பொறாமையூட்டும் பறவைகளின் வாழ்வு!

’அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்’ என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம், அதுவல்லவோ சுதந்திரமான வாழ்க்கை என்ற எண்ணம் தானாக மனதில் மேலெழும்.

‘அதோ அந்த அலைகள் போல ஆட வேண்டும்’ எனும் அப்பாடலின் அடுத்த வரியின் வாயிலாக அப்படியொரு உணர்வை ஊட்டியிருப்பார் கவிஞர் கண்ணதாசன்.

பறவைகளின் ஒவ்வொரு அசைவும் தன்னியல்பு கொண்டது என்பதை அது நமக்கு உணர்த்தும். அது பிடிபட்டபிறகு வாழ்வின் நிகழ்காலச் சங்கடங்கள் கண்ணில் நிழலாடும்போது, பறவைகள் மீது பொறாமை மிகும்.

அது போன்ற பாடல்களைக் கேட்பது அரிதாகிவிட்டதைப் போலவே, இன்று பறவைகளைக் கண்ணாரக் காண்பதும் குறைந்து வருகிறது. நிமிர்ந்து வானை வெறிப்பதே இன்று ஒரு வெற்று வேலை என்றாகிவிட்டது.

ஒருநாளில் எத்தனை முறை நாம் மேல்நோக்கி நமது பார்வைக் கோணங்களைத் திருப்புகிறோம் என்பது பெருங்கேள்வியாகத் தொற்றி நிற்கிறது.

இத்தகைய சூழலில், பறவைகள் குறித்துச் சிந்திப்பதற்கான அவகாசத்தை வழங்குகிறது ‘தேசியப் பறவைகள் தினம்’. இது, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 5ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.

பறவைகளின் வாழ்வு!

அதிகாலை ஆறு மணியளவில் வீட்டு வாசலில் வந்து நின்றுகொண்டு அண்ணாந்து பார்க்கும்போது, கண்ணெதிரே பறவைகள் கூட்டம் கூட்டமாகக் கடந்து செல்வது ஆனந்தத்தை அள்ளித்தரும்.

காட்சிரீதியாக மட்டுமல்ல, அவை எழுப்பும் சத்தமும் கூட ‘ரீங்காரமாக’த் தெரியும்.

பசுமை அடர்ந்த சூழல் அதற்குத் தேவை என்றில்லை. கான்கிரீட் கட்டடங்களுக்கு நடுவே ஆங்காங்கே முளைத்து நிற்கும் தாவரங்களைத் தேடியும் அப்பறவைகள் திரியும். அந்த வேளைகள் உண்மையிலேயே ‘ராஜ மகிழ்ச்சியை’ வழங்கும்.

கைக்கெட்டும் தூரத்தில் அப்பறவைகள் நிற்பதும் கொக்கரிப்பதும் கூடுதல் உற்சாகத்தைத் தரும். பெயர் தெரியாதபோதும், பறக்கும் இயல்பு மட்டுமே அப்பறவைகளை ரசிக்கத் தூண்டுதலாக இருக்கும்.

எப்படிப் பெரும்பாலான மனிதர்களுக்கு இயற்கையையோ அல்லது அதன் காட்சித் தோற்றத்தையே ரசிக்க விருப்பம் அதிகமோ, அது போலவே அவ்வியற்கையின் ஒருபகுதியான பறவைகளை ரசிக்கும் பாங்கும் இருந்து வருகிறது.

’நம்மால் பறக்க இயலாது’ என்ற உண்மையை மறக்கடித்து, அப்படியொரு உணர்வுக்கு நாமே ஆளான உணர்வைப் பறவைகள் ஊட்டுவதும் கூட அதற்கொரு காரணமாக இருக்கலாம்.

அதுவே, எந்தவொரு பறவையைப் பார்க்கும்போதும், அதன் தினசரி வாழ்வின் ஒவ்வொரு துளியையும் நெருங்கிப் பார்க்கும் வாய்ப்பைத் தேடச் செய்யும்.

ஏதாவது ஒரு தருணத்தில் அப்படித் தென்படும் காணொளிகளைக் கண் கொட்டாமல் பார்க்க வைக்கும்.

அந்த வகையில், பறவைகளின் வாழ்வும் அவற்றின் ஒவ்வொரு அசைவும் நமக்கு எப்போதும் ஆச்சர்யம் தரும்.

இயற்கையைச் செழிக்கச் செய்யும்!

ஒரு மரத்தின் மீது இன்னொரு மரம் முளைத்திருப்பதைக் காணும்போதோ அல்லது இரண்டு மரங்கள் ஒன்றோடொன்று பின்னியவாறு இருப்பதைப் பார்க்கும்போதோ, மனதுக்குள் ஆச்சர்யம் சிகரம் தொடும்.

உயர்ந்த கட்டடத்தின் உச்சாணிக் கொம்பில் பச்சை துளிர்ப்பதைப் பார்த்தாலும், அது நிகழும். அவை எப்படிச் சாத்தியமாகின? அதற்குக் காரணம் பறவைகள் தான்.

நம்முடனே மீதமிருக்கும் காடுகளில் பெரும்பாலான மரங்கள் பறவைகள் இடும் எச்சத்தினால் விளைந்தவைதான்.

ஒருகாலத்தில் பறவைகள் கூடு கட்டிய மரங்களை வெட்ட வேண்டாம் என்றெண்ணுவது வழக்கத்தில் இருந்தது. அதனால், கூடுகளை உறைவிடங்களாகக் கொண்ட பறவைகளும் அதிகமிருந்தன. இன்று, இரண்டுமே வழக்கத்தில் இல்லை.

பருவகால மாறுபாட்டின்போது நிகழும் பறவைகளின் இடப்பெயர்ச்சி பற்றித் தெரியவந்தபோது, மனிதனுக்கு வெவ்வேறு பகுதிகளில் சென்று குடியேறுவதிலும் புதிய இடங்களைக் கைக்கொள்வதிலும் அச்சம் அகன்றது.

காலம், சூழல் மற்றும் எதிர்காலப் பேரிடர்கள் குறித்து முன்னறிப்பவையாகவும் பறவைகளே இருந்து வந்திருக்கின்றன.

இப்படி இயற்கையைச் செழிப்பாக்கப் பறவைகள் வாழ்வு எவ்வாறெல்லாம் உதவுகிறது என்று சிந்தித்தால் பல தகவல்கள் தெரிய வரும்.  

அருகும் எண்ணிக்கை!

செல்போன் வருகையால் சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டதாக ஒரு புள்ளிவிவரம் சில ஆண்டுகளாக நம்மிடையே உலவுகிறது.

சுள்ளெனச் சுடும் வெயில் காலம் தவிர, மற்றனைத்து காலத்திலும் நாள் முழுவதிலும் நம்முடனே திரியும் பறவைகள், இன்று நேரம் வகுத்து வானில் உலா வருகின்றன.

காடுகள் அழிப்பும் கட்டடங்களின் பெருக்கமும் பறவைகளைத் துரத்தியடித்தனவா அல்லது முற்றிலுமாகச் சிதைத்தனவா என்று தெரியவில்லை.

புதிய சாலைகள் கட்டுமானத்தின்போது பெருமரங்களைப் பிடுங்கி வேறொரு இடத்தில் நடாமல், அப்படியே காயவிட்டுக் கட்டைகள் ஆக்குவதும் நிகழ்கிறது.

தலைவலிக்கு மரப்பட்டைகளை தேய்த்து ‘பத்து’ போட்ட காலம் மலையேறி, ஆடம்பரத் தேவைகளுக்காகவும் பேராசைகளுக்காகவும் மரங்கள் சூறையாடப்படுகின்றன. அவற்றை நம்பியிருக்கும் பறவைகள் கொடூரமாக வேட்டையாடப்படுகின்றன.

இறைச்சிக்காக மட்டுமல்லாமல், இன்னபிற தேவைகளுக்காகவும் அவ்வேட்டைகள் நிகழ்த்தப்படுகின்றன. அதன் பின்னிருக்கும் காரணங்கள் நிச்சயம் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கானவை அல்ல.

சதுப்புநிலக் காடுகளை ஆக்கிரமித்துக் கட்டடங்களைக் குவிப்பதும், வனங்களின் அடர்த்தியை நீர்க்கச் செய்வதும், தொடர்ந்து பறவைகளின் இருப்பைக் கேள்விக்குரியாக்கி வருகின்றன.

இதனால், இயற்கைப் பேரிடர்களின்போது இன்னபிற உயிரினங்களைப் போல அவையும் பெரும்பாதிப்புக்குள்ளாகின்றன.

விளைநிலங்கள் ஆக்குவதற்காகச் சிதைக்கப்படும் வனங்களையும் கூட இந்தப் பட்டியலில் சேர்க்கலாம்; புதிய ஆலைகள் உட்பட வளர்ச்சி என்ற பெயரில் நிகழ்த்தப்படும் சிதைவு நடவடிக்கைகள் பலவற்றை இதில் இணைக்க முடியும்.

இப்படிப் பறவைகளின் எண்ணிக்கை அருகுவதற்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

சுற்றுப்புறச் சூழல் சீர்கேடுகளின் பெருக்கத்தாலும், மனிதர்களின் அக்கறையின்மையாலும் அதிகாலை ‘அலாரம்’ போல நம்மை எழுப்பும் பறவைகளின் கூச்சலை மெல்ல இழந்து வருகிறோம்.

இனிமேலாவது விழித்தெழலாம்!

நகரமோ, கிராமமோ, எங்கும் தண்ணீர் பஞ்சம் ஓராண்டின் சில நாட்களில் இருந்தே தீரும். அந்நாட்களில் பறவைகள் அருந்தக் கொஞ்சமாக ஒரு பாத்திரத்தில் நீரும், அருகே கொஞ்சம் சோறும் வைக்கலாம்.

பாலீத்தின் பயன்பாட்டைக் குறைத்து குப்பைத்தொட்டிகளில் மட்கும் குப்பைகளைக் கொட்டினால், அவையே தமக்கானதைத் தேடிக் கொள்ளும்.

எறும்புகளைக் கொல்வதற்கான மருந்து முதல் பூச்சிக்கொல்லிகள் வரை பலவற்றைப் பயன்படுத்துவதை மெதுவாகக் குறைக்கலாம்.

ஏனென்றால், சிறு உயிரினங்கள் தான் பறவைகள் போன்றவற்றின் முதன்மை உணவாக இருந்து வருகின்றன. அந்த உணவுச்சங்கிலியை நாம் கோடாரியால் துண்டிக்க வேண்டாம்.

முக்கியமாக, பறவைகளைக் கூண்டுக்குள் அடைக்கும் ரசனை அறவே வேண்டாம்.

சேட்டைத்தனம் செய்யும் குழந்தைகளையே அம்மிக்குழவியிலும் கதவு தாழ்ப்பாளிலும் கட்டிப்போடும் வழக்கம் இன்றில்லை;

ஆனால் நாய்களையும் பூனைகளையும் போலப் பறவைகளை வளர்க்கும் ஆசையுடன் கூண்டுகளை வாங்கத் துடிக்கிறோம்.

என்னதான் நீங்கள் ‘பனீர் டிகா’ கொடுத்தாலும், கம்பிகளுக்குள் அடைபட்டுக் கொண்டு சாப்பிடும் அதற்குத்தான் அந்த ருசியில் மரணத்தின் வாசனை படர்ந்திருப்பது தெரியும்.

’கேஜ் த்ரில்லர்’ எனும் வகைமை திரைப்படங்கள் பார்ப்பதையே அருவெருப்பாகக் கருதும் பலர், நிஜ வாழ்வில் சக உயிரினத்தை அப்படியொரு நிலைக்கு ஆளாக்குவதை என்னவென்று சொல்வது?

பறவைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

கூட்டுழைப்பில் தொடங்கித் தகுதியான வாழிடம் நோக்கி இடம்பெயர்தல், சரியான சூழலைக் கண்டறிதல், அதனைத் தனக்கேற்றாற்போல மாற்றிக்கொள்ளுதல், பொருத்தமற்றுப்போகும்போது மீண்டும் இடம்பெயரத் தயாராகுதல் என்று அவற்றின் வாழ்வு மொத்தமுமே நமக்கு ஒரு பாடம்.

இன்னும் சுறுசுறுப்பு, திட்டமிட்ட வேலை, முறையான ஓய்வு, கலப்பு இல்லா அன்பு என்று அவற்றின் இயல்பு பற்றிப் பேசுவதும் கூடப் பொருத்தமாகத்தான் இருக்கும்.

ஒரு நாளை மீண்டுமொருமுறை அப்படியே பிரதி எடுக்க முடியாத அளவுக்கு மிக வேகமான, கொஞ்சம்கூட மாற்றியமைத்துக்கொள்ள இயலாத வாழ்வொன்றை வாழ்ந்து வருகிறோம்.

இந்தச் சூழலில் பறவைகள் குறித்த எண்ணங்கள் சிறிய அளவிலாவது நம்மை ஆசுவாசப்படுத்தும். அவற்றோடு இணைகோட்டில் பயணிப்பது இன்னும் தெம்பைக் கொடுக்கும்.

பறவைகள் போன்று ஒவ்வொரு உயிரினங்களும் அதனதன் இயல்பில் வாழ்வதற்கான சூழலைக் கட்டமைக்கையில், நமக்கான எதிர்காலம் தானாகப் பிரகாசமாகும்.

இனிமேலாவது விழித்தெழுந்து, அப்படியொரு கட்டமைப்பை நோக்கிப் பயணிப்போம்.

இலக்கை வகுத்து, அதனை அடைந்தபிறகு கொஞ்சமாகப் பறவைகளின் வாழ்வு குறித்து பொறாமைப்படுவோம்.

அவற்றைப் போலவே, தன்னியல்பாகப் பூரண சுதந்திரத்துடன் வாழ்வதற்கான வழிமுறைகளைக் கண்டடைவோம்.

அதுவரை, அதனைச் சாத்தியப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உளமாரச் செயல்படுத்துவோம்!

– உதய் பாடகலிங்கம்

You might also like