– பத்திரிகையாளரிடம் சொன்ன அண்ணா
*****
– பி.சி.கணேசனின் ‘தலைவர்களுடன் எனது அனுபவங்கள்’ நூலிலிருந்து.
******
“அண்ணா முதலமைச்சரானபோது, நான் காமராஜரின் ‘நவசக்தி’ நாளேட்டில் ஆசிரியராக இருந்தேன். அண்ணாவின் தனிச்செயலாளர் ஒருவரின் ஊழலைப் பற்றி தொடர்ச்சியாக எழுதி வந்தேன்.
அண்ணா என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். நுங்கம்பாக்கத்திலிருந்த அவருடைய இல்லத்திற்குச் சென்றேன்.
சிறிது நேரம் நட்புடன் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு குறிப்பிட்ட கட்டுரையைப் பற்றி கேட்டார். தகுந்த ஆதாரங்களுடன் எழுதுவதாகச் சொன்னேன்.
அவர் சொன்னார், “நீ ஒரு பத்திரிகையாளன். உன்னுடைய சுதந்திரத்தில் நான் தலையிட முடியாது.
எனக்கு நெருக்கமான அரசு அதிகாரியின் ஊழலைப்பற்றி எழுதுகிறாய். அதிகாரி என்கிற முறையில் அவர் மறுப்பு சொல்வது சரியாக இருக்காது. முதல்வர் என்கிற முறையில் நானும் அபிப்பிராயம் சொல்ல விரும்பவில்லை.
என்னுடைய உணர்ச்சிகளை தெரிவித்துவிட்டேன். உனக்கு எதுசரி என்று படுகிறதோ அப்படி செய்” என்று கூறி தேநீர் கொடுத்து உபசரித்தார். பின்னர் பொது விஷயங்களை சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு விடைபெற்றேன்.
மறுநாள் காமராஜரை சந்தித்து, அண்ணாவுடன் நடந்த உரையாடலைக் குறிப்பிட்டேன். அவர் உடனே சொன்னார்.
“அவர் கேட்டுக் கொண்டே பிறகு அந்தக் கட்டுரையை முடித்து விடுவதுதான் சரி. ஊழலை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு வருவதுதானே கட்டுரையின் நோக்கம். அந்தக் காரியம் முடிந்தபிறகு அதைத் தொடர வேண்டிய அவசியமில்லை”. கட்டுரையை உடனே நான் நிறுத்திவிட்டேன்.
விஷயம் தெரியாதவர்கள் எனக்கு பல்வேறு நோக்கங்கள் கற்பித்து விமர்சனங்கள் செய்தார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.
தமிழகத்தின் இரண்டு பெரும் தலைவர்கள் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையை எவ்வளவு நாகரீகத்துடனும், அடக்கத்துடனும் அணுகினார்கள் என்பதை அறிந்து கொள்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
காமராஜர், அண்ணா போன்ற தலைவர்கள் அரசியல் அறிவால் மட்டும் உயரவில்லை. அவர்கள் கடைபிடித்த அடக்கத்தினாலும் தான் பெரிய நிலைக்கு உயர்ந்தார்கள்.
பொது வாழ்க்கை என்பது மக்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பு என அவர்கள் எண்ணினார்கள்.
கிடைக்கின்ற ஆயுதம் எதுவானாலும் அதைப் பயன்படுத்தி அரசியல் எதிரியை வீழ்த்த வேண்டும் என அவர்கள் எண்ணியதில்லை. ஒப்பற்ற மக்கள் தலைவர்களாக அவர்கள் உயர்ந்ததற்கு அதுவே காரணம்.”
– பி.சி.கணேசனின் ‘தலைவர்களுடன் எனது அனுபவங்கள்’ நூலிலிருந்து.