இந்து முஸ்லிம் ஒற்றுமை குறித்து மகாகவி பாரதி!

  • அ. மார்க்ஸ்

சுதந்திரத்திற்கு முந்திய இந்தியாவில் இந்து முஸ்லிம் மோதல்கள் குறித்து தனது ‘இந்தியா’ நாளிதழில் மகாகவி பாரதி எழுதிய ஒரு குறிப்பு குறித்து.

கி.பி 1909 தொடக்கத்தில் “பெங்காளத்தில் (வங்கத்தில்) நடந்து வந்த இந்து – முஸ்லிம் மோதல் குறித்துத் தனது ‘இந்தியா’ இதழில் பாரதி எழுதிய ஒரு கவலை தோய்ந்த கட்டுரையிலிருந்து சில:

(இந்தியா, 30 01. 1909, பக்.2). இந்தப் பதிவை அ. மார்க்ஸ், தன் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இனி பாரதி:

“பல நூற்றாண்டுகளாக அண்ணன் தம்பிபோல வாழ்ந்து வந்தவர்கள் திடீரென்று நிஷ்காரணமாகச் சண்டைகள் போட்டுக் கொள்வது நமது ஜாதீய வாழ்வுக்கே பெரியதோர் அவமதிப்பாகும். இப்போது நம்முன்னே நிற்கும் இந்தப் புதிய விபத்திற்கு உபாயம் பின் வருமாறு:

“இந்துக்கள் தமது சபைகளிலும் பொதுக் கூட்டங்களிலும், ஆடல், பாடல் கச்சேரிகளிலும், பாட சாலைகளிலும், உத்தியோகச் சாலைகளிலும், மகமதியர்களை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். மகமதியர்களும் இவ்வாறே ஹிந்துக்களிடம் நேரம் பாராட்டுதல் வேண்டும்.

சமீபத்தில் லார்டு மார்லி சீர்திருத்தக் கதையொன்று வெளியிட்டாரல்லவா? அதிலிருந்து ஏற்கனவே காங்கிரஸ் கட்சியாருக்கும் ‘இந்தியன் முஸ்லிம் லீக்’ என்ற சங்கத்தாருக்கும் பரஸ்பர மார்ச்சரியங்கள் உண்டாய் விட்டன.

முஸ்லிம் சங்கத்தார் இன்னின்ன விஷயங்களில் தமது வகுப்பினரைக் காட்டிலும். இந்துக்களுக்கு அதிக நன்மைகள் கொடுக்கப்பட்டுவிட்டன வென்று முறையிடுகிறார்கள்.

அதற்குள் தர்மாவதாரமாகிய அலஹாபாத்திப் “பயோனீர்” பத்திரிக்கை “ஐயோ பாவம்! லார்டு மார்லி இந்துக்களுடன் சேர்ந்துகொண்டு மகமதியர்களுக்கு விரோதம் செய்கிறார்.

மகமதியர்களுக்கு இப்படி கவர்மெண்டார் வஞ்சகம் செய்வது நியாயமே யில்லை” என்று சொல்லி ஓநாய்க் கண்ணீர் வடிக்கின்றது.

லண்டனிலே ஸ்ரீமான் அமீர் ஆலி முதலிய சில மகமதிய கனவான்கள் சீர்திருத்தங்களின் சம்மதமாக லார்டு மார்லியைச் சந்தித்து விண்ணப்பம் செய்ததாகத் தெரிகிறது.

இந்த மாதிரியான விஷயங்களில் பெரும்பகுதியரான இந்துக்கள் சிறு பகுதியரான மகமதியர்களின் இஷ்டப்படியே நடந்துகொள்ளுதல் நேச வளர்ச்சிக்கு மிகவும் நியாயமாகும்.

இதில் இகழ்ச்சி நேரிடுமாயின், அதிலிருந்து பெருங்கெடுதிகள் விளைவதற்கிடமுண்டு என்றதிலும் ஒருபோதும் வரப் போகாதெனவும், வரினும் பயனற்றனவுமாகிய மார்லியின் சீர்திருத்தங்களுக்கு இந்த ஜனங்கள் ஒருவரை யொருவர் முட்டிக் கொள்வது வியப்பைத் தருகிறது.

“பிறவாத பிள்ளையை ஸ்வீகாரம் கேட்டுப் பிரமாதச் சண்டனை வளர்த்தல்” என்ற வேதநாயகம் பிள்ளை கதை நினைப்பிற்கு வருகின்றது”

என் குறிப்பு: மகாகவி பாரதி இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு அளிக்கும் முக்கியத்துவம் இங்கு குறிப்பிடப்படவேண்டிய ஒன்று.

அது மட்டுமல்ல இந்து முஸ்லிம் ஒற்றுமைக்குக் கேடுவரும் நிலை ஏற்பட்டால், அதில் கூடுதல் பொறுப்புடன் நடந்துகொள்வதில் பெரும்பான்மைச் சமூகத்தினரான இந்துக்களின் பங்கு கூடுதலாக இருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டுவது நம் மனதை நெகிழ்விக்கிறது.

பெரும்பான்மைச் சமூகத்தினர் மத்தியில் சிறுபான்மை வெறுப்பு இன்று தூண்டப்படும் நிலையில், பாரதியின் இந்தப் பார்வையின் முக்கியத்துவம் நம் நெஞ்சை நெகிழ்விக்கிறது.

இஸ்லாம் மார்க்கத்தின் சிறப்பு அம்சங்கள் என்றெல்லாம் அவர் தொடர்ந்து எழுதிவந்தவற்றில் சில குறித்து நான் முன்னதாகப் பதிவு செய்துள்ளமை நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.

  • சீனி விசுவநாதனின் கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் நான்காம் தொகுதி.
You might also like