துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி?

அரசியலில் வாரிசுகள் வரவை இரண்டாக வகைப்படுத்தலாம்.

விபத்துபோல், எதிர்பாராத விதமாக அரசியலுக்குள் இழுக்கப்படுவது ஒரு ரகம்.

விமானியாக இருந்த ராஜீவ்காந்தி, பிரதமராக இருந்த தனது தாயார் இந்திரா காந்தி மறைவுக்கு பின், வேறுவழி இல்லாமல் பிரதமர் பொறுப்பை ஏற்று அரசியலுக்கு வந்தது அந்த ரகம்.

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரும் இதே ரகத்தைச் சேர்ந்தவர்கள்.

திட்டமிட்டு, இளமையில் இருந்தே கூர் தீட்டப்பட்டு, சரியான நேரத்தில் நாற்காலியில் அமர வைக்கப்படுவர்கள் இன்னொரு ரகம்.

நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி உள்ளிட்டோர் இதில் அடங்குவர்.

மு.க.ஸ்டாலின்

14 வயதில் மு.க.ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை ஆரம்பமானது. நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு  ‘கோபாலபுரம் இளைஞர் தி.மு.க’ என்ற அமைப்பை உருவாக்கி, மாணவப் பருவத்திலேயே அரசியல் செயல்பாடுகளில் இறங்கினார்.

அந்த அமைப்பே பிற்பாடு திமுக இளைஞர் அணியாக உருமாறியது.

திமுக இளைஞர் அணியின் முதல் மாநாடு 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நெல்லைச் சீமையில் நடைபெற்றது.

அந்த அணியின் செயலாளராக ஸ்டாலின் இருந்தார். மாநாட்டை அவரே முன்நின்று நடத்தினார்.

மாநாட்டையொட்டி 2007 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 2 ஆம் தேதி வரை தொடர்ச்சியாக முரசொலி இதழில் கருணாநிதி, 25 கடிதங்கள் எழுதினார்.

‘இளைஞர்களுக்கு வழி விடுவோம்’ என்பது அந்த கடிதங்களுக்கு அவர் வைத்த தலைப்பு. ‘ஸ்டாலினுக்கு வழி விடுவோம்’ என்பதே அதன் அர்த்தம்.

மாநாடு நிறைவுற்ற 2 ஆண்டுகளில் ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

அதன் பின்னர், தேர்தல்களின் போது, தோழமைக் கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்துவது, இடங்கள் ஒதுக்குவது உள்ளிட்ட அனைத்துக் கட்சி வேலைகளையும் தானே எடுத்துக்கொண்டார், ஸ்டாலின்.

பின்னர் அவர் முதலமைச்சரானது வரையிலான நிகழ்வுகளை உலகம் அறியும்.

உதயநிதி

தாத்தா கருணாநிதி இருந்த காலத்தில் உதயநிதி ஸ்டாலின், அரசியலில் ஆர்வம் காட்டவில்லை.

திரைப்படத் தயாரிப்பு, விநியோகம், நடிப்பு என பொதுவெளியில் முகம் காட்டிய உதயநிதி, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு, அரசியலில் காலடி எடுத்து வைத்தார்.

அதே ஆண்டு திமுக இளைஞர் அணியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இப்போது உதயநிதியின் அடுத்தக் கட்ட பயணத்துக்கான ஆயத்தங்கள் ஆரம்பமாகி விட்டன.

திமுக இளைஞர் அணியின் இரண்டாம் மாநாடு சேலத்தில் டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது.

அந்த அணியின் செயலாளராக இருக்கும் உதயநிதி மாநாட்டை நடத்துகிறார்.

‘இளைஞர்களுக்கு வழி விடுவோம்’ எனும் தலைப்பில் கருணாநிதி 16 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கலைஞர் கடிதம் முரசொலியில் கடந்த 23 ஆம் தேதி முதல் மறுபிரசுரம் செய்யப்பட்டு வருகிறது.

சேலம் மாநாடு நடைபெறும் 17 ஆம் தேதி கடிதத்தின் கடைசி பாகம் முடிவுறும்.
மாநாட்டை சிறப்பாக நடத்தியதற்கான பரிசாக உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியை அளிக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

நெல்லையில் மாநாடு நடத்திய ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைக்க 2 ஆண்டுகள் ஆனது.

ஆனால், உதயநிதி அத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்காது.

மாநாடு முடிந்ததும், அவருக்கு அந்த பதவி கிட்டிவிடும் என்பதே திமுகவினர் கருத்து.

கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அதனை சூசகமாக சொல்லி விட்டார்.

‘உதயநிதி அனைவர் மனதிலும் நிறைந்திருக்கிறார் – அவருக்கான உயரங்களும் விரைவில் போட்டியின்றி அவருக்கு தானாகவே வந்து சேரும்’ என்று கட்டியம் கூறி விட்டார் துரைமுருகன்.

உதயநிதிக்கு புத்தாண்டு பரிசு ரெடி.

– பி.எம்.எம்.

You might also like