ரெங்கையா முருகன்:
அண்மை வெளியீடான வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய ‘புலவர் புராணம்’ ஆராய்ச்சி உரை நூலினை பேரா.சு.வேங்கடராமன் & உ.த.ஆ.நிறுவன இணைப்பேராசிரியர் முனைவர் அ.சதீஷ் அவர்களும் இணைந்து தாமரை பிரதர்ஸ் மீடியா மூலம் வெளியிட்டுள்ளது.
முனைவர் அ.சதீஷ் அவர்கள் என் கரத்தில் புலவர் புராணத்தை அன்பளிப்பாக வழங்கிச் சிறப்பித்தார்.
தமிழ் இலக்கியத்தின் வரலாற்றின் குரு பரம்பரைகளை தமிழ் நாவலர் சரிதை, தமிழ் புளூடாக், பாவலர் சரித்திர தீபம், பெரியபுராணம், குரு பரம்பரை வரிசையில் இடம் பெற்றுள்ள ஆளுமைகளின் வரலாற்றிலிருந்து தண்டபாணி சுவாமிகள் மாறுபட்ட கோணத்துடன் தமிழ் ஆளுமைகளின் வரலாற்றை அகத்தியர் முதல் கண்கண்ட புலவர் ஈறாக 72 புலவர்களின் சருக்கங்களோடு 3005 பாடல்களுக்கு ஆராய்ச்சி உரையுடன் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நூலின் தனித்தன்மை ஆங்கில வழிக் கல்வி ஊடுறுவிய காலத்தில் ஆங்கில வழிக் கல்வி கற்காத இவர் தமிழகம் முழுவதும் பயணித்து கள ஆய்வு செய்து தரவுகளைத் திரட்டி காகிதம் வந்த காலத்தில் கூட ஆற்றல் மிக்க தமிழர் மரபு ஊடகமான பனைச்சுவடியில் எழுதினார்.
ஆங்கிலக் கல்வி தாக்கத்தினால் மனனப்பயிற்சியை விட்டொழித்து அரசுப் பணிக்காக தமிழ் மொழியை, மரபான கல்வியை கைவிட்டு வருவதைக் கண்ட தண்டபாணி சுவாமிகள் கொதித்துப் போய் கடுமையாக எதிர்க்கிறார்.
தாய்மொழியை கைவிடலாகாது என மொழியை காக்கும் ஆதிகர்த்தர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளே.
தாய்மொழி புறக்கணிப்பு, சமயப் புறக்கணிப்பு, சமய மாற்றம், சாதி வேறுபாடு, பெண்ணுரிமை மறுப்பு ஆகியவற்றை அனைத்தையும் எதிர்க்கும் முதன்மையான வள்ளலார் சம காலத்துப் போராளியாக விளங்குகிறார்.
சமூக சீர்திருத்தவாதிகளே கொஞ்சம் பாருங்க. தாயுமானவர், வள்ளலார், தண்டபாணி சுவாமிகள், கரபாத்திரசுவாமிகள் போன்றவர்கள் அமைதியாக பெரிய வேலை செய்தவர்கள்.
தண்டபாணி சுவாமிகள் படைப்பை அதற்குரிய மரியாதையுடன் மிகச் சிறப்பாக வெளியிட்ட தாமரை பிரதர்ஸ் மீடியா எவ்வளவு வாழ்த்தினாலும் தகும்.
ஒவ்வொரு தமிழர்களின் வீட்டிலும் திருக்குறள் போன்று இந்த நூலும் வீற்றிருக்க வேண்டும்.
பேரா.சு.வேங்கடராமன் & பேரா. அ.சதீஷ் அவர்களது ஆய்வுலகில் இந்த நூல் தமிழ்கூறும் நல்லுலகில் நிலைத்த புகழ்தரக் கூடிய மைல்கல் ஆய்வுப்பணி ஆகும்.
இந்த மாதிரியான நூல்கள் தரமான ஆய்வுக்குரிய வகையில் சிறப்பான முறையில் வருவதற்கு காரணகர்த்தாவாக விளங்கி வருபவர் நண்பர் திரு. சொக்கலிங்கம் அவர்களுக்கு நன்றி உரித்தாகுக.