கருங்கல்லில் புராதனத்தின் பழுப்பேறிய கோட்டை மாதிரியான வளைவு. முகப்பில் ‘தி மாடர்ன் தியேட்டர்ஸ் லிமிடெட்’ என்கிற பெயர் புதைந்திருக்கிறது.
இற்றுப் போயிருக்கின்றன சுற்றுச்சுவர்கள். உயர்ந்த, வயதான அரசமரத்து நிழலில் இளைப்பாறுவது மாதிரி முப்பது அடி உயரத்தில் மாடர்ன் தியேட்டர் நுழைவு வாயில்.
சேலத்திலிருந்து ஏற்காடு போகிற வழியில் பச்சையாய் மலைத்தொடர் ஆரம்பிக்கிற இடத்தில் இருக்கிற இந்த ஸ்டுடியோ இருப்பது 11 ஏக்கர் பரப்பில். உள்ளே அங்கங்கே சில கட்டிடங்கள் மிஞ்சியிருக்கின்றன.
ஒரு காலத்தில் நான்கு ஃப்ளோர்களுடன் பரபரப்பாக இயங்கிக் கனவுகளின் விளைச்சல் நிலமாக இருந்த ஸ்டுடியோ இப்போது வெறிச்சோடிக் கிடக்கிறது.
டி.ஆர். சுந்தரம்.
சேலத்துக்காரரான இவருக்கு சினிமாவில் ஆர்வம். அப்போது சேலத்திலிருந்த ஏஞ்சல் பிலிம்ஸில் இவரும் ஒரு பார்ட்னர்.
அந்தச் சமயத்தில் ஏறத்தாழ 300 பேர்களுடன் சின்னுசாமி நாய்கர் என்பவர் மகாபாரதக் கதைகளை நாடகமாக போட்டுக்கொண்டிருந்தார்.
அதைப் பார்த்த சுந்தரத்திற்கு ஒரு யோசனை. ஏற்காடு மலையடிவாரத்தில் நாமே ஒரு சினிமா ஸ்டுடியோவை ஆரம்பித்தால் என்ன?
வெளிநாட்டில் படித்து முடித்துவிட்டுத் திரும்பியிருந்த இவர் ஸ்டுடியோவுக்குத் தேவையான கருவிகளை வரவழைத்தார்.
ஒரு வழியாக 1936-ல் மாடர்ன் தியேட்டர்ஸ் துவக்கவிழா நடந்தபோது அதில் கலந்துகொண்டவர் மதுரகவி பாஸ்கரதாஸ்.
1937-ல் இங்கு தயாரிக்கப்பட்டு வெளிவந்த ‘சதி அகல்யா’வில் பாடல்கள் எழுதியது இவர்தான்.
மளமளவென்று தமிழ், மலையாள, கன்னடப் படங்கள். 1938-ல் மட்டும் ஐந்து படங்கள். 1941-ல் பி.யூ. சின்னப்பா இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த ‘உத்தமபுத்திரன்’ பெரும் வெற்றி.
பல படங்களை இயக்கியிருக்கிற ‘டி.ஆர்.எஸ். என்கிற டி.ஆர். சுந்தரம் செய்யும் தொழிலில் அவ்வளவு ‘ஸ்டிரிக்ட்.’ அவரது அறையில் தலைப் பகுதியில் ஒரு சவுக்கு தொங்கும்.
பி.யூ சின்னப்பா உட்பட பலருக்கும் அவரிடம் பயம். சினிமா சம்பந்தப்பட்ட சகலமும் அவருக்கு அத்துப்படி.
ஒருமுறை ‘சதி சுலோசனா’ படம். இந்திரஜித்தாக நடிக்க வேண்டிய பி.யூ. சின்னப்பா வருகிற மாதிரித் தெரியவில்லை. பார்த்தார் சுந்தரம். ‘தயாராக இருங்கள்’ என்று சொல்லிவிட்டு மேக்கப் அறைக்குள் போய் இந்திரஜித்தாகத் திரும்பினார். நடித்தார். படமும் வெற்றி. நடிகர்கள் பயப்பட மாட்டார்களா?
1947-ல் ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ படத்திற்குத் திரைக்கதை வசனத்துடன் பாட்டும் எழுதியவர் பாரதிதாசன். அதற்கடுத்து வசனம் எழுத வந்தவர் கலைஞர். அவருக்கு அப்போது மாதச் சம்பளம்.
இன்றும் தனது வசன நடைக்கு மெருகூட்டியவராக அவர் குறிப்பிடுவது டி.ஆர்.சுந்தரத்தை.
அந்த நேரத்தில் மாடா்ன் தியேட்டர்ஸ் நடத்திய ‘சண்டமாருதம்’ பத்திரிகையில் 150 ரூபாய் சம்பளத்தில் ஆசிரியராக வந்தவர் கவிஞர் கண்ணதாசன்.
‘டி.ஆர்.எஸ். என் முதலாளி. அவரை நான் மறக்க முடியாது. அன்றைக்கு எனக்கிருந்த நிம்மதி இன்றில்லை’ என்றிருக்கிறார் அவர்.
பாட்டு ரிக்கார்டிங் எல்லாம் இங்கேயே நடக்கும். கே.ஆர். ராமசாமி, டி.எம்.எஸ்., பானுமதி என்று பலர் பாடியிருக்கிறார்கள்.
இருந்தும் சந்திரபாபு பாடும்போது தமாஷாக இருக்கும். ரிக்கார்டிங் தியேட்டருக்குள்ளேயே பாடிவிட்டு இடையில் மியூசிக் வருகிறபோது அங்குமிங்கும் ஓடி ஆடிவிட்டுப் பாடல் வரி துவங்கும்போது சரியாக மைக் பிடித்துப் பாடுவார்.
எம்.எஸ்.வி., வேதா, தட்சிணாமூர்த்தி என்று பலர் இசையமைத்திருக்கிறார்கள். அப்படி எல்லா வசதிகளும் கொண்ட ஸ்டுடியோ மூடப்பட்டது எங்களுக்கு இழப்பு.
“பழைய நினைவுகள் லயிக்கச் சொல்கிறார் மாடர்ன் தியேட்டர்ஸில் வேலை பார்த்தவரான 65 வயதான ஜனார்த்தனன்.
1937-ல் ஆரம்பித்து 1982-ல் மூடப்படுகிறவரை இதில் எடுக்கப்பட்ட படங்கள் 118. கடைசிப் படம் கல்யாணி (தெலுங்கு). தமிழில் ‘வெற்றி நமதே.’
திராவிட இயக்கத் தலைவர்களை, கவிஞர்களை எல்லாம் செயல்படத் தூண்டியிருக்கிற, சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு 1938-லேயே ‘மாய மாயவன்’ படத்தில் காந்தியைப் பற்றிய பாடலைச் சேர்த்த, 1940-ல் வெளிவந்த உத்தமபுத்திரனில் பாரதி பாடலை இணைத்து சமூக அக்கறையையும் வெளிப்படுத்திய மாடர்ன் தியேட்டர்ஸின் சாதனையைச் சொல்ல அவர்கள் 1953-ல் எடுத்த படத்தின் பெயரே ரொம்பப் பொருத்தம்.
அந்தப் படம் ‘திரும்பிப் பார்.’
அந்திமழை வெளியிட்ட மணாவின் ‘தமிழகத் தடங்கள்’ நூலிலிருந்து…