூதாய் ஔவை சொன்னதாக ஒரு சம்பவம். கூட்டங்கூட்டமாக மக்கள் விருந்துண்ண போகிறார்கள். ஔவையிடம் கேட்கிறார்கள், “உண்டீரோ” என்று.
ஔவை சொல்கிறாள், “தள்ளுண்டேன், நெருக்குண்டேன், சிக்குண்டேன் சோறு உண்டிலேன்”
அந்தக் காலத்திலேயே விருந்துபசரிப்பில் பிரச்சினைகள் இருந்திருக்கு. கிராமங்களில் நமது தாத்தா, பாட்டிகளின் விருந்து உபசரிப்பு மற்றும் சோறு பற்றி இருந்த அற உணர்வுகளை நாம் நகர வாழ்க்கையில் முற்றாக இழந்துவிட்டோம்.
கிராமங்களில் முந்தைய தலைமுறை அதாவது நமது தாத்தா, பாட்டிகள் பயன்படுத்திய சொற்கள் ஆழமான அர்த்தம் கொண்டவை.
“சோறு என்னடா பெரிய சோறு
கல்லுலயும் சோறு கத்தாழையிலயும் சோறு”
“மனுசனுக்கு சோறு ஒரு பிரச்சினயா தொண்டைக்குக் கீழ போய்ட்டா நரகலு”
“வந்தது வந்திட்டீக ஒரு வாய் சாப்பிட்டுட்டுப் போங்க “
“கை நனைக்காமப் போயிறக் கூடாது “
இந்த மாதிரியான உரிமையுடனும் அக்கறையுடனும் வரும் ஆத்மார்த்தமான உபசரிப்பை நாம் இழந்துவிட்டோம்.
“உண்ட வீட்டுக்கு இண்டகம் செய்யக் கூடாது”என்பது சொலவடை.
“உப்பிட்டவரை உள்ளளவும் நினை”என்பது அறிவுரை.
“அன்னம் கிடைக்காம சீரழியப் போற”என்பது சாபம்.
சோற்றின் முக்கியத்துவத்தை அறிந்து தேர்தலுக்காக ஓட்டுக்குப் பணம் கொடுத்தவர்கள் சோற்றை சாட்சியாக வைத்து பணம் கொடுத்தார்களாம். சோற்றில் சத்தியம் பண்ணிவிட்டால் யாருமே மாற மாட்டார்கள்.
இப்போது வீடுகளில் சமைப்பது அருகி ஹோட்டல்களில் ஆர்டர் பண்ணி சாப்பிடுகிற காலம். பிறகு எப்படி விருந்தினர்களை உபசரிக்க. அதற்கும் பொருத்தமான ஒரு வாசகத்தை இந்தத் தலைமுறை கண்டுபிடித்து வைத்திருக்கிறது.
“சாப்பிடச் சொல்லலாம். நீங்களெல்லாம் எங்க வீட்ல சாப்பிட மாட்டீக”
விருந்தோம்பலில் அறத்தை கடைப்பிடித்து வாழ்ந்து மறைந்த நமது தாத்தா, பாட்டிகளுக்கும் அந்த அற உணர்வைத் தொடர்ந்த கேப்டன் விஜயகாந்த்
அவர்களுக்கும் அஞ்சலிகள்.
நன்றி: முகநூல் பதிவு