ஆயிரம் பொற்காசுகள் – கொள்ளைச் சிரிப்புக்கு உத்தரவாதம்!

சில படங்களின் டைட்டிலை கேட்டால், ‘ரொம்ப பழைய படமோ’ என்று தோன்றும். ஆனால், அப்படங்கள் தரும் அனுபவம் வேறுவிதமாக இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘மரகத நாணயம்’ படம் கூட அப்படித்தான் இருந்தது. ‘நான் போகிறேன் மேலே மேலே’ பாடலைத் தந்த ‘நாணயம்’ கூட, தொலைக்காட்சியில் பார்க்கையில் சுவை தந்தது. ‘காசு பணம் துட்டு மணி மணி..’ பாடல் வழியாகத்தான் பெரும்பாலானவர்களை ‘சூது கவ்வும்’ சென்றடைந்தது. போலவே, ‘ஆயிரம்’ என்ற வார்த்தையை டைட்டிலில் கொண்ட படங்களைச் சொல்ல 80களின் ரசிகர்கள் பலர் திரண்டு நிற்பார்கள்.

இப்படி வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவர்களை ஒருசேரத் திருப்திப்படுத்தும் படங்களை இப்போதைய காலகட்டத்தில் தர முடியுமா? ’முடியும்’ என்று களமிறங்கியிருக்கிறது ‘ஆயிரம் பொற்காசுகள்’ படக்குழு (ஆயிரத்தையும் பொற்காசுகளையும் வைத்து மேற்சொன்ன படங்களை நினைவுகூர்ந்தது எப்பூடி..?!).

ரவி முருகையா இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜோகன் இசையமைத்துள்ளார். பானு முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விதார்த், அருந்ததி, சரவணன், ஹலோ கந்தசாமி, ஜார்ஜ் மரியான் உட்படப் பல கலைஞர்கள் இதில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரெய்லர் பார்த்தபோது, ‘கொஞ்சம் காமெடி இருக்கும்’ என்ற எண்ணம் ஏற்பட்டது. படம் அந்த எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்கிறதா?

சிரிப்பூட்டும் கதை!

தஞ்சாவூர் அருகே குருவாடிப்பட்டி எனும் கிராமம். அந்த ஊரைச் சேர்ந்த ஆணிமுத்து (சரவணன்) எந்த வேலை வெட்டிக்கும் செல்லாதவர். ஊரில் உள்ளவர்களிடம் திருடித் தின்பவர். இப்படிப்பட்டவருக்கு ஒரு தங்கை. திருச்சியில் வாழ்ந்துவரும் அவர், ஒருநாள் தனது மகனை (விதார்த்) ஆணிமுத்து வீட்டுக்கு அழைத்து வருகிறார். ‘உன் மருமகன் ஒரு வம்புல சிக்கிட்டான்’ என்று சொல்லி, அவரை அங்கு தங்க வைக்கிறார்.

அந்த ஊரில் இருப்பவர்களில் பலர் ‘கழிப்பறை கட்டும் திட்டத்தில்’ இணைவதற்காகத் தங்களது வீட்டில் கழிப்பறை கட்டுகின்றனர். அந்த புகைப்படத்தைக் காட்டி, பஞ்சாயத்து அலுவலகத்தில் நிதி பெறுகின்றனர். அந்த வரிசையில் இணைவதற்காக, ஆணிமுத்துவின் எதிர்வீட்டிலுள்ள கோவிந்தன் (ஹலோ கந்தசாமி) ஒரு கழிப்பறையைக் கட்டுகிறார். அதனைப் புகைப்படம் எடுத்து ‘தன்னுடையது’ என்று சொல்லி, ஆணிமுத்து திருட்டுத்தனமாகப் பணம் பெற்றுக் கொள்கிறார். அந்த காசைக் கொண்டு விதவிதமாகச் சமைத்து உண்டு கொழிக்கின்றனர்.

உண்மை தெரிந்து கோவிந்தன் கொதிக்க, ‘இன்னும் ஐந்து நாட்களில் கழிப்பறை கட்டுகிறேன்’ என்று பஞ்சாயத்து தலைவரிடம் (கர்ணராஜா) ’சரண்டர்’ ஆகிறார் ஆணிமுத்து. அதற்காக, வீட்டின் பின்புறம் ஆட்களை வைத்துக் குழி வெட்டுகிறார். அப்போது, குழி வெட்டும் அரிச்சந்திரன் (ஜார்ஜ் மரியான்) கண்களில் ஒரு பானை தட்டுப்படுகிறது. அதனுள் சோழர் காலத்து பொற்காசுகள் இருக்கின்றன.

அதனை அரிச்சந்திரன் எடுத்து மறைத்து வைப்பதற்குள் ஆணிமுத்துவும் அவரது சகோதரி மகனும் பார்த்து விடுகின்றனர். அதையடுத்து மூவரும் அதனைப் பங்கு போடுவதென்று முடிவாகிறது. ஆனால், அது நிகழவிடாமல் ஏதாவது ஒரு பிரச்சனை வந்துகொண்டே இருக்கிறது. இறுதியில், ஊரில் உள்ள அனைவருக்கும் ’பொற்காசு புதையல்’ பற்றித் தெரிய வருகிறது.

அதன்பிறகு என்னவானது? ஆணிமுத்துவும் அவரது மருமகனும் அந்த புதையலைத் தங்களுடையதாக ஆக்கிக் கொண்டார்களா என்று சொல்கிறது ‘ஆயிரம் பொற்காசுகள்’ திரைப்படம்.

இதனை ‘முதல் பாகம் ‘ என்று சொல்லியிருக்கிறது படக்குழு. ‘இரண்டாம் பாகம்’ எப்போது வெளிவரும் என்று தெரியவில்லை.

பொற்காசுகள் கிடைக்கும் வரை சற்று மந்தமாக நகரும் திரைக்கதை, அதன்பின் வேகமெடுக்கிறது. ஆனாலும், தான் நினைத்தமாதிரி நகைச்சுவை மிளிரப் படமெடுப்பேன் என்று அடம்பிடித்திருக்கிறார் இயக்குனர் ரவி முருகையா. அவரது முயற்சியின் பலனாக, தொடக்கம் முதல் இறுதி பிரேம் வரை சிரிப்பூட்டுகிறது இப்படம்.

அபாரமான ‘காஸ்டிங்’!

ஒரு திரைப்படத்தின் நாயகன் நாயகி முதல் ஓரிரு பிரேம்களில் தலைகாட்டுபவர்கள் வரை அனைவரையும் தேர்ந்தெடுத்து படத்தில் நடிக்க வைப்பதில் ‘காஸ்டிங் இயக்குனர்’ பங்கு மிகப்பெரியது. இந்த படத்தில் அந்த வேலை சரிவரச் செய்யப்பட்டிருக்கிறது.

இதில் விதார்த் நாயகன் என்று சொல்லப்பட்டாலும், அவருக்கு இணையாகப் பல பேருடைய பாத்திரங்கள் திரையில் ஜொலிக்கின்றன. ஹலோ கந்தசாமி, கர்ண ராஜா, இன்ஸ்பெக்டராக வரும் பாரதி கண்ணன், ஜார்ஜ் மரியானோடு வரும் பவன் ராஜ், எலி பிடிப்பவராக வருபவர், நாயகியின் அம்மாவாக நடித்தவர், விதார்த்தை சைட் அடிப்பவராக வரும் செம்மலர் அன்னம் என்று பலர் இதில் நடித்துள்ளனர். அவர்களது இருப்பு அற்புதமாக அமைந்திருப்பதே படத்தின் சுவாரஸ்யத்தில் பாதியை உருவாக்கிவிடுகிறது.

சரவணனைப் பொறுத்தவரை, இப்படம் இன்னொரு ‘பருத்தி வீரன்’ ஆக அமைந்திருக்கிறது. இதில் கிடைக்கும் வரவேற்பை அவர் எப்படியாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

நாயகி அருந்ததி வரும் காட்சிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனாலும், அவர் வருமிடங்கள் நம்மைச் சுண்டியிழுக்கிறது.

வழக்கமாக சீரியஸ் ரோல்களில் தோன்றி அழுதுகொண்டே இருக்கும் ‘செம்மலர் அன்னம்’, இதில் கோவை சரளாவின் ‘ஜெராக்ஸ்’ போல காமெடியில் பின்னியிருக்கிறார். எதிர்காலத்திலும் இது போன்ற வாய்ப்புகளை அவர் பற்றிக்கொள்ள வேண்டும்.

ஜார்ஜ் மரியான் உடன் வரும் பவன்ராஜில் தொடங்கிப் பலரும் இதில் வெடிச்சிரிப்பைப் பரிசளிக்கின்றனர். அந்தவகையில், ‘அபாரமான காஸ்டிங்கை’ பாராட்டாமல் இருக்க முடியாது.

ஒளிப்பதிவாளர் பானுமுருகன், பழுப்பும் மஞ்சளும் சேர்ந்த வண்ணத்தை பிரேம்களில் பூசியிருக்கிறார். அது போதாதென்று இருளை வேறு படரவிட்டு, ‘இதுவொரு சீரியஸ் படம்’ என்ற எண்ணத்தை ஊட்டுகிறார். ஆனால், திரைக்கதையோ வேறொரு சுவையை நமக்குத் தருகிறது. கலை இயக்குனர் பி.சண்முகம் அதற்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

படத்தொகுப்பாளர் ராம் – சதீஷின் கைவண்ணத்தில், இறுதியாகப் புதையலை ஊரே சேர்ந்து துரத்தும் காட்சி ஜொலிக்கிறது. அவர்களது பணி விருதுகளை அள்ளுவது நிச்சயம்!

இசையமைப்பாளர் ஜோஹன் இசையில் ’முழுசா நனைஞ்சு’ பாடல் சட்டென்று மனதோடு ஒட்டிக்கொள்கிறது. ’வெள்ளை காக்கா’, ‘போடா என் கொய்யக்கா’ பாடல்கள் துள்ளலாட்டத்தை விதைக்கிறது. இது போதாதென்று ’வேலவா.. வடிவேலவா..’ பாடலை ‘ரீமிக்ஸ்’ செய்து நம்மை ஆட்டுவித்திருக்கிறார்.

’இப்பாடல்களை விட ஒரு படி மேல்’ என்று சொல்லத்தக்க வகையில், பின்னணி இசையில் நகைச்சுவையையும் பரபரப்பையும் நிறைத்திருக்கிறார்.

இயக்குனர் ரவி முருகையா ஒரு சிறப்பான கதைசொல்லி என்பதைத் தனது முதல் படத்திலேயே நிரூபித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல், கதாபாத்திர வடிவமைப்பில் மிகச்சிறப்பான கவனத்தைக் கொட்டியிருக்கிறார். அதுவே இப்படத்தை நாம் ரசித்துச் சிலாகிப்பதற்குக் காரணமாகிறது.

விழுந்து புரண்டு சிரிக்கலாம்!

’பழக்கம் சார் ஆனா தெரியாது; தெரியாது சார் ஆனா பழக்கம் உண்டு’ என்று விதார்த், இன்ஸ்பெக்டராக வரும் பாரதிகண்ணனிடம் ஒரு காட்சியில் பதில் சொல்வார். அது போன்ற வசனங்கள் இந்த படத்தில் பல இடங்களில் வருகின்றன.

தஞ்சாவூர் வட்டாரத்தில் நடைபெறுவதாகக் கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர். ‘பூரா பயலுவளையும் போலீசில பிடிச்சு கொடுத்திருவேன்’ என்று சொல்லும் கந்தசாமி, ‘ஏ மரகதம்’ என்று சொன்னவாறே பஜ்ஜியைக் கத்திரிகோலால் வெட்டும் பாரதி கண்ணன், ‘யோவ் மாமா’ என்று முறுக்கைக் காட்டும் விதார்த், ‘இவ்ளோ பெரிய வீட்டை என் தலையில கட்டிட்டு இத்தூனுண்டு சொம்பை எடுத்துட்டு போறியே மாப்ள’ எனும் சரவணன், ‘உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு’ என்று சொல்லும் ஜார்ஜ் மரியான், ‘மூணு நாளா உங்களையே சுத்தி வர்றேன்’ எனும் பவன்ராஜ், ‘கம்முனாச்சி’ என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லும் வடநாட்டு பிச்சைக்காரர் பாத்திரம் என்று படத்தில் வரும் ஒவ்வொருவரையும் நினைவில் வைக்கும்படியாக வசனங்களை வாரியிறைத்திருக்கிறார் ரவி முருகையா.

வசனங்கள் மட்டுமல்லாமல், காட்சி நிகழும் சூழலை வைத்தும் சிரிப்பூட்டியிருக்கிறார். விதார்த் உடன் ஊரை விட்டு ஓடிப்போவதற்காக அருந்ததி தயாராகும் காட்சி அதிலொன்று. இரண்டாவது முறை அது வரும்போது நம்மையும் அறியாமல் சிரிப்பு படர்கிறது.

தொடக்கம் முதல் இறுதி வரை இப்படிச் சிரிக்கவைத்த படங்கள் சமீபகாலத்தில் மிகக்குறைவு. இந்த ஆண்டின் இறுதியில் இப்படியொரு சிரிப்பனுபவம் கிட்டுமென்று எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால், ‘விழுந்து புரண்டு சிரிக்கலாம்’ எனும் அளவுக்கு இருக்கிறது ‘ஆயிரம் பொற்காசுகள்’ திரைப்படம். அதுவே, இக்கதையில் ‘லாஜிக் மீறல்கள்’ பற்றி யோசிக்கவிடாமல் தடுக்கிறது. கூடவே, மிகக்குறைந்த பட்ஜெட்டில் நாடகத்தனம் ஏதுமின்றி இப்படியொரு காட்சியனுபவத்தைத் தருகிறதே என்று வியக்க வைத்திருக்கிறது. கொள்ளைச் சிரிப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

‘பார்ட் 2 வருமோ’ என்ற யூகத்தைக் கிளப்பியிருக்கிறது படத்தின் முடிவு. அதுவும் இது போன்ற அனுபவத்தைத் தந்தால் சரி. ரவி முருகையா மற்றும் ‘ஆயிரம் பொற்காசுகள்’ படக்குழு இதற்கான பலனை அடுத்த ஆண்டு அறுவடை செய்யட்டும்..!

– உதய் பாடகலிங்கம்

You might also like