இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக 18 படங்களில் பணியாற்றிய வசந்த், முதன் முதலாக இயக்கிய படம் கேளடி கண்மணி.
இன்றும் இசைப் பிரியர்களின் ப்ளே லிஸ்டில் விரும்பிக் கேட்கப்படும் பாடல்கள் நிறைந்த அந்த படத்தின் நாயகன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
மக்களின் இதயங்களில் தலைசிறந்த பாடகராக அரியணை போட்டு அமர்ந்திருக்கும் எஸ்.பி.பி., 1990 ஆம் ஆண்டிற்கு முன் ஒரு தமிழ் படத்தில் சிறு வேடத்தில் தோன்றியிருந்தாலும் அவரை நாயகனாக யாரும் யோசித்திருக்க முடியாது.
ஆனால் வசந்தின் திரைக்கதை அவரை நாயகனாக்கி கேளடி கண்மணியை 280 நாட்களுக்கு மேல் ஓட வைத்தது.
1991 ஆம் ஆண்டு, நீ பாதி நான் பாதி படம் வசந்தின் இயக்கத்தில் வெளியானது.
ட்ரிபிள் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது பெற்ற கொடுரி மரகதமணி கீரவாணி, தமிழ் சினிமாவிற்கு இந்த படம் மூலமாகத்தான் அறிமுகமானார்.
இரண்டு படங்களுக்கு பிறகு 4 ஆண்டுகள் இடைவெளி எடுத்துக் கொண்டார் வசந்த்.
1995 ஆம் ஆண்டு அவர் இயக்கிய ‘ஆசை’ திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார் சுவலட்சுமி.
இசையமைப்பாளர் தேவாவிற்கும் திருப்புமுனையாக அமைந்த அந்த படம், நாயகன் அஜித்தையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
வசந்தின் 4 வது படமான நேருக்கு நேர். இதில் இன்றைய முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் சூர்யா நடித்துள்ளனர். சூர்யா எனும் மாபெரும் கலைஞனின் மழலை நடைக்கு சிவப்புக் கம்பளம் விரித்தது.
கணவன் மனைவி பிரிவிற்குப் பிறகு அவர்களது சகோதரர்களின் இடையே நடக்கும் மோதலை வைத்து படத்தை இயக்கிய ரசிகர்களுக்கு விருந்து படைத்திருப்பார் இயக்குநர் வசந்த்..
சீரியஸான படங்களை இயக்கிக் கொண்டிருந்த வசந்த், பூவெல்லாம் கேட்டுப்பார் எனும் நகைச்சுவை கலந்த படத்தை இயக்கி வெற்றி கண்டார். அந்த படம் தான் சூர்யா – ஜோதிகா ஜோடி சேர்ந்த முதல் படம்.
இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வசந்த், தான் இயக்கிய படங்களில் தனக்கு நெருக்கமானதாக குறிப்பிடும் படம் ரிதம்.
இந்தப் படத்தில் முதன் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் உடன் கூட்டணி அமைத்தார் வசந்த். தமிழ்நாடு முழுவதும் பெரும் ஹிட்டடித்த ஆல்பம் அது.
இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என ஐம்பெரும்பூதங்களை குறிப்பிடும் வகையில் தனது தனித்துவத்தை வசந்த் பதிவு செய்திருப்பார்.
2003 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே’ படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களை 5 இசையமைப்பாளர்களைக் கொண்டு இசையமைத்து ஹிட்டடித்தார்.
வசந்த் திரைப்படங்களுக்கு மத்தியில் நிறைய விளம்பர படங்கள் குறும்படங்கள் மற்றும் ஆவணப் படங்களையும் இயக்கி உள்ளார்.
சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான சா.கந்தசாமி எழுதிய ‘விசாரணை ஆணைய’த்தை அடிப்படையாக கொண்டு இவர் இயக்கிய தங்கையின் மீது நான்கு கண்கள் என்ற குறும்படம் சிறந்த கற்பனை குறும்படத்திற்கான தேசிய விருதை கடந்த 2005ல் பெற்றார்.
40க்கும் மேற்பட்ட விளம்பர படங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்காக விஜய் டிவிக்கு மணிரத்னத்துடன் இணைந்து இயக்கி உள்ளார்.
வசந்தின் சிவரஞ்சனியும இன்னும் சில பெண்களும் படத்திற்கு 3 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.
இது சிறந்த திரைப்படம், சிறந்த துணை நடிகர், சிறந்த எடிட்டர் என 3 பிரிவுகளின் கீழ் விருது கிடைத்துள்ளது.
அதுமட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு ஜப்பான் உள்ளிட்ட பல இடங்களில் மொத்தம் 27 விருதுகளை பெற்றுள்ளது. இந்த படம் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.
ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹா பேசும் சிறப்பான தரமான சம்பவம் எனும் டையலாக் இடம்பெற்றிருப்பதை போல, இதுவரை 11 படங்களை மட்டுமே இயக்கி உள்ள வசந்தின் ஒவ்வொரு படமும், ரசிகர்களின் மொழியில் தரமான சம்பவங்கள் தான்.
90-களில் தொடங்கிய வசந்தின் திரைப்பயணம் இன்று வரை தொடர்வதனால் தான் அவர் தமிழ் சினிமாவின் தனித்துவ இயக்குநராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.
நன்றி: முகநூல் பதிவு