மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படும் 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் 3-ம் தேதி எண்ணப்படுகின்றன.
இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் என தெரிய வந்துள்ளது.
சத்தீஸ்கரில் அந்தக் கட்சி ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும். ராஜஸ்தானில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றும்.
மத்தியபிரதேசத்தில் இழுபறி நிலை இருந்தாலும், பாஜக வெற்றி பெறும் என சில கணிப்புகள் சொல்கின்றன. மிசோரமில் இழுபறி நிலை ஏற்படும்.
மத்தியபிரதேசம்
பரப்பளவில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமான மத்தியபிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ளன. ஆட்சி அமைக்க 116 இடங்கள் தேவை.
அந்த மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடிப்போட்டி நிவுகிறது. பல்வேறு தொலைக்காட்சிகள் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளைப் பார்க்கலாம்.
தொலைக்காட்சி பாஜக காங்கிரஸ்
டைம்ஸ் நவ் 105- 117 109- 125
இந்தியா டிவி 140- 159 70- 89
ரிபப்ளிக் டிவி 118- 130 97-107
ஜன் கி பாத் 100-123 102-125
ராஜஸ்தான்
ராஜஸ்தானில் அசோக்கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது.
மொத்தமுள்ள தொகுதிகள் 200. பெரும்பான்மைக்கு 101 இடங்கள் வேண்டும்.
இந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தொலைக்காட்சி பாஜக காங்கிரஸ்
டைம்ஸ் நவ் 108-128 56-72
இந்தியா டிவி 80- 90 94-104
ரிபப்ளிக் டிவி 115-130 65-75
ஜன் கி பாத் 100- 122 65-85
தெலுங்கானா
தெலுங்கானா மாநிலம் 2014 ஆம் ஆண்டு உருவானது.
கடந்த இரண்டு தேர்தல்களிலும் டி.ஆர்.எஸ். எனப்படும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி வென்றது. சந்திரசேகர ராவ் முதலமைச்சராக இருக்கிறார்.
கட்சியின் பெயரை அவர், சில மாதங்களுக்கு முன்னர் பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) என மாற்றினார். அங்கு மொத்தம் 119 தொகுதிகள் உள்ளன.
பெரும்பான்மைக்கு 60 இடங்கள் தேவை என்ற நிலையில், அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என தெரிய வந்துள்ளது.
தொலைக்காட்சி பி.ஆர்.எஸ் காங்கிரஸ்
டைம்ஸ் நவ் 37-45 60-70
இந்தியா டிவி 31-47 63-79
ரிபப்ளிக் டிவி 46-56 58-68
ஜன் கி பாத் 40-55 48-64
சத்தீஸ்கர்
சத்தீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது.
மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 46 இடங்களை வென்றால் ஆட்சி அமைக்கலாம்.
அந்த மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சி , ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் என தெரிய வந்துள்ளது.
தொலைக்காட்சி பாஜக காங்கிரஸ்
டைம்ஸ் நவ் 32-40 48-56
இந்தியா டிவி 30-40 48-56
ரிபப்ளிக் டிவி 34-42 44-52
ஜன் கி பாத் 34-45 42-53
மிசோரம்
மிசோரம் மாநிலத்தில் ஜோரம் தங்கா தலைமையிலான மிசோ தேசிய முன்னணியின் ஆட்சி நடக்கிறது. அங்கு மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன.
ஆட்சி அமைக்க 21 இடங்கள் தேவை.
அந்த மாநிலத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அங்கு தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் வலுவாக இல்லை.
ஆளுங்கட்சியான மிசோ தேசிய முன்னணி ,14 முதல் 18 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும். ஜோரம் மக்கள் கட்சிக்கு 17 இடங்கள் கிடைக்கும்,
காங்கிரஸ் 8 தொகுதிகளிலும், பாஜக ஒரு இடத்திலும் வெல்லும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. 5 மாநில தேர்தல் முடிவுகள் ஞாயிறு பிற்பகலில் வெளியாகி விடும்.
– பி.எம்.எம்.