ஆகிருதி!

– முனைவர் க. செந்தில்ராஜா.

பாண்டியனுக்குக் கத்திரிக்கோலின் நறுக் நறுக் சப்தம் தான் தேசியகீதம், இளையராஜாவின் இன்னிசை எல்லாமே. தன் கத்தரியை யார் தலையிலாவது முடி வெட்டுவதற்காக வைத்துவிட்டால் பிரபஞ்சமே அந்தத் தலைக்குள் தான் என்பது போல மூழ்கிப் போவான்.

அவன் முடி வெட்டும் போதெல்லாம் செல்வி அவனருகில் உட்கார்ந்து அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டே இருப்பாள்.

முடிவெட்டுகின்ற அல்லது சவரம் செய்கின்ற தன்மைக்கு ஏற்ப அவனின் வாயும் வளையும், அவன் சாய்கிற பக்கம் எல்லாம் செல்வியும் சாய்ந்து கொண்டு அவனைப் பார்ப்பாள்.

இந்தத் சவரத் தொழில் ஒன்றும் பாண்டியனின் பரம்பரைத் தொழில் இல்லை. தேகக்கட்டும் மீசை முறுக்குமான அவனின் ஆகிருதி ஏதோ ஒரு மன்னனின் மறுபிறவியோ என்று தோன்றும் அளவிற்கு இருக்கும்.

அவனுக்கென்று சொந்த நிலமோ, வீடோ இல்லை. சொல்லிக் கொள்ளவோ அல்லது ஏமாற்றவோ உறவினரும் எவருமில்லை செல்வி ஒருவளைத்தவிர.

செல்வி ஒன்றும் பாண்டியன் தாலிகட்டிக் கூட்டி வந்த மனைவி இல்லை. ஆனால் செல்வி இல்லாமல் பாண்டியனையோ இவனில்லாமல் செல்வியையோ யாரும் பார்த்திருக்கவே முடியாது.

கடந்த ஐந்தாண்டுகளில் அப்படி ஒரு பிணைப்பு. செல்வி பாண்டியனோடு வாழத்தொடங்கியதும் பாண்டியன் சவரத் தொழிலாளியா மாறியதும் விதிவசத்தால் என்று தான் சொல்ல வேண்டும்.

பாண்டியன் முதன்முதலாக வீரகனூருக்குள் நுழைந்தபோது ஊருக்குள் ஏதோ திருடன் நுழைந்துவிட்டான் என்றே ஊரார் பயந்தனர். அதிலும் குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் அவனைப் பார்த்ததுமே வீட்டுக்குள் சென்று கதவைப் பட்டெனெ சாத்தி தாழிட்டுக் கொண்டனர்.

கையில் ஒரு பையும், நல்லா பின்னிப் போடுற அளவுக்கு முடியும், கையில கட்டிருக்க கலர் கலரான கயிறும், கழுத்துல பட்டையா ஒரு தாயத்தும், முறுக்கிய மீசையுடன் மேற்சட்டை இல்லாமல் அங்குமிங்கும் திரிந்தால் யாருக்குத்தான் பயம் வராது.

கொஞ்சநாள் அந்த ஊருப்பிள்ளைகளை மிரட்டவும் சோறூட்டவும் பாண்டியன் பெயர்தான் பயன்பட்டது.

பாண்டியன் அந்த ஊருக்கு வந்த இரண்டாவது நாளின் காலைப் பொழுதில் சூரியன் சுருக்கென சுடத்தொடங்கும் நேரத்தில், அந்த ஊர் மந்தவெளியில் உள்ள மூப்பனார் கோயிலின் அருகில் ஓர் அரச மரத் திண்டில் அமர்ந்திருப்பதையே தன் வாழ்நாள் கடமையாகக் கருதும் சில ஆண்கள் வழக்கம் போல் அங்கு உட்கார்ந்து இருந்தனர்.

அந்தக் கூட்டத்திலிருந்த மாயாண்டி, “ஏலே யாருப்பா நீ? எங்கன இருந்து வார?. என்ன அந்தாண்ட இந்தாண்டையுமா ஒருமாதிரியா திரியுர. என்ன வேணும்” என்று பாண்டியனைப் பார்த்து அதட்டலாகக் கேட்டான்.

ஆனால், பாண்டி நிதானமாக, “சொன்னா சோறுபோடப் போறிங்களா?” என்று மாயாண்டியிடம் கேட்டான்.

இந்தக் கேள்வியை அங்கு அமர்ந்திருந்த யாரும் எதிர்பார்க்கவில்லை. மீண்டும் மாயாண்டி சுதாரித்துக் கொண்டு “என்னத் தம்பி… ரொம்ப திமிரா பேசுற. சரி… சோறு தான… போடுறோம். சொல்லு யார் நீ” என்றார்.

“ஆமா, இவரே தண்டச்சோறு. இவரு போடுறாராம் தர்மச்சோறு” என்று நக்கலாக முனியன் சிரித்ததும் மாயாண்டிக்கு முகம் சுருங்கிப் போயிடுச்சு.

முனியா இதெல்லாம் சரியில்ல, வெளியூரான் முன்னாடி பெரிய மயிறு மாறி மானத்த வாங்குற, நீ மட்டும் என்ன யோக்கியமா? நாம கேக்குறங்கற பயமே இல்லாம எம்மாந்திமிரா பதிலுக்குக் கேக்குறான். அவன என்னானு கேட்காம எங்கிட்ட வர கேன……… என்றான் மாயாண்டி.

இவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்கும்போதே பாண்டி அங்கிருந்து நகரத் தொடங்கினார்.

“ஏலே நில்லுடா… உன் பேரையாவது சொல்லிட்டுப் போ” என்று கத்தினான் முனியன்.

“ம்….. பாண்டியன்” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென நடையைக் கட்டினான்.

இதைப் பார்த்துக்கொண்டே இருந்த கேசவன், “எலே இங்க வா” என பாண்டியனை அழைத்தார்.

இவனும் அவரருகில் போனான். ஒத்தக்கல் மேல ஒரு பையனை உட்கார வச்சிட்டு ஒரு முக்காலி மேல கேசவன் உட்கார்ந்துட்டு அவனுக்கு முடி வெட்டிக் கொண்டிருந்தார்.

பக்கத்தில் துருப்பிடித்த பெட்டி ஒன்றிருந்தது. அதனுள் சவரக்கத்தியும் காக்கா வாய் மாதிரி ஒரு கத்தரியும் சூப்பிப் போட்ட பனங்கொட்ட மாதிரி ஒரு சேவிங் பிரஸ்சும் சில பிளேடு துண்டுகளும் கிடந்தன.

பக்கத்தில் மூலை உடைந்த ஒரு கண்ணாடியும் ஒரு டப்பா நிறைய தண்ணீரும் இருந்தது.

பாண்டியன் முடிவே செய்துவிட்டான். நம்பள இவரு முடிவெட்டிக்கத்தான் கூப்பிட்டு இருக்காரு. ஆனால், தன்னை முழுமையாக வெளிப்படுத்த விரும்பாமல் தான் இந்தக் கோலத்தில் இரண்டு மூன்று மாதங்களாய் இருக்கிறோம். இவரிடம் என்னச் சொல்லி சமாளிப்பது என நினைத்தான்.

அந்த நேரத்தில், தம்பி அந்த திண்ண மேல உட்காரு என்றார் கேசவன். பாண்டியன் திரும்பி அந்தத் திண்ணையைப் பார்த்தான். அது சாணி போட்டு நல்லா மொழுகி நாலாப்பக்கமும் சுண்ணாம்பால வெள்ளையா பட்டைப்போட்டு பொலிவோட இருந்தது.

தன்னை மதித்து ஒருவர் தன் திண்ணையில் உட்கார சொல்கிறாரே என்ற மகிழ்ச்சியில் வேறெதுவும் யோசிக்காமல் ஒரே தாவாய் தாவி உட்கார்ந்தான்.

ஏற்கனவே சாணி நிறத்தில் இருந்த வேட்டியிலிருந்து வேண்டுமானால் திண்ணையில் ஒட்டலாமே தவிர, தன் வேட்டியில் சாணி ஒட்டாது என்பது பாண்டியனுக்குத் தெரியும்.

“இந்தாப் புள்ள சோலையம்மா…” என்று அழைத்தவுடன், அழைத்தக் குரலுக்காய் காத்திருந்தவள் போல வெளியில் வந்தாள் சோலையம்மா. கவர்மெண்ட் பொங்கலுக்கு கொடுத்த சேலையைப் பின் கொசவம் வச்சு கடமைக்காக மடிசார் போல சுத்திவிட்டிருந்தாள்!

வெளியில் வந்ததும் தன் கணவனைப் பார்த்து “ஏண்டி” என்று கேட்டாள். கல்யாணம் ஆன நாள் முதல் தன் கணவனை அப்படித்தான் அழைப்பாள். மாறாக கோபத்தில் கூட ஏண்டி என்று கேசவன் சோலையம்மாளை அழைத்ததில்லை.

“ஏம்புள்ள ஊட்ல பழையது பட்டு எதுனா இருக்கா?, இருந்தா கொஞ்சம் ஊத்திக் குடு இந்தப் பயலுக்கு. பாவம் பசியோட அலையுது” என்றார் கேசவன்.

பாண்டியன் கேசவனை உற்றுப் பார்த்தான். ஒரு நிமிடம் கேசவன் முகத்தில் தன் அப்பா தெரிந்தார்.

“ஏம்பா நீ ரொம்ப தொலவுல இருந்து வாரியா?. எந்த ஊரு உனக்கு? என்று கேசவன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, சோலையம்மா ஒரு குண்டானில் பழையசோறும் கொஞ்சம் சின்ன வெங்காயத்தையும் பாண்டியனிடம் நீட்டினாள்.

அதைக் கையில் வாங்கிக் கொண்டான். சோலையம்மா மறு திண்ணையில் பாண்டியன் சொல்வதைக் கேட்கும் தூரத்தில் உட்கார்ந்தாள்.

பாண்டியன் சோற்றைக் கொஞ்சம் மெல்லத் தொடங்கினான். கூடவே தன்னைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான்.

“நான் சிலோன்ல இருந்து வந்தவன். அங்க நடந்த யுத்தத்துல தப்பிச்சு படகுல இந்த நாட்டுக்கு வந்துட்டேன். மூணு மாசமா இப்படித்தான் ஊர் ஊராப் போறேன்” என்றான் கலங்கிய கண்களுடன்.

சரி விடு! உனக்கு என்ன வேல செய்யத் தெரியும் எனக் கேட்டார் கேசவன்.

பாண்டியன், “எங்களது நாட்டுல பெரிய பண்ணையம், மாடு கன்னுன்னு, கூட பொறந்தவங்களோட பெரிய குடும்பம். காலேஜ் வரை படிச்சேன். மாட்டுப்பட்டி பக்கம் கூடப் போனதில்ல.

ஒரு முறை, நான் நடந்து போறப்ப மாட்டுவால் சாணியோட எம்மேல அடிச்சதுக்கே நான் கோவத்துல பக்கத்துல கிடந்த மண்வெட்டிய எடுத்து மாட்டு வால வெட்டிட்டேன்.

அப்படி வாழ்ந்த நான், அங்க நடந்த யுத்தத்தால குடும்பமே சிதறி எல்லாத்தையும் இழந்து, இப்படி மாத்து துணி கூட இல்லாத பரதேசியா திரியுறேன்”.

நான் சிலோன்ல இருந்து வந்தேன்னு சொன்னா யாரும் வேல தரமாட்டேங்குறாங்க. ஒருவேளை சோத்துக்கே இப்படி கையேந்தி நிற்கிற நிலைமைக்கு வந்துட்டேன். என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, பாண்டியனின் கண்ணீர் சோற்றுக் குண்டானுள்ளே விழுந்து நீராகரத்துடன் கலந்தது.

கேசவன் கொஞ்ச நேரம் முடிவெட்றத மறந்து அவனையே வெறிச்சி பார்த்துட்டே இருந்தாரு. அவர் கண் கலங்கி கண்ணீர் சிறுவனின் வெட்டிய முடியில் விழுந்தது.

தாத்தா சீக்கிரம் வெட்டுங்க. எங்கம்மா லேட்டாய்டுச்சின்னா திட்டும் என்றதுக்குப் பின் சுயநினைவு வந்தவராய் மீண்டும் வெட்டத் தொடங்கினார்.

குனிந்தபடி அந்தச் சிறுவன் பாண்டியன பார்த்தான்.

சோலையம்மா தன் முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள். அந்த முந்தானையில் அச்சாகிருந்த பூக்கள் எல்லாம் இவள் கண்ணீரால் நனைந்திருந்தது.

வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி “தம்பி, இனிமே நீ எங்கவும் போக வேணாம். இவருக்கும் வயசாய்டுச்சு இங்கையே இரு. இவருக்கும் ஒத்தாசையா இருக்கும்” என்றாள்.

பாண்டியனுக்கு மிக ஆறுதலாய் சரியெனப்பட்டது ஏனெனில் பட்டதுலாம் போதும் என்கிறதால் சரியயெனத் தலையசைத்தான்.

புளியம்பழம் உலுக்க மரம் ஏறிய கேசவன் தவறி விழுந்து தவறிப்போய் இரண்டாண்டுகள் ஆகிவிட்டது.

கேசவனுக்குப் பின்னர் அவர் தொழிலைப் பாண்டியன் செய்யத் தொடங்கினான்.

கேசவன் இருக்கும்போதே தொழிலை நன்கு கற்றுக் கொண்டிருந்தான் பாண்டியன்.

இப்போது இந்தத் தொழில்தான் பாண்டியனுக்கு ஜீவனம் நடத்த வழி வகுத்தது. மூப்பனார் கோயில் பக்கத்திலிருந்த அரச மரத்தடியில் தான், அவன் தொழிலிடம்.

கேசவனிடம் முடி வெட்டிக்கொண்டவர்கள் பாண்டியனிடமும் வந்தார்கள். ஆனால் இளந்தலைமுறை மாடலா வெட்டிக் கொள்ளவும் பாண்டியனிடம் உட்கார சேர் இல்லை என்பதாலும் பஸ்டாண்டில் இருக்கும் சலூன் கடைக்குச் சென்றனர்.

பாண்டியனுக்கு வரும் வேலை அவனுக்கு வயிற்ற கழுவ போதுமானதாக இருந்தது. முடி வெட்டவோ, சவரம் செய்யவோ இவ்வளவு கூலி என அவர் நிர்ணயிக்கவில்லை.

வருபவர்கள் தருவதைப் பார்க்கக்கூட மாட்டான். வாங்கி சவர டப்பாவில் போட்டு விடுவான்.

அநாவசியமாக யாரிடமும் எதுவும் பேச மாட்டான். இது அவன் ஆசானிடம் இருந்து கற்றுக் கொண்டது. அதிகம் பேசினால் தரக்காசக் கூட பேசியே கழிச்சுட்டு போயிடுவானுங்க இந்த ஊரானவ. பீயில அரிசி பொறுக்கி பெருமாலுக்கு பொங்க வைக்கிறவனுங்க என்பார்.

ஒரு நாளைக்கு பாண்டியன் பேசும் வார்த்தைகளை எண்ணிக் கணக்கெடுக்கலாம். கொடுக்கிற பணத்தை வைச்சு அரச மரத்துக்கு பக்கத்துல வீட்டிலேயே டிபன் கடை வைத்திருக்கும் அன்னக்கிளி கடையில தான் மூனு வேளை உணவு.

கேசவன் இறந்து போன பின்னாடி சோலையம்மாளுக்கு அவளோட மூணு பசங்களும் ஒழுங்கா சோறு போடுறது இல்ல.

பாண்டியன் சோலையம்மாவிடம் காசு கொடுத்து, நீயே பொங்கித் தின்னு மா என்று சொல்லியபோது, அதுலாம் சரியா இருக்காது ராசா. வேணாம். மூனு புள்ளய பெத்துட்டு உன் கையால வாங்கித்துன்னா ஊரு கேவலமா பேசும்.

நீயே வரக்காசுல கடையில் தின்னுட்டு மரத்தடியில படுத்து கிடக்க. நீ உம்பொழப்ப பாருப்பா என்றாள் கண்ணீருடன்.

பாண்டியன் குற்ற உணர்வுடன் அங்கிருந்து நகர்ந்தான். அதுக்கப்புறம் சோலையம்மா வீட்டுப் பக்கம் பாண்டியன் போறதே இல்லை.

செல்வி மனநலம் பாதிக்கப்பட்டவள், எடுப்பான பல் என பார்க்கவே விகாரமாக இருப்பாள். சொந்த ஊர் எதுன்னு தெரியல. ஆனால், சிலர் தலைவாசல் பக்கம்னு சொல்லிக்கிட்டாங்க.

அவளுக்குன்னு யாருமில்லை என்பதால் அனாதையாக வீரகனூருக்கு வந்தவளுக்கு அன்னக்கிளி தான் அடைக்கலம் தந்தாள்.

கடைப் பாத்திரங்களைக் கழுவி போடுறது அன்னக்கிளி புள்ளங்கள பார்த்துகிறது பால் வாங்கப் போறதுன்னு சொல்ற வேலைய செஞ்சிட்டு அங்கவே சாப்பிட்டுவிட்டுக் கிடந்தாள்.

கடைக்குச் சாப்பிட வருபவர்கள் செல்வியிடம் நீ பாண்டியன் பொண்டாட்டி தானே என்று கேட்ட உடனே செல்விக்கு வரும் அந்த வெட்கத்தைப் பார்க்கவே திரும்பத் திரும்பக் கேட்பார்கள். அவளும் கேட்கும்போதெல்லாம் வெட்கப்படுவாள்.

இவளிடம் இப்படிக் கேட்பது பாண்டியனுக்குத் தெரியாது. தெரிந்தால் ஒரு கிறுக்கியோட வச்சுப் பேசுறிங்கன்னு சண்டைக்கு வருவான்னு பயம்.

பொதுவா அவன் உடம்பைப் பார்த்து ஊரார் எல்லோருக்கும் ஒரு பயம் இருந்து கொண்டே தான் இருந்தது. எளியோர்களுக்குப் பலம் தங்கள் உடலும் தோற்றமும் தானே. அதற்காகவே தன் தோற்றத்தைப் பாண்டியன் மாற்றிக் கொள்ளவே இல்லை.

ஒரு நாள் அன்னக்கிளி அக்கா கடைக்கு பாண்டியன் சாப்பிட வந்தபோது சற்று பயத்துடனும் தயக்கத்துடனும் பாண்டியன் கிட்ட நேராவே கேட்டுருச்சு.

“ஏம்பாண்டி… தனியா இப்படி எவ்வளோ நாள் தான் காலத்தை ஓட்ட போற. நம்ம செல்வி பாவம் அவளும் தொனையில்லாம தான கெடக்குறா. அவள நீ கட்டிக்கிட்டா என்ன?” என்று கேட்டவுடன், பாண்டியன் கோவமா சாப்பிட்ட இலையை இழுத்து விட்டு,

“ஏக்கா… என் நிலமையைப் பார்த்துதான நீ இப்படி கேக்குற. உந்தம்பினா அவனுக்குக் கட்டி வைப்பியா என்று கேட்டுட்டே எழுந்து வெளியில் கிளம்பினான்.

அன்னக்கிளி “ஏத்தம்பி உன் விருப்பந்தா… அதுக்கு ஏன் சாப்பிடாம போற. வாப்பா சாப்பிடு” என்றாள். பாண்டியன் சாப்பிடவில்லை. ஆனால் அங்க இருந்த ஒரு சேர்ல உட்கார்ந்தான்.

“பாவம்பா. அவ உலகம் தெரியாதவ. உனக்கும் கடைசி காலத்துல ஒரு துணை வேணும்ல பாண்டி” என்றாள் அன்னக்கிளி. பதில் ஏதும் சொல்லாமல் விருட்டுன்னு எழுந்து கிளம்பி போய் விட்டான்.

இரண்டு நாள் அன்னக்கிளி கடைப்பக்கமே பாண்டியன் போகவே இல்லை. அன்னக்கிளிக்கும் குற்ற உணர்வாவே இருந்த்தது.

இரண்டு நாளுக்குப் பின் சென்று, சரிக்கா அந்தப்புள்ளைய அனுப்புங்க பாத்துக்குறேன் என்று அன்னக்கிளியிடம் சொன்னான். அந்த அந்திப் பொழுதில் அவர்களுக்குள்ளான யுகசந்தித் தொடங்கியது.

அன்றைய நாள் தொடங்கி இன்று வரை அவர்கள் இணை பிரிவதில்லை. இருந்த அரசமரம் அவர்களின் குடும்ப வாழ்விற்குப் பாதுகாப்பானதாக இல்லையென அந்த ஊரில் பாழடைந்த காவலர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்தனர்.

அங்கே ஒரு பெரிய வேப்பமரம் அதன் கீழே ஒரு கல்லில் உட்கார வைத்து எல்லோருக்கும் சவரத் தொழில் செய்வான் பாண்டியன். கிடைத்த காசை எடுத்துக் கொண்டு இருவரும் கடைக்கு போய் தேவையானதை வாங்கி வந்து சமைத்துச் சாப்பிடுவாங்க.

ரோட்டில் செல்லும் போதெல்லாம் எல்லாரையும் பார்த்து ஏய் என்று அழைத்துச் சிரிப்பாள். ஆனால் பாண்டியன் கோவமோ, எந்தச் சலனமோ இல்லாமல் அமைதியாய் செல்வி வா புள்ள என்பான்.

அவர்களிடம் ரேசன் கார்டு, ஆதார் கார்டு என எதுவும் இல்லை. இவர்கள் சோற்றை நம்பி ஐந்தாறு தெரு நாய்களும் உயிர் வாழ்கின்றன. அவைகளுக்கு இவர்களும் இவர்களுக்கு அவைகளும் தான் இரவுகளில் துணை.

சமையல் வேலை பெரும்பான்மை இரவில் தான். அதுவும் பாண்டியன் தான் செய்வான். அன்று அந்த இரவில் கல்லடுப்பில் குண்டானை வைத்து பாண்டியன் சமைக்கத் தொடங்கினான்.

குண்டானுக்கு மேல் நெருப்பின் சுவாலை படர்ந்தது. பாண்டியனுக்கு யுத்தத்தில் செல்லடித்து தன் வீடு எரிந்தது கண் முன் வந்தது. செல்வி பாண்டியனின் ஆகிருதியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு அவன் ஒரு மன்னன் போல் காட்சி தந்தான். குண்டானில் இருந்தச் சோறு பொங்கி நாலாப்புறமும் இறங்கி சுவாலை அடங்கியது.

க. செந்தில்ராஜா
You might also like