என்றும் இனிக்கும் இளமையோடு திரையுலகில் வலம் வருவது சாதாரண விஷயமல்ல. குறிப்பாக, தொழில்நுட்பக் கலைஞர்கள் அப்படியொரு திறமையைப் பெற்றிருப்பது நிச்சயம் நம்மை வியக்க வைக்கும்.
புதிதாக வரும் படைப்பாளிகளிக்கும் அவர்களது சிந்தனைகளுக்கும் வளர்ந்துவரும் அறிவியல் மேம்பாடுகளுக்கும் ஏற்பத் தன்னைப் புதுப்பித்துக் கொண்டால் மட்டுமே அது சாத்தியம்.
இந்தியத் திரையுலகில் அப்படியொருவராக உலா வருகிறார் படத்தொகுப்பாளர் ஏ.ஸ்ரீகர் பிரசாத்.
இந்தியத் திரையுலகம் என்று அழுத்திச் சொல்லக் காரணம், கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மட்டுமல்லாமல் இதர மொழிகளிலும் அவர் தொடர்ந்து இயங்கி வருவதுதான்.
சீரான ஆரம்பம்!
சென்னை பல்கலைக் கழகத்தில் இலக்கியம் படித்த ஒருவர் படத்தொகுப்பு நுட்பத்தில் ஒரு ட்ரெண்ட்செட்டர் ஆகத் திகழ்கிறார் என்று சொன்னால் எவராலும் நம்ப முடியாது.
இலக்கியத்திற்கும் தொழில்நுட்பத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்றுதான் தோன்றும். ஆனால், ஒரு படைப்புரீதியாகச் சிந்தித்தால் அதுவே ஸ்ரீகர் பிரசாத்தின் பலமாக உள்ளது.
பிரசாத் ஸ்டூடியோவை நிர்மாணித்த, ஐம்பதுகளில் மிகப்பெரிய இயக்குனராகத் திகழ்ந்த எல்.வி.பிரசாத்தின் சகோதரர் அக்கினேனி சஞ்சீவியின் மகன் ஸ்ரீகர்.
தந்தை ஒரு இயக்குனராகவும் படத்தொகுப்பாளராகவும் இருந்த காரணத்தால், கல்லூரி முடித்தபிறகு அவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். தொடர்ச்சியாகத் தெலுங்கு படங்களில் மட்டுமே பணியாற்றினார்.
‘ஸ்வாதி’ என்ற இந்திப் படத்தில் தந்தையுடன் சேர்ந்து இவரது பெயரும் படத்தொகுப்பாளர் பிரிவில் இடம்பெற்றது. இரண்டொரு படங்களுக்குப் பிறகு, இவர் தனியாகப் படத்தொகுப்பைக் கைக்கொள்ளத் தொடங்கிவிட்டார்.
தெலுங்கில் அறிமுகமானாலும் கூட, தொண்ணூறுகளில் இவரது கவனம் மலையாளம் மற்றும் இந்தித் திரையுலகிலேயே இருந்தது. அதற்கேற்ப, அங்கு இவர் பணியாற்றிய படங்கள் வெற்றியையும் கவனிப்பையும் பெற்றன.
மலையாளத்தில் யோதா, காந்தர்வம், நிர்ணயம், மாந்திரீகம், மஸ்மரம் போன்ற படங்களும், தெலுங்கில் சீதாராமையா காரி மனவரலு, பிரசிடெண்ட் காரி பெல்லம், அல்லாரி அல்லுடு, அன்னமய்யா போன்ற படங்களும் குறிப்பிடத்தக்கவை.
தமிழில் வரவேற்பு!
தமிழில் ஸ்ரீகர் பிரசாத் அறிமுகமான முதல் படம், சந்தோஷ் சிவன் இயக்கிய ‘தி டெரரிஸ்ட்’. இந்த படத்திற்காக, அவருக்குத் தேசிய விருதும் கிடைத்தது. அதன் வழியே தமிழ் திரைக்கலைஞர்களின் கவனிப்பையும் பெற்றார்.
அஜித்குமார், ரிச்சா நடித்த ‘உயிரோடு உயிராக’ படம் வெற்றியைச் சுவைக்காவிட்டாலும், அதில் ஸ்ரீகரின் பங்களிப்பு பாராட்டப்பட்டது.
2000ஆவது ஆண்டு வெளியான ‘ரிதம்’, ‘அலைபாயுதே’ படங்களில் அவரது ஸ்டைலிஷான படத்தொகுப்பு ரசிகர்களை ஈர்த்தது.
இந்தப் படங்களின் பாடல்கள் தொகுக்கப்பட்ட விதம் அவ்வளவு பாந்தமாக இருக்கும்.
கண்களைச் சிரமப்படுத்தாமல், அதேநேரம் பிரமிப்பில் திளைக்கச் செய்யும் சாகசத்தை அவற்றில் செய்து காட்டியிருந்தார் ஸ்ரீகர்.
‘அலைபாயுதே’ படத்தில் மாதவன் அறிமுகமாகும் காட்சி அதற்கு ஒரு சோறு பதமாக இருந்தது.
அதைத் தொடர்ந்து கன்னத்தின் முத்தமிட்டால், பைவ் ஸ்டார், ஒக்கடு, ஆயுத எழுத்து, கண்டநாள் முதல், அறிந்தும் அறியாமலும் என்று பல படங்களில் பணியாற்றினார்.
அவற்றின் காட்சியாக்கத்தில் ததும்பிய இளமைத் துள்ளலுக்கு ஸ்ரீகரின் படத்தொகுப்பும் ஒரு காரணம். அதுவே தொடர்ந்து அவருக்குத் தமிழில் வரவேற்பைக் கிடைக்கச் செய்தது.
2001ஆம் ஆண்டு வெளியான ‘தில் சாஹ்தா ஹை’ படமானது நாட்டிலுள்ள அனைத்து மொழி படைப்பாளிகளிடமும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பாடல்கள் மட்டுமல்லாமல் காட்சிகள் தொகுக்கப்பட்டிருந்த விதம் கூட இளைய தலைமுறையினரின் எதிர்பார்ப்புக்கேற்ப அமைந்தது. அதன்பிறகு, அதே பாணியில் பல படங்கள் வெளியாகத் தொடங்கின.
எண்பதுகளின் பிற்பாதியில் மெல்லத் தொடங்கிய ஸ்ரீகரின் படத்தொகுப்பு பணி, தொண்ணூறுகளின் இறுதியில் புலிப்பாய்ச்சல் கண்டது.
அதன்பிறகு, தான் பணியாற்றிய அனைத்து மொழிகளிலும் படங்கள் சீரான இடைவெளியில் படங்கள் வெளிவருமாறு பார்த்துகொண்டது அவரது புத்திசாலித்தனம்.
தொடர்ச்சியான உழைப்பு!
இந்த வகைமையில் தான் பணியாற்றுவார் என்று முத்திரை குத்த முடியாமல் திணறடிப்பது ஸ்ரீகரின் வழக்கம். அவரது படங்களின் பட்டியலைப் பார்த்தால், அவை விதவிதமான வகைமையில் இருந்திருப்பதைக் காண முடியும்.
வெறுமனே அழகுணர்ச்சி மட்டுமல்லாமல் கதை சொல்லப்படும் விதம், திரைக்கதையின் சீர்மை, பாத்திரங்களின் நேர்த்தி ஆகியவற்றைப் பார்வையாளர்களின் இடத்தில் இருந்து நோக்கும் குணம் ஒரு படத்தொகுப்பாளரிடம் மிகுந்திருக்க வேண்டும்.
அதனைத் தக்க வைத்திருப்பதே, இன்றுவரை அவரது ஓட்டத்தைத் தடையற்றதாக வைத்துள்ளது.
நாற்பதாண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகில் இயங்கிவரும் ஸ்ரீகர் பிரசாத் 17 மொழிகளில் பணியாற்றியுள்ளார்.
நிச்சயம் அப்படங்களின் எண்ணிக்கை 700ஐ தாண்டி நிற்கும்.
தொடர்ச்சியாக உழைப்பைக் கொட்டிவரும் ஸ்ரீகர் தனது திரை வாழ்வில் பிரபல இயக்குனர்கள், புதுமுகங்கள், தோல்விகளுக்குப் பின் பட உருவாக்கத்தில் ஈடுபடுபவர்கள் என்று பலரோடு இணைந்து பணியாற்றியிருக்கிறார். அதற்குத் தயாராக இருப்பது திரையுலகில் அரிதான ஒரு விஷயம்.
அவரிடம் கலைப்படங்கள், கமர்ஷியல் படங்கள் என்ற பேதம் ஒருபோதும் இருந்ததில்லை. அதேநேரத்தில், ஒரு படத்தைச் சுவைபடத் திரையில் மிளிரச் செய்வதுதான் அவரது பணியின் நோக்கம்.
அதனைப் புரிந்துகொண்டதாலேயே, அவரிடம் இருந்து வெளிவந்த பல சீடர்கள் இன்று வெற்றிகரமான படத்தொகுப்பாளர்களாக வலம் வருகின்றனர்.
படத்தொகுப்பு என்பது தொழில்நுட்பம் சார்ந்ததாக மட்டுமல்லாமல் படைப்புரீதியாகவும் புத்துணர்ச்சி தருவதாக இருக்க வேண்டும்.
அதற்கு ஒரு சாதாரண ரசிகனின் மனநிலையில் படத்தை ரசிக்கத் தெரிய வேண்டும்.
கூடவே, மிகக்கூர்மையான விமர்சகராகத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் வேண்டாதவற்றைப் புறந்தள்ள வேண்டும். அந்த தெளிவுதான் இளைய தலைமுறை படத்தொகுப்பாளர்களோடு இணைந்து அவரைக் களத்தில் இருத்தியிருக்கிறது.
2024ஆம் ஆண்டில் ‘இந்தியன் 2’, ‘ஆடு ஜீவிதம்’, ‘தேவரா’, ‘பாரோஸ்’ என்று ஸ்ரீகர் பிரசாத் கைவண்ணத்தை ஏந்திப் பல படங்கள் வெளியாக இருக்கின்றன. அவற்றில் பல ‘பான் இந்தியா’ முத்திரையைத் தாங்கப் போகின்றன என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.
அந்த முத்திரையைத் தாங்கி ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதென்பது நிச்சயம் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
இத்தனை ஆண்டு காலமாகப் பல்வேறு மொழிப் படங்களில் பணியாற்றிய ஸ்ரீகரின் அனுபவம், அதனை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என்று நிச்சயம் நம்பலாம்.
அறுபது வயதைப் பூர்த்தி செய்திருக்கும் ஸ்ரீகர் பிரசாத், இதே போன்று என்றும் இனிக்கும் இளமையான மனதுடன் தொடர்ந்து திரையுலகிற்குப் பங்களித்திட நமது வாழ்த்துகள்!
– உதய் பாடகலிங்கம்