கபிலன் வைரமுத்துவுக்குக் கிடைத்த ஓவியப் பரிசு!

எழுத்தாளரும் திரைப்படப் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்து மீது அன்பு கொண்ட கோவையைச் சேர்ந்த கவிதை ஆய்வாளர் நித்யா, ஓர் அழகிய ஓவியத்தை அவருக்குப் பரிசாக வழங்கியுள்ளார்.

சங்கப் புலவர் கபிலரும், கபிலன் வைரமுத்துவும் காலாற நடந்தபடி உரையாடுவது போன்ற காட்சியை மிகப்பெரிய கேன்வாஸில் வரைந்திருக்கிறார் ஓவியர் செல்வகுமார். கபிலர் கையில் கபிலன் எழுதிய படைப்புகள் இருக்கின்றன. மேலும், அவரது பாடல் வரிகளையும் காட்சியாகப் பதிவு செய்துள்ளார்கள். ஒரு பரிசுக்குள் இத்தனை விஷயங்களா என்ற கேள்வியுடன் பேசினோம்.

நம்மிடம் பேசிய கபிலன் வைரமுத்து, “கோவையைச் சேர்ந்தவர் நித்யா. அவர் ஒரு கவிதை ரசிகை, கவிதை திறனாய்வாளர். கவிதைகள், பாடல்களைக் கேட்டு அவர்களது கருத்துக்களை அனுப்புவார். அது மிகவும் நேர்த்தியாக இருக்கும். என்னைப் பார்க்கவேண்டும் என்று அவர் விரும்பினார்.

கொரோனா காலகட்டத்தில் சந்திக்கமுடியவில்லை. கடந்த வாரத்தில் ஒரு நாள் சென்னை வந்தார். பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென இரண்டு பேர் பெரிய ஓவியத்தைத் தூக்கிவந்தார்கள். என்னவென்று கேட்டால், உங்களுக்குச் சிறு பரிசு என்று புன்னகைத்தார்கள். எனக்கொன்றும் புரியவில்லை.

ஓவியத்தைப் பார்த்தால் அதில் கபிலருடன் நானும் நின்று கொண்டிருந்தேன். அந்த காட்சி எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. ஓர் ஆண்டாக இந்த ஓவியத்தைச் செய்திருக்கிறார்கள். ஓவியர் செல்வகுமார்தான் இந்த ஓவியத்தை வரைந்தவர். அதற்கான உள்ளீடுகளை நித்யா தந்திருக்கிறார்.

அதில் கபிலரின் குடில், கபிலரின் கையில் என் படைப்புகள், என் கையில் அவரது ஓலைச் சுவடிகள், நான் எழுதிய பாடல் வரிகள், நாவல்களில் நான் பயன்படுத்திய உவமைகள் எல்லாம் காட்சிகளாக வரையப்பட்டிருந்தன.

தாவுகின்ற புள்ளிமானின் மேலே, பாயுகின்ற வெயில் கீற்றுபோலே என்ற பாடல் வரிகளுக்காக மானை வரைந்து, அதன் மேல் வெயில் படுவது மாதிரி செய்திருந்தார்கள். இது ஒரு படைப்பாளருக்கு நல்ல பரிசு என்று பெருமிதத்துடன் சொல்லலாம். நம்முடைய படைப்புகளை வைத்து, அவர்களது கற்பனையில் பெரும் ஓவியமாகச் செய்திருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.

– எஸ். சங்கமி

You might also like