வட்டார வழக்கு – இளையராஜாவின் பழைய மெட்டுகள்; புதிய பாடல்கள்!

சில திரைப்படங்களின் பெயர்கள் வினோதமாகத் தென்படும்; சில, அப்படத்தின் உள்ளடக்கத்திற்குச் சம்பந்தமில்லாமல் இருக்கும். மிகச்சில தலைப்புகள் பார்க்கச் சாதாரணமாகத் தெரிந்தாலும், அத்திரைப்படத்திற்கு நூறு சதவிகிதம் பொருத்தமானதாக அமையும். ‘வட்டார வழக்கு’ திரைப்படம் அதில் எந்த வகையில் சேருமென்று தெரியவில்லை. ஆனாலும், அந்த தலைப்பும் தற்போது வெளியாகியிருக்கும் அப்படத்தின் ட்ரெய்லரும் நம் கவனத்தைக் கலைத்திருக்கிறது.

வரும் 29-ம் தேதியன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் ‘டுலெட்’ நம்பிராஜன், ரவீணா ரவி உட்படப் பலர் நடித்துள்ளனர். இளையராஜா இதற்கு இசையமைத்துள்ளார். அதுவே, இப்படத்தின் மீது அவரது ரசிகர்கள் திரும்பக் காரணமாக உள்ளது.

நினைவுக்கு வரும் ‘பருத்திவீரன்’ !

இரண்டு குடும்பங்களிடையே தலைமுறை தலைமுறையாகத் தொடரும் பகையை ‘வட்டார வழக்கு’ சொல்வதாகப் படக்குழு தெரிவித்திருக்கிறது. அதனை அப்படத்தின் ட்ரெய்லர் முழுமையாகப் பிரதிபலிக்காவிட்டாலும், எளிய மக்கள் சிலரது வாழ்க்கை அதில் சொல்லப்பட்டுள்ளது பிடிபடுகிறது.

இடுப்பில் இருக்கும் சிறிய கத்தி போன்ற அரிவாள்; அதனை வலது கையில் இருந்து இடது கைக்கு சுழற்றி வீசும் ஸ்டைல்; நெற்றியில் கருப்பு பொட்டு; கூர்மையான பார்வை; முரட்டுத்தனத்தோடு காதலை முழுமையாக வெளிப்படுத்தும் உடல்மொழி என்று இதில் நாயகனாகத் தோன்றியிருக்கிறார் நம்பிராஜன்.

‘ஒரு கிடாயின் கருணை மனு’வில் அறிமுகமாகி, ‘லவ் டுடே’வில் யோகிபாபுவின் ஜோடியாக நடித்த ரவீணா ரவி இதில் நாயகியாக வந்துள்ளார். செம்பழுப்பு நிற ஒப்பனை அவரை கரிசல் காட்டு நாயகியாகக் காட்டியிருக்கிறது. இவர்கள் தவிர்த்து ‘சுப்பிரமணியபுரம்’ விசித்திரன் உட்படச் சிலர் இதில் நடித்துள்ளனர். ஆனால், பலரும் மதுரை வட்டாரத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

அவர்களது இருப்பும், படமாக்கப்பட்ட முறையும் அமீரின் ‘பருத்திவீரன்’ படத்தை நினைவூட்டுகின்றன. அதேநேரத்தில், படத்தின் பட்ஜெட்டானது காட்சிகளின் வீரியத்தைக் குறைத்திருக்கவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இப்படம் ‘பழிக்குப் பழி’ வாங்கும் படம் என்பதாகத் தோற்றமளிக்கிறது. பருத்திவீரன் போலவே இதிலும் வன்முறையே கதையின் அடிநாதமாக உள்ளது. அதையும் தாண்டி திரையில் கோரங்கள் வெளிப்படுமா என்று தெரியவில்லை. மிகமுக்கியமாக, பெண்கள் சார்ந்த வன்முறை இக்கதையில் உள்ளதா என்றும் தெரியவில்லை.

அதனைச் சாமர்த்தியமாகக் கடந்துவிட்டால், ‘சிறிய படம் என்பதைத் தாண்டி ‘வட்டார வழக்கு’ பெரிய வரவேற்பைப் பெறும்.

ஈர்க்கும் ராஜாங்கம்!

இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ட்ரெய்லரிலேயே அவரது பின்னணி இசை நம்மைக் கட்டிப் போடுகிறது.

’தை பிறந்தால் இன்று..’ பாடல் மலையாளப்படமான ‘யாத்ராமொழி’யில் வரும் ‘தைமாவின் தணலில்..’பாடலைப் பிரதியெடுத்திருக்கிறது. ’பிரேமை எனது ஊர்’ பாடலானது தெலுங்கு படமான ‘அபிநந்தனா’வில் இடம்பெற்ற ‘பிரேம லேதனி’ பாடலை பிரதியெடுத்திருக்கிறது.

அது, 1980-களின் இறுதியில் நடைபெறுவதாக அமைந்த ‘வட்டார வழக்கு’ கதையோடு பொருந்தும் என்றே தோன்றுகிறது. இப்பாடல்கள் மட்டுமல்லாமல், இளையராஜா அக்காலகட்டத்தில் இசையமைத்த பல தமிழ் பாடல்கள் இப்படத்தில் பின்னணியில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. அந்த ‘ரெட்ரோ பீலிங்’ இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் பிடித்தமானதாக உள்ளது.

லோகேஷ் கனகராஜின் படங்களில் இடம்பெறும் பழைய பாடல்களுக்குக் கிடைத்துள்ள வரவேற்பே அதற்குச் சாட்சி. இளையராஜாவின் இசையில் அவதாரத்தில் இடம்பெற்ற ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடல், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘இறைவி’யில் அப்படிச் சேர்க்கப்பட்டபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

அது போன்ற அனுபவத்தைத் தந்தால், ‘வட்டார வழக்கு’ படத்தின் யுஎஸ்பியாகவும் அதுவே அமையும்.

எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமா?

ஆண்டிறுதியில் வெளியாகும் படங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைக்காது. கடந்த காலம் சொல்லும் நியதி அது. ஏனென்றால், டிசம்பர் மாதத்தில் வெளியான பல படங்கள் பொங்கல் வெளியீடுகளால் தியேட்டரில் இருந்து அகலும் என்பது தொண்ணூறுகளின் இறுதி வரை இருந்த நிலைமை. கடந்த பத்தாண்டுகளாக, அதில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

நல்ல படமாக இருந்தால், இரண்டு வாரத்தில் கூட பெரிய கவன ஈர்ப்பை நிகழ்த்திவிடும் என்பதே தற்போதைய சூழல். அந்த வகையில், வரும் 29-ம் தேதியன்று வெளியாகும் சில படங்களில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது ‘வட்டார வழக்கு’.

கிட்டத்தட்ட நான்காண்டு கால காத்திருப்புக்குப் பிறகு இது வெளியாகிறது. அந்த காத்திருப்புக்குப் பலன் கிடைக்கும் வகையில் இப்படம் அமையுமென்பது நமது எதிர்பார்ப்பு. வட்டாரத்தை வழக்கையும் மையப்படுத்தியுள்ள ‘வட்டார வழக்கு’ அதற்குத் தகுந்தவாறு உள்ளதா என்று பார்க்கலாம்!

– உதய் பாடகலிங்கம்

You might also like