புதிய குற்றவியல் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய 3 குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த சட்டங்கள்தான் தற்போது வரை அமலில் உள்ளன.

இதனிடையே, இவற்றுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு உருவாக்கியது.

அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் 3 குற்றவியல் மசோதாக்கள் இந்தியில் மாற்றப்பட்டு தாக்கல் செய்யப்பட்டன.

அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம் என்பதை பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் என்றும், குற்றவியல் நடைமுறை சட்டம் என்பதை பாரதிய நாகரிக் சுரக்ஷ சன்ஹிதா என்றும்,

இந்திய சாட்சியங்கள் சட்டம் என்பதை பாரதிய சாக்சியா என்றும் பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைத்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் 3 மசோதாக்களையும் தாக்கல் செய்தார்.

அதன் பின்னர், அவை நாடாளுமன்ற ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

நாடாளுமன்ற நிலைக்குழு தனது பரிந்துரைகளை அறிக்கையாக சமர்ப்பித்தது. அந்த பரிந்துரைகள் சேர்க்கப்பட்டு புதிய குற்றவியல் மசோதாக்கள் உருவாக்கப்பட்டன.

மேலும், நாடாளுமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் கடந்த வாரம் வாபஸ் பெறப்பட்டன.

இதையடுத்து, நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளுடன் கூடிய புதிய குற்றவியல் மசோதாக்களை ஒன்றிய உள்துறை அமித்ஷா தாக்கல் செய்தார்.

இந்த மசோதாக்கள் மீதான விவாதம் கடந்த 20-ம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

இதனிடையே நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பிய 140க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், மக்களவையில் 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இந்த 3 குற்றவியல் மசோதாக்களும் மாநிலங்களவையிலும் கடந்த 21-ம் தேதி நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து இந்த 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் தற்போது அமலுக்கு வந்துள்ளன.

You might also like