‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழாத் துளிகள்!

2024, சனவரி முதல் தேதி அன்று சென்னை காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா அரங்கு நிறைந்த கூட்டத்துடன் நடந்தது.

விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம், கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டது விழாவின் சிறப்பம்சம்.

விழாவில் வெளியிடப்பட்ட ‘மகா கவிதை’ நூலின் அட்டைப் படத்தை வடிவமைத்தவர் வைரமுத்துவின் மகனான மதன் கார்க்கி.

திரைப்படப் பாடலாசிரியரான இவர் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் உருவாக்கிய ஓவியம் தான் நூலில் அட்டைப் படமாகியிருக்கிறது.

முதலமைச்சர் கலந்து கொண்டதால் துரைமுருகன் உள்ளிட்ட சீனியர் அமைச்சர்களும் முன்வரிசையில் ஆஜராகி இருந்தனர். அரசியல் மற்றும் திரைத்துறை சார்ந்த முக்கியப் புள்ளிகளும் இதில் அடக்கம்.

விழாவில் முதலமைச்சர் பேசியதை நேரடியாக ஒளிபரப்பியது கலைஞர் தொலைக்காட்சி.

புத்தகத்தை அவருக்கே உரித்தான விஞ்ஞானப் பார்வையுடன் படித்து, ரசித்து மிக விரிவாகப் பேசிய மயில்சாமி அண்ணாதுரை அதே புத்தகத்தில் தனக்குத் தோன்றிய சில திருத்தங்களையும் வெளிபடுத்தத் தயங்கவில்லை.

அடுத்து பேசிய கலைஞானி கமல்ஹாசன், வைரமுத்துவுக்கும் தனக்கும் 40 ஆண்டுகளுக்கும்  மேலான நீடித்து வரும் நட்பைப் பற்றி வியந்து பேசினார்.

“தான் முதன்முதலில் சந்தித்தபோது எம்மாதிரியான உடல் தோரணையுடன் இருந்ததாரோ அதே மாதிரிதான் இன்றும் இருக்கிறார்.

திரைப்படத்துறையில் எங்களுடைய விருப்பத்திற்காக திரைப்படப் பாடல்கள் எழுதியவர். இப்போது தன்னுடன் சொந்த விருப்பத்திற்காக ‘மகா கவிதை’ நூலை எழுதியிருக்கிறார்” என்று பேசியவர், நூலிலிருந்து சில முக்கியமான வரிகளை வாசித்தும் காட்டினார்.

முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரம் பேச வருவதற்குள் முன்பே அவர் எட்டுமுறை இந்தியாவுக்கான பட்ஜட் உரையைத் தாக்கல் செய்து இருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டார்கள்.

அதே மாதிரியான பார்வை ப.சிதம்பரத்தின் பேச்சிலும் வெளிப்பட்டது.

அவர் வைரமுத்துவைப் பற்றி குறிப்பிடும் போதும், பேரராசிரியர் என்றே குறிப்பிட்டார். நூலை விரிவாக அவர் வாசித்திருப்பது பேச்சில் நுட்பமாக வெளிப்பட்டது.

நிறைவாக 1330 கோடி வாழ்த்துகள் என்றுக் கூறி தன்னுடைய பேச்சை நிறைவு செய்தார் ப.சிதம்பரம்.

கலைஞருக்கும் வைரமுத்துக்குமான நட்பைப் பற்றிக் குறிப்பிட்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்த நேரம் கலைஞர் இருந்திருந்தால் ‘மகா கவிதை’ நூலுக்காக வைரமுத்துவை உச்சி முகர்ந்து பாராட்டி இருப்பார்.” என்றார்.

“கவிப்பேரரசின் 17 நூல்களை கலைஞர் வெளியிட்டு இருக்கிறார். நான் இரண்டாவது முறையாக இவருடைய நூலை வெளியிட்டு இருக்கிறேன். தொடர்ந்து, அவர் எழுதும் நூல்களை நான் வெளியிட வேண்டும்” என்று அவர் வைரமுத்துக்கு அன்புக் கட்டளையுடன் சொன்ன ஒரு விஷயம், “பாரதியின் வரலாற்றை கவிராஜன் கதை என்ற கவிதை நூலாக எழுதிய நீங்கள், கலைஞரின் வரலாற்றையும் ஒரு கவிதை நூலாக எழுத வேண்டும்.” என்றார்.

ஏற்புரை வழங்கிய கவிப்பேரரசு வைரமுத்து, விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தார்.

‘மகா கவிதை’ நூலை எழுத நீண்டக் கால உழைப்பு தேவைப்பட்டது என்றார்.

திரைப்படப் பாடல் எழுதுவது எனது வயிற்றுக்காக, ‘மகா கவிதை’ போன்ற படைப்புகளை படைப்பது என்னுடைய விருப்பத்திற்காக என்றவர்,

வெவ்வேறு கோள்கள் பற்றியும் நைட்ரஜன், ஹைட்ரஜன், கார்பன் பற்றி விரிவான அறிவியல் ரீதியான வகுப்பறையை நினைவுபடுத்தினார்.

நூல் உருவாக்கதைப் பற்றி உணர்வுபூர்வமாக பேசிய வைரமுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞரின் வரலாற்றை எழுதச் சொல்லி கட்டளையிட்டதை பெருமையுடன் குறிப்பிட்டார்.

கலைஞரின் நெஞ்சுக் நீதி நூலையும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுடனும் கலந்து பேசி அந்த நூலை உருவாக்குவேன் என்று தன்னுடைய உரையை நிறைவு செய்தார்.

மகா கவிதை நூல் வெளியீட்டு விழா கலைஞரைப் பற்றிய இன்னொரு நூலை எழுதுவதற்கான துவக்கப் புள்ளியாக மாறி இருக்கிறது.

-யூகி.

You might also like