அப்பாவை அறிந்துகொள்ள ஓர் அரிய நூல்!

தாய்மையை போற்றும் நாம் தந்தையை போற்றுகிறோமா என்பதை ‘வானம் என்பது ஒரு தந்தைமை’ எனக்குறிப்பிட்டு தன் அணிந்துரையை எழுதியுள்ளார் அமிர்தம் சூர்யா அவர்கள்.

இந்நூலாசிரியர் க.ஆனந்த் அவர்களின் இந்நூலைப் பற்றி சென்ற மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற சேலம் சொற்கூடு நிகழ்வின் வாயிலாக அறிந்து கொண்டேன்.

வாசிக்க தந்த நூலை படித்துவிட்டு கனத்த மனதுடன் நிகழ்வில் பங்கேற்றேன், இலக்கிய நண்பர்களின் உணர்ச்சிகரமான உரைகளை கேட்டபடி.

ஒவ்வொரு கவிதையுமே அனைவரின் அப்பாக்களை போற்றுகிறது என்றே சொல்லலாம். கவிதையை வாசிக்கையில் ஏதேனும் ஒரு கவிதையிலாவது தன் அப்பாவை பற்றி நினைக்காமல் இருக்க மாட்டார்கள்.

****

எப்போதும்
சொல்லிக் கொடுத்துக் கொண்டே
இருக்கிறது,
எப்போதோ
அப்பா
சொல்லி விட்டுப் போனது.

உண்மைதானே.

அப்பாவின் தேவையை உணர்த்தும் மற்றொரு கவிதை அருமை.

இருந்தாலும்
இல்லாவிட்டாலும்
இருந்துகொண்டே தான்
இருக்கிறது,
அப்பாவின் தேவை.

தந்தையின் வார்த்தைக்கு இவர் கூறும் அர்த்தம் புதுமை, உண்மையும் கூட.

இருந்தாலும்
இறந்தாலும்
எதையேனும்
தந்து கொண்டே இருப்பதால்
தந்தையோ.

தந்து கொண்டே இருப்பதால் தந்தை!

வெற்றிடமாகும் வரை
புரிவதில்லை,
இதுவரை
நிரம்பியிருந்த
அப்பாவின் ஆளுமை.

இப்படி பல கவிதைகள் நம்மை அப்பா பற்றி நினைக்க வைக்கும். அனைவருக்கும் புரியும்படியாக எளிமையான சொற்களில் நிரம்பியிருக்கின்றன இவரது கவிதைகள். இப்புத்தகத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் அப்பாவை பற்றியே பேசுகின்றன.

கவிதைகள் ஒவ்வொன்றும் தந்தையின் பாசத்தை, அவரது உழைப்பை, ஆளுமையை, கண்டிப்பை, நம்மை முன்னேற்றிவிட முயலும் அக்கறையை, பரிதவிப்பை மற்றும் நம் மீது நேரடியாக காட்டாத அன்பை பற்றி கவி புனைந்துள்ளார்.

இறுதியாக ஒரு அழகான கவிதையை பகிர்கிறேன்.

தப்புத் தப்பாய்
புள்ளிகள்
வைத்து விட்டு வந்தாலும்
அழகான
கோலமாக்கித் தருபவர்
அப்பா..

கண்டிப்புடன் இருக்கும் அப்பா என்ற பிம்பத்தை, இக்கவிதைகளை வாசிப்பதன் மூலம் உணர முடியும் அப்பாவின் மற்றொரு முகத்தை. அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகமிது.

****

நூல்: என்றும் இருக்கும் வானம்
ஆசிரியர்: க.ஆனந்த்
வெளியீடு: நளம் பதிப்பகம்
பக்கங்கள்: 80

You might also like