விழிப்புணர்வு இருந்தால், யாரும் நம்மை ஏய்க்க முடியாது!

நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு எளிய அஞ்சலி:

*****

‘புதிய பார்வை’ 2005 – ஏப்ரல் இதழில் வெளிவந்த விஜய்காந்த் பேட்டியிலிருந்து ஒரு பகுதி.

******

குஷால்தாஸ் கார்டன். கார்களும், கேரவன்களும் ஒய்வெடுக்க விசால மரப்படிகளில் மேலே சென்றால் பேச்சுகள். நாற்காலிகள். குழந்தைகளின் ஓட்டங்கள். போலீஸ் உடையில் நடிகர்கள். பெண்கள். ஒயர் சுருள்கள். பிரகாச வெளிச்சங்கள்.

புதிய கரைவேட்டிகள். மன்ற உறுப்பினர்கள். கிசுகிசுக்கள். சலசலப்புகள். திடீரென்று மைக்கில் சைலன்ஸ் குரல். இடமே நிசப்தமாக ரெடி.. டேக் ஆக்ஷன்.. தடதடவென இரண்டு மூன்று நபர்கள் உருள்கிற ஓடுகிற சப்தம். கட்.

சட்டென்று எல்லோர் முகமும் பரபரப்பாக ஆளாளுக்கு ஒதுங்கி வழிவிடுகிறார்கள். விஜயகாந்த் வருகிறார். கனிவு காட்கிறார். அனுபவ சாந்தம். தீர்க்கமான கண்கள். கேப்டன் என்று அணுகுகிற மன்ற பொறுப்பாளர்களைப் பேசி அனுப்புகிறார்.

ஒரு வயதான பெண்மணி சிறிய பையனுடன் வந்திருக்கிறார். பையன் பள்ளிச் சீருடையில் இருக்கிறான். ‘அப்படி உட்கார்ந்து பேசுவோமா?..! என்று நம்மை அழைக்க அருகே அந்தப் பெண்மணி வருவதைப் பார்த்து விசாரிக்கிறார்.

“ஐயா.. செங்கத்துல இருந்து வர்றோம்க.. திருவண்ணாமலைக்கு வந்தபோது பாக்க வந்தோம்.. அங்க கடல் மாதிரி கூட்டம்.. ஒண்ணும் முடியலை.. பாத்தே ஆகணும்னு இந்தப் பய நிக்கறான்… வழி விசாரிச்சு பஸ் புடிச்சு வந்துட்ம்ங்க.”.

சட்டென்று உணர்ச்சி வசப்பட்டு அந்தப் பையனை அணைத்துக் கொள்கிறார். சற்று பேச்சு. விசாரிப்பு. நம்பிக்கை. மன்றத்து ஆட்களை பார்த்து கண்சிமிட்கிறார். அவர்கள் அவர்களை ஆதரவாக அழைத்துப் போகிறார்கள். ஒருவயதான லைட்மேன் சொல்கிறார். அப்ப எம்.ஜி.ஆருக்கு நடந்ததெல்லாம் இவருக்கு நடக்குது…”

தமிழகத்தில் மறுபடியும் ஒரு புதிய அரசியல் கட்சி. மறுபடியும் தலைவராக ஒரு நடிகர். தன்னுடைய அரசியல் ஆரம்பம், விருப்பம். பாதை. நம்பிக்கை. எதிர் காலம் என அவருடைய பேச்சு விரியத் தொடங்கியது.

கேள்வி: அடுத்தக் கட்டம் அரசியல்னு வெளிப்படையா அறிவிச்சிட்டீங்க… குடும்பத்தில ஆரம்பத்திலே இருந்த அரசியல் சூழ்நிலை என்ன?

விஜய்காந்த்: எங்க குடும்பமே அரசியல் குடும்பம்தான். தாத்தா காங்கிரஸ்காரர். அப்பா காங்கிரஸ்காரர்.

நானும், என்னோட அண்ணனும்தான் திராவிட உணர்வுகளால் ஈர்க்கப்பட்டோம்.

வீட்ல வேற யாரும் அரசியல் பேசறதில்லை. அப்போது திலகர் திடல்ல பெரிய பெரியக் கூட்டங்கள் நடக்கும்.

சந்தைதானே திலகர் திடல். எந்தக் கூட்டம் நடந்தாலும் அது தமிழக அரசியல்ல ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும்.

நாங்க அப்ப இளவட்டம். திடலுக்கு உள்ளே போறதில்லை. வெளிய டீக்கடை பக்கத்தில நின்னுகிட்டு பால் இல்லன்னா டீ, காபி குடிச்சிகிட்டு, அங்க கட்டி வச்ச மைக் அடியில, பிளாட்பாரத்திலேயே உட்கார்ந்துப்போம்.

பத்து டீ, பத்து காப்பி குடிச்சிட்டு முடியறவரைக்கும் கூட்டம்தான். முடிஞ்சாலும் சட்டுன்னு வீட்டுக்கு போறதில்லை. மறுபடியும் எங்க பேச்சு தொடங்கும். கலைஞர் இப்படிச் சொல்றாரே இதுக்கு என்ன அர்த்தம்? எம்.ஜி.ஆர். இப்படி சொல்கிறாரே இதுக்கு என்னன்னு விடியவிடிய அரசியல் பேச்சுதான்.

வீட்ல பணத்துக்கு குறைச்சலில்ல. அப்பா பெருசா அதட்ட மாட்டாரு. காங்கிரஸை கண்டுக்கலியேன்னு நினைச்சிருக்கலாம். யார் வந்தாலும் பேச்சு கேட்கக் போனாலும் கலைஞர், எம்.ஜி.ஆர். வந்தால் மிஸ் பண்றதேயில்லை.

அதிலும் கலைஞர் பேச்சு கேட்கறதுக்காவே எல்லாக் கட்சிக்காரங்களும் வருவாங்க. நான் அப்பவே தீவிர எம்.ஜி.ஆர். விசுவாசி. ‘எம்.ஜி.ஆர். வழி நம்ப வழி’ன்னு இருந்தேன். அவர் திமுக சேர்ந்தால் நானும் திமுக. வெளிய வந்து அண்ணா திமுக ஆரம்பிச்சா நானும் அந்தப் பக்கம்.

இப்படித்தான் இளமைக் காலத்து உணா்வுகள் இருந்துச்சு… பெருசா படிக்கலை. எம்.ஜி.ஆர். படங்களும் அரசியலும் பெரிய ஈா்ப்பா இருந்துச்சு…

அப்பவே மன்றம், பாசறை எல்லாம் நடத்தினோம். மனநிலைக்கு தகுந்த மாதிரி கையில முரசொலி, சமநீதி போல பத்திரிகைகள் இருக்கும். சமூக சேவையெல்லாம் செய்யற ஆசை இருந்துச்சு. ரிக்சாவெல்லாம் நண்பர்களோட சேர்ந்து வாங்கிக் கொடுத்திருக்கோம்.

நிறைய நாள் ஹாஸ்டல்ல இருந்தேன். நிறைய ஏழை மாணவர்கள்… பாக்கவே கஷ்டமா இருக்கும்… அவங்க ஒரு நாள் சாப்பாடே மதியம் உணவுதான். எனக்கு மட்டும் வீட்ல இருந்து டின் டின்னா பிஸ்கட் வரும்… சாப்பிடவே பிடிக்காது…

அடிப்படை விஷயங்கள் எல்லோருக்கும் ஏன் சரியா இல்லங்கற வருத்தம் அப்ப பெருசா இருந்துச்சு… என்னால முடிஞ்சதை அப்பவே செஞ்சிருக்கேன்.

கே: இவ்வளவு தீவிர அரசியல் உணர்வு இருந்தும் நீண்டகாலம் திரைத் துறையிலேயே இருந்திருக்கீங்களே?

பதில் : சினிமாமேல அப்ப பெரிய ஆர்வம் இருந்துச்சு… எனக்கும் பெரிய நடிகனா வரணும்னு பெரிய வெறி… எம்.ஜி.ஆர் மாதிரி வரணும்னு எண்ணம்… எப்பவுமே அரசியல் மனசில இருக்கு… முதல்ல சினிமால ஜெயிக்கலாம்னு ஆசை… வந்துட்டேன்…

இதோ ரொம்ப வருஷம் வெற்றிகரமா போயிடுச்சு… அதுக்காக இத்தனை வருஷமும் அரசியல் எண்ணம் இல்லாம இல்லை.

என்னோட அரசியல் உணர்வுகளை பத்திரிகைகள் மூலமாகவும், திரைப்படங்கள் வழியாகவும் பிரதிபலிச்சுக்கிட்டுதான் வந்திருக்கிறேன். இப்ப நேரடியா வந்தாச்சு.

கே: திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் பார்முலாவை பின்பற்றின மாதிரியே அரசியலிலும் எம்.ஜி.ஆரா?

பதில் : அப்படி ஒரு பார்முலா எதுவும் இல்லை. உலகம் முழுக்க கதாநாயகன் ஜெயிக்கணும். அதுக்காக கதை நடக்கும். புரூஸ்லீ படங்களைப் பாருங்க. வில்லன் அடிப்பான். உதட்டு ஓரத்துல ரத்தம் வரும். அப்பதான் அவருக்கு கோபம் வந்து திருப்பி அடிப்பாரு.

இது எல்லா இடத்திலேயுமே நடக்கிறதுதான். என் படத்திலேயும் இதுதான் நடந்தது. மற்றபடி அரசியல்ல ஒவ்வொருத்தருக்கும் ஒரு பார்முலா. சிலருக்கு கூட்டணி பார்முலா. சிலருக்கு கள்ள ஓட்டு பார்முலா. சிலருக்கு வன்முறை பார்முலா.

எனக்கு இந்த மாதிரி எதுவும் இல்லை. ஜனங்களுக்கு நல்லது செய்யணும். இதுல பார்முலா எதுவும் இல்லை. அவங்களுக்கு நல்லது செஞ்சா அவங்க நமக்கு நல்லது செய்வாங்க. நானும் இதைத்தான் செய்யப்போறேன்.

கே: உங்களைப்போல சிவாஜி கணேசனுக்கும் பெரிய கூட்டம் கூடினாங்க. தேர்தல்ல ஐம்பது தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதி – திருவையாருல மட்டும்தான் டெபாசிட் வாங்க முடிஞ்சது. இம்மாதிரி நடந்த விஷயங்கள் உங்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்தலையா?

பதில்: ஸார்… ஏன் எப்பவும் தோல்வி அடைஞ்ச விஷயங்களையே பாக்கறீங்க? ஜெயிச்சவங்களைப் பாருங்க. செருப்பு தைக்கிற தொழிலாளியோட மகன் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதி ஆகலயா?

ஏன் ஒரு தோல்வியைப் பாக்கறீங்க… ஒரு என்.டி.ஆரைப் பாருங்க… ஒரு எம்.ஜி.ஆரைப் பாருங்க… ஒரு ஜெயலலிதாவைப் பாருங்க… இவங்க எல்லாம் ஜெயிக்கலயா?

எல்லாத் துறையில இருந்தும் அரசியலுக்கு பல பேர் வர்றாங்க… அது போல சினிமாவுல இருந்தும் வர்றாங்க. சிலர் ஜெயிக்கிறாங்க.. சிலர் தோற்கிறாங்க… நடிகர்கள் என்பதால அதை மட்டும் நீங்க பெரிசாப் பாக்கறீங்க…?

அப்புறம் ஒவ்வொருத்தரும் அவங்க அளவில் முயற்சி செய்யறாங்க… இதுல விமர்சனம் பண்ண என்ன இருக்கு?

ஒருத்தரோட முயற்சியை எப்படி குறை சொல்ல முடியும்? எல்லா அரசியல்வாதிகளையும் போல நானும் மக்களை நம்புகிறேன்… மக்கள் என்னை நம்பினால் விஜயகாந்த் கட்சி இருக்கும். நம்புவாங்க என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கு.

கே: இங்க ஒவ்வொரு கட்சிக்கும் சில தலைவர்கள் முன்மாதிரியாக காட்டப்படுவார்கள்… உங்களுக்கு யார்?

பதில்: காமராஜர், எம்.ஜி.ஆர்.

கே: என்ன காரணமா உங்க கட்சிக்கு முன்மாதிரியா இவர்களை நிறுத்த ஆசைப்படுகிறீர்கள்?

பதில்: இவங்க ரெண்டு பேருமே எளிமையானவர்கள். மற்ற தலைவர்கள் ஏழை ஜனங்களை பற்றியும் யோசித்தார்கள்.

ஆனா இவங்க ரெண்டு பேரும் கைகொடுக்க ஆளில்லாத ஏழை ஜனங்களுக்காகவே வாழ்ந்தாங்க.

எல்லா சந்தர்ப்பத்திலும் மக்கள் நலனைப் பற்றியே யோசிச்சாங்க. சுயநல அரசியல் செய்யவே இல்லை. இவங்க வாழ்க்கையே ஒரு தீபம் மாதிரி மத்தவங்களுக்கு ஒளி கொடுக்க எரிஞ்சது.

இவங்க ரெண்டு பேரும்தான் என்னோட தலைவர்கள். நான் என்னுடைய கட்சித் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் பின்பற்றப் போகிற தலைவர்களா இவர்களைத்தான் முன் நிறுத்தப் போகிறேன்.”

கே: இங்க ஒவ்வொரு கட்சி உருவாகவும் ஒரு காரணம் இருந்திருக்கு. சுதந்திரப் போராட்டம் காங்கிரசுக்கு, திராவிட உணர்வில திராவிட இயக்கம், ஆட்சியும் பகுத்தறிவும்ங்கிற எண்ணத்தில திமுக, திமுகவை எதிர்த்து அதிமுக, வாரிசு அரசியலை எதிர்த்து மதிமுக, இப்படி நீங்க கட்சி ஆரம்பிக்கிறதுக்கு ஏதாவது அடிப்படைக் காரணம் இருக்கா?

பதில்: இருக்கு. இந்தக் கட்சிகள் எல்லாம் மாறிமாறி ஆட்சியில இருந்து எங்க மக்களுக்கு என்ன செஞ்சீங்கன்னு கேள்வி கேட்கற தேவை இருக்கு. நூறு ரூபாயா இருந்த லஞ்சம் இப்ப கோடிகள்ல.

நடந்துகிட்டு இருக்கு. இதுக்கு என்ன பண்ணீங்கன்னு கேக்கற தேவை இருக்கு. வேலை இல்லாம… ஒவ்வொரு வீட்லயும் ஒரு இளைஞர் இருக்கானே ஏன் இப்படி ஆச்சுன்னு கேக்கற தேவை இருக்கு. தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனா ஆயிட்டானேங்கற கோபம் இருக்கு.

விவசாய நிலமெல்லாம் அழிஞ்சுகிட்டு வருதேன்னு கேக்க வேண்டியிருக்கு. மாத்தி மாத்தி உங்களை நம்பி ஓட்டு போட்ட ஜனங்களுக்கு நிம்மதி இல்லையென்று கேக்க வேண்டியிருக்கு. இப்படி மக்கள் மனசுல ஆயிரமாயிரம் கேள்விகள் இருக்கு. அப்படி மக்களோட மனசாட்சியா நான் கேக்கப்போறேன். அதுக்குத்தான் இந்தக் கட்சி.

தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்னு உங்க மேல ஒரு விமர்சனம் வைக்கப்படுகிறதே

எங்க தாத்தன் முப்பாட்டன் காலத்துல இருந்து இங்கதான் இருக்கோம். தமிழ் மணலதான் நான் பிறந்தேன். இந்த மண்ணுலதான் தவழ்ந்தேன். இந்த மண்தான் என்னை வாழ வைக்குது. என்னோட வாழ்வும் தாழ்வும் தமிழ் மக்களோட தான். இந்த மண்ணோடதான்.

எம்ஜிஆர், சிவாஜி காலத்துல கூட செயல்படாத அளவுக்கு உங்க தலைமையில், நடிகர் சங்கம் செயல்பட்டிருக்கு. நிறைய கடன்கள் அடைக்கப்பட்டிருக்கு. நீங்கள் கட்சி தொடங்கப்போகிற சூழ்நிலையில சக நடிகர்கள் என்னவிதமான உணர்வுகளோட இருக்காங்க?

என்னோட கட்சித் தொடங்குகிற சூழ்நிலையையும், நடிகர் சங்க செயல்பாடுகளையும் இணைச்சுப் பார்க்க வேண்டியதில்லைன்னு நினைக்கிறேன். நடிகர்களுக்கான சங்கம் அது.

நடிகர்களின் நலன்களை பிரச்னைகளை என எல்லாவற்றையும் சொல்வதற்காக ஏற்படுத்தப்பட்டது அது. அதில் பல கட்சிகளைச் சேர்ந்த நடிகர்கள் இருக்கிறார்கள். அங்க நடிகர் என்ற உறவு மட்டும்தான். கட்சிக் கிடையாது.

அதனாலதான் நான், சரத், நெப்போலியன், எஸ்.எஸ்.சந்திரன், ராதாரவி போல எல்லாரும் இணைந்து செயல்பட முடியுது.

நடிகர் சங்கத்திற்கு நடந்த நல்ல விசயங்கள் அனைத்துக்கும் நான் மட்டுமே காரணம்னு சொல்வது தவறு. எல்லோருடைய கூட்டு முயற்சி.

எங்களுக்கான நல்லதை நாங்களே இணைஞ்சு செஞ்சுக்கறோம். அதற்காக அவர்களை என் கட்சியை நோக்கி திரும்பச் சொல்ல முடியாது. என் உணர்வு என் விருப்பம், என் ஆசை, என் கனவு, என் மன்றத்து உறுப்பினர்களின் விருப்பம் என்னுடைய கட்சி.

ஈழப் பிரச்னைகள் தொடர்பா உங்களுடைய உணர்வுகளை எப்போதுமே வெளிப்படுத்தி வந்திருக்கீங்க. கட்சித் தொடங்கப் போகிற சூழல்ல இப்ப எப்படி அந்த உணர்வுகள் இருக்கு?

இப்பவும் நான் பிறந்த நாள் கொண்டாடறதில்லை. நான் சரின்னு சொன்னா வண்டி கட்டிக்கிட்டு கன்னியாகுமரியில இருந்து கிளம்பி வந்துடுவாங்க. நான்தான் என் உணர்வுகளை மதிக்க சொல்லி கேட்டிருக்கேன். மன்றத்து நண்பர்களும் மதிப்பளிக்கறாங்க.

ஈழம் மட்டும் இல்லை, உலகத்துல எங்க இருந்தாலும் அந்தத் தமிழனுக்கு பாதுகாப்பு இருக்கணும்ங்கறதுதான் என்னோட ஆசை, ஏதோ இது ஒரு பிரச்னைக்கு மட்டும்தான் குரல் கொடுக்கறேன்னு நினைக்காதீங்க தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளுக்கு என்னோட கருத்தை தெரிவிச்சிருக்கேன்.. எல்லாரும் நல்ல, இருக்கணும்.. அதுதானே ஸார் நம்ம தேவை?

உங்களுக்கு சொந்த ஊர் மதுரை. தவிர வரப் போகிற புதிய அரசியல் கட்சிக்குத் தலைவர், இந்த அடிப்படையில் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு தமிழகம் பிரிக்கப்படணும்னு சில தலைவர்கள் கோரிக்கை வைக்கிறார்களே? இதை எப்படி பார்க்கிறீர்கள்?

தேவையில்லைங்க எதுக்கு இப்ப இந்தப் பிரிவு? பிரியப் பிரிய பல்வேறு பிரச்னைகள்.. போராட்டங்கள்தான் நடக்கும். முதல்ல இருக்கறதை வச்சுக்கிட்டு ஜனங்களுக்கு நல்லது செய்வோம். முதல்ல அடிப்படை பிரச்னைகளைத் தீர்ப்போம்.

இது இல்லை. அது இல்லை. இது வேணும், அது வேணும்னு கேக்கறதை விட்டுவிட்டு எல்லாத்தையும் ஒழுங்கு படுத்துவோம். எமர்ஜென்சில சாப்பாடு பத்து ரூபாய்க்கு வித்தது. ஜனங்களே சேர்ந்து ஒரு ரூபாய்க்கு சாப்பாடு போடலயா? இருக்கறதை கட்டிக் காப்பாத்துவோம்..

உங்க கட்சிக்கு அடிப்படை ஊழல் எதிர்ப்பு அப்படின்னு சொல்றீங்க. உங்க ஒரு தனிநபரால அது சாத்தியமா?

நான் என் அளவில நேர்மையா இருக்கேன். என் மன்றத்து ஆட்கள் ஒவ்வொருத்தரையும் நேர்மையா இருக்கச் சொல்றேன்… தவிர நான் தனிநபர் அல்ல. இன்னைக்கு என்மேல அன்புகாட்ற மக்கள் கோடிக்கணக்குல இருக்காங்க. நான் அவங்களை எந்த கெட்ட விசயத்தையும் செய்யச் சொல்லலை. நேர்மையா இருங்கன்னு சொல்றேன்.. நாணயமா இருங்கன்னு சொல்றேன்.

உழைச்சு சாப்பிடுங்கன்னு சொல்றேன்.. ஊழலை ஒழிப்போம்னு சொல்றேன்.. எனக்கு தேவைக்கு மேலவே பணம் இருக்குது… சொகுசா வாழ்ந்துட்டுப் போக முடியும்.. ஆனா அப்படி போக முடியலை.. என்னால முடிஞ்ச நாலு நல்ல விசயங்களை செஞ்சேன்..

மக்கள் இதையே ஒரு அரசாங்கமா இருந்து செஞ்சா நல்லாயிருக்குமேன்னு சொன்னாங்க.. பத்து பேருக்கு செஞ்சது. ஆயிரம் பேருக்கு, லட்சம் பேருக்கு. நாட்டுக்கே செஞ்சா நல்லதுதானேன்னு எண்ணம்.. நல்லதுக்காக கடைசி மூச்சு வரைக்கும் போராடுவேன்.

சாதி ஒழிப்பு பற்றி படங்களில் நிறைய பேசியிருக்கீங்க.. இப்ப நேரடி அரசியல்ல சாதிக் கட்சிகளை சந்திக்க வேண்டியிருக்குமே? இதற்கு அடுத்து மதம் வேற இருக்கு? நீங்க மத ஒற்றுமை பற்றி பேசாத படமே இல்லை?

எந்த வேறுபாடும் நமக்கு வேண்டாம். பிறப்பால் நானொரு தமிழன். நானொரு இந்தியன். இந்த அடையாளம் போதும். உங்க சாதியைப் பற்றி சொல்லிக்க ஆசைப்படறீங்களா? தைரியமா சந்தோஷமாக சொல்லிக்குங்க ஆனா அதை வச்சு அரசியல் செய்யாதீங்க. மதமும் இப்படித்தான். ஒற்றுமையா இருப்போம். வேற்றுமையில் ஒற்றுமைதான் நமக்கு.

அப்துல் கலாம் ஜனாதிபதியா இல்லையா? சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மன்மோகன் சிங் பிரதம மந்திரியா இல்லையா? அவங்க வேற யாரோவா? நம்மோட பிறந்தவங்க, நம்மோட வளர்ந்தவங்க, நாட்டுக்கு நல்லது செய்ய மனிதநேயம்தான் தேவை; சாதியோ மதமோ அல்ல, மக்களுக்கு நான் எப்போதுமே சொல்றது இதுதான்.

சாதியோ, மதமோ எதை வேண்டுமானலும் நீங்கள் பின்பற்றிக் கொள்ளுங்கள். ஆனா அதைவைச்சு அரசியல் செஞ்சு உங்க வாழ்க்கையும், சக மனிதன் வாழ்க்கையையும் அழிக்காதீங்க….

தமிழ் உணர்வைப் பொறுத்தவரை உங்க சுட்சியோட நிலை என்ன?

இதைப் பற்றி விரிவா இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்றேன். ஏன்னா கட்சிக்காண அடிப்படை வேலைகள் நடந்துகிட்டு இருக்கு. செப்டம்பர்ல மதுரையில் மாநாடு.

கட்சி பெயர் அறிவிப்பு. கட்சியோட கொள்கைகள்.. மொழி நாடு பற்றிய நிலை என எல்லாவற்றையும் பற்றி அதுல விரிவா சொல்லப் போறோம்…

பொதுவா என்னோட உணர்வு மட்டும் அல்ல. ஒவ்வொரு தமிழ்னோட உணர்வும் தமிழ்மொழி செம்மையாக அதற்கு உரிய தகுதியோடும் அங்கீகாரத்தோடும் இருக்க வேண்டும் என்பதுதான் என்னோட கருத்து.

அதுக்காக தமிழ் மட்டுமே படிக்க வைத்து உங்கள் பிள்ளைகள் எதிர்கால வாழ்வை சுருங்க வச்சிடாதீங்க.. ஆங்கிலம் உட்பட எத்தனை மொழி வேண்டுமோ அத்தனை மொழியும் கத்துக்கங்க இரண்டு மொழி தெரிந்தவன் இரண்டு மனிதர்களுக்குச் சமம்னு ஒரு கருத்து இருக்கு. மறந்துடாதீங்க.

உங்க மன்றத்துக் கொடிதான் கட்சிக் கொடியா? அதன் வடிவமைப்பு என்ன விளக்கம்?

மன்றத்துக் கொடிதான் கட்சிக் கொடி. அதை முறையா பதிவு செஞ்சிருக்கேன். அன்பு, அறம், ஆற்றல் இதுதான் அதனோட விளக்கம். நடுவில இருக்கற தீபம் விழிப்புணர்வை குறிப்பிடுது.

ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் விழிப்புணர்வு இருந்தால் போதும். யாரும் நம்மை ஏய்க்க முடியாது. அன்பு இதயத்தில் இருக்கட்டும். அறம் நீங்கள் நடக்கிற பாதையாக இருக்கட்டும். ஆற்றல் உங்கள் செயல்பாடாக இருக்கட்டும்.

அன்பு உள்ளங்களுக்கு, அறம் பொது வாழ்க்கைக்கு, ஆற்றல் வெற்றிக்கு. இந்த மூன்றையும் நீங்கள் பின்பற்றும்போது உங்களை யாரும் ஏமாற்றாமல் இருக்க கையில் விழிப்புணர்வு தீபம் இருக்கட்டும். இதுதான் விளக்கம்.

சந்திப்பு: பரசுராம்

‘புதிய பார்வை’ 2005 – ஏப்ரல் இதழில் வெளிவந்த விஜய்காந்த் பேட்டியிலிருந்து ஒரு பகுதி.

You might also like