தண்டவாளத்தை கடந்த தொழிலாளர்கள்: பதறிய எம்.ஜி.ஆர்!

சென்னை கடற்கரை மற்றும் எழும்பூரில் இருந்து தி.நகர், தாம்பரம் வழியாக செல்லும் ரயில்கள் கோடம்பாக்கத்தை கடந்து செல்ல வேண்டும்.

இப்போது அந்த பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. 1970 களில் அங்கே பாலம் கிடையாது.

தி.நகர், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை போன்ற பகுதிகளில் இருந்து வடபழனிக்கு வேலை நிமித்தமாக செல்வோர் அங்கு இருந்த ரயில்வே கேட்டை கடந்தே போக வேண்டும்.

அப்போது இந்த சாலையை பெரும்பாலும், நடிகர்கள், டைரக்டர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட சினிமாக்காரர்களே பயன்படுத்தி வந்தனர்.

மின்சார ரயில்களோடு, நெல்லை, திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் ரயில்கள் கடப்பதற்கு வசதியாக ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படும்.

ஸ்டூடியோவுக்கு செல்பவர்களும், ஸ்டூடியோவில் வேலை முடிந்து வருவோரும் ரயில்வே கேட் மூடப்படும் நேரத்தை தெரிந்து வைத்துக்கொண்டு அதற்கேற்ற மாதிரி குறிப்பிட்ட நேரங்களில் அந்த பாதையில் வருவார்கள்.

பல நேரங்களில் ரயில்களின் தாமதத்தால், ரயில்வே கேட் வெகு நேரம் மூடப்பட்டு விடும். காரில் வருவோர் வேறு வழியின்றி, ரயில் கேட் திறப்பதற்காக காத்திருப்பார்கள்.

ஆனால் சினிமா ஸ்டூடியோக்களில் பணி புரியும் தொழிலாளர்கள், தாங்கள் ஓட்டி வரும் சைக்கிள்களை, ரயில்வே கேட்டின் பக்கவாட்டில் இருக்கும் சிறிய இடுக்கில் நுழைத்து தண்டவாளத்தை கடந்து மறுபக்கம் செல்வது வழக்கம். இது -உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சாகச முயற்சி.

அபாயத்தை பொருட்படுத்தாமல், அவசரமாக சைக்கிளில் செல்லும் தொழிலாளர்களை பலமுறை எம்.ஜி.ஆர்.பார்த்து பதறிப்போய் இருக்கிறார்.

ஒருமுறை இவ்வாறு சைக்கிளில் ரயில்வே கேட்டை கடந்த சக தொழிலாளர்களை , வழி மறித்த புரட்சித்தலைவர் ’இனிமேல் இப்படி செய்ய வேண்டாம்’ என உரிமையுடன் கடிந்து கொண்டு அறிவுரையும் வழங்கினார்.

என்ன சொன்னார், எம்.ஜி.ஆர்?

“இப்படி எல்லாம் இனி எக்காரணத்தை கொண்டும், ரயில்வே கேட் சாத்தியிருக்கும் சமயங்களில், நீங்கள் தண்டவாளத்தை கடக்கக்கூடாது. உங்களுக்கு உங்கள் பணி முக்கியம் என்றால், உங்கள் குடும்பங்களுக்கு நீங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை மறக்காதீர்கள்.

கேட் மூடி இருக்கும்போது எனது காருக்குள் நான் காத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறேன்.

ஆனால் என் படத்தில் பணிபுரியும் நீங்கள் எல்லாம் என் கண் முன்னால் சைக்கிளை தள்ளிக்கொண்டு தண்டவாளத்தைக் கடப்பதைப் பார்க்கிறேன்.
அப்போதெல்லாம் என் மனம் பதறுகிறது. ஒரு அண்ணனாக மீண்டும் சொல்கிறேன். இனிமேல் இப்படி நடந்து கொள்ளாதீர்கள்’’ என கண்டிப்புடனும், நேசத்துடனும் சொல்லி விட்டு ஸ்டூடியோவுக்கு காரில் கிளம்பி போனார் எம்.ஜி.ஆர்.

அவரது அறிவுறுத்தலுக்குப் பிறகு தொழிலாளர்கள் சைக்கிளில் ரயில்வே கேட்டை கடந்து செல்வதில்லை.

இங்கே இன்னொரு தகவலையும் சொல்லியாக வேண்டும்,
ரயில்வே கேட் நெடுநேரம் மூடப்பட்டிருப்பது நடிகர்கள், தொழிலாளர்களுக்கு அவஸ்தையான விஷயம்.

ஆனால் ரசிகர்களுக்கு அது கொண்டாட்டமான தருணங்கள்.

ஏன்?

கார்களில் காத்திருக்கும் தங்கள் அபிமான நடிகர்களை, கிட்டத்தில் பார்த்து மகிழ்வார்கள்.

சில சமயங்களில் அவர்களுடன், ரசிகர்கள் பேசுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

– பாப்பாங்குளம் பாரதி.

You might also like