எழுத்தாளர் இந்திரன்
பிராந்திய மொழி இதழ்களில் முதன் முதலாக கார்ட்டூன்களை அறிமுகப்படுத்தியவர் பாரதியார்தான் என்பது பலருக்குத் தெரியாது. தனது ‘இந்தியா’ பத்திரிகையில் கார்ட்டூன்களை வெளியிட்டவர் பாரதியார்.
ஒரு கலை விமர்சகன் என்ற வகையில் நான் பாரதியார் தமது ‘இந்தியா’ இதழில் 1906 – 1910இல் வெளியிட்ட ‘விகட சித்திரங்கள்’ குறித்து ஆராய்ந்தேன்.
அதில் 20 ஏப்ரல் 1907இல் வெளியிடப்பட்ட ஒரு கார்ட்டூனை மட்டும் பார்ப்போம்.
1890-ல் ராஜா ரவிவர்மா தீட்டிய கால்மேல் கால் போட்டு வீணையுடன் அமர்ந்திருக்கும் ‘சரஸ்வதி’ ஓவியத்தை உங்களுக்குத் தெரியும்.
அதனை அடிப்படியாகக் கொண்டு பாரத மாதாவை சிருஷ்டித்து இருக்கிறார்கள்.
இதில் ரவிவர்மா ஓவியத்தில் இருக்கும் கிரீடம் இல்லை. காரணம் பாரதமாதா பிரிட்டீஷாரிடம் அடிமைப்பட்டு இருக்கிறாள்.
நான்கு கரங்களில் இரண்டு கரங்களை நீக்கி விட்டார்கள். வீணையின் குடத்தின்மீது இருக்கும் கை அமைப்பைக்கூட மாற்றாமல் அப்படியே வரைந்து இருக்கிறார்கள்.
ஆனால், வீணையின் குடத்துக்குப் பதிலாக ஒரு உலக உருண்டையாக மாற்றி காட்டி இருக்கிறார் பாரதியார்.
அதில் உலக வரைபடத்தில் இந்தியாவின் படம் இருக்கிறது. ரவிவர்மா படத்தில் சுவடி தாங்கிய கை பாரதியார் கார்ட்டூனில் ஆசீர்வதிப்பதாக அமைந்திருக்கிறது.
பாரதமாதா தன்னிடம் பணிந்திருக்கும் இந்துக்களை மட்டுமின்றி இஸ்லாமியர்களையும் ஆசீர்வதிப்பதாகக் காட்டியிருக்கிறார்.
இன்றைய இந்துத்துவ அரசியலின் கை மேலோங்கி இருக்கும் காலத்தில் பாரதி இஸ்லாமியர்களையும் பாரத மாதா ஆசீர்வதிப்பதாகக் காட்டியிருக்கும் கார்ட்டூன் மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
‘இந்தியா’ இதழ் கார்ட்டூன்கள் பற்றி பாரதியார் கீழ்க்கண்டவாறு குறிக்கிறார்.
”இந்தியா பத்திரிகையில் புதிய அபிவிருத்தி. தமிழ்நாட்டு வர்த்தமான பத்திரிகைகளிலே நமது பத்திரிகையொன்றுதான் விகட சித்திரங்களை பதிப்பித்து வருவதென்ற விஷயம், நம் நேயர்களுக்குத் தெரிந்திருக்கும்.
ஆனால் அடுத்த வாரம் இன்னொரு புதிய அலங்காரம் நமது பத்திரிகைக்குச் செய்யக் கருதியிருக்கிறேன்.
அதாவது தலைப் பக்கத்திலுள்ள ஒரு சித்திரம் மட்டுமின்றி பக்கத்துக்குப் பக்கமுள்ள முக்கியமான வர்த்தமானங்களை விளக்குவதின் பொருட்டு அங்கங்கே சிறிய படங்களும் சித்திரங்களும் போடுவதாக உத்தேசம்.
தென்னிந்தியாவிலே இத்தகைய ஏற்பாடு தமிழ், தெலுங்கு, கன்னடம், இங்கிலீஷ் முதலிய எந்த பாஷைப் பத்திரிகையிலும் இதுவரை கிடையாது.”