ஒரு படத்தின் டைட்டிலில் ‘காதல்’ இடம்பெற்றிருந்தால் நம் மனதில் என்னென்னவோ எண்ணங்கள் தோன்றும். புகழ்பெற்ற நடிகர் நடிகைகள் அதில் நடிக்கின்றனர் எனும்போது, நம் எதிர்பார்ப்பு பன்மடங்காகும். இதற்கு முன்னர் அவர்கள் சேர்ந்து நடிக்கவில்லை என்றறியும்போது, புதுவிதமான ‘கெமிஸ்ட்ரி’யை திரையில் பார்க்கலாம் என்று ஆசைப்படுவோம். அது இயல்பும் கூட.
‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ படத்தைத் தந்த இயக்குனர் ஜியோ பேபி உடன் நடிகர் மம்முட்டியும் ஜோதிகாவும் இணைகின்ற படத்துக்கு ‘காதல் – தி கோர்’ எனும் டைட்டில் சூட்டப்பட்டபோது, அப்படியொரு எதிர்பார்ப்பே ரசிகர்கள் மத்தியில் உண்டானது. திகட்டத் திகட்ட ஒரு ‘ரொமான்ஸ் மூவி’ பார்க்கப் போகிறோம் என்ற எண்ணம் மலையெனப் பெருகியது.
அப்படித் திரையரங்குகளுக்கு வருபவர்களை ஏமாற்றிவிடக் கூடாது எனும் நோக்கில், படம் வெளியாவதற்கு முன்னரே இதில் மம்முட்டி தன்பாலின ஈர்ப்பாளராக நடித்துள்ளார் எனும் தகவல் படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. மம்முட்டியின் ரசிகர்கள் மட்டுமல்ல, சாதாரண மக்களும் கூட இதனைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
அதேநேரத்தில், ரசிகர்கள் வேறெதையோ எதிர்பார்த்து வந்து எரிச்சலோடு வீடு திரும்பக் கூடாது என்ற அக்கறை என்னை வசீகரித்தது. அதுவே இப்படத்தைக் காணத் தூண்டியது.
சரி, இந்த படம் எப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது?
காதல்கள் பல வகை!
வங்கி ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெறுகிறார் மேத்யூ (மம்முட்டி). இவரது தந்தை தேவஸி இடதுசாரிக் கட்சியொன்றில் தீவிரமாகப் பணியாற்றியவர். அதன் தொடர்ச்சியாக, மேத்யூவும் அதில் தன்னைப் பிணைத்துக் கொள்கிறார். அதன் காரணமாக, வார்டு கவுன்சிலர் தேர்தலில் மேத்யூவை நிறுத்த கட்சியினர் முடிவு செய்கின்றனர். சிறிது தயக்கத்துடன் அவரும் அதற்கு ஒப்புக்கொள்கிறார்.
இந்த நிலையில், குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மேத்யூவின் மனைவி ஓமனா (ஜோதிகா) மனு தாக்கல் செய்கிறார். தனது கணவர் மேத்யூ தன்பாலின ஈர்ப்பாளர் என்றும், அவரது நண்பர் தங்கன் (சுதி கோழிக்கோடு) உடன் அவருக்கு உறவு உள்ளது என்றும் அதில் குறிப்பிட்டிருக்கிறார். வழக்கு தொடுத்த பிறகும் கூட, அவர் மேத்யூ உடன் ஒரே வீட்டிலேயே வாழ்கிறார்.
மேத்யூவின் தந்தை தேவஸி, ஓமனாவின் சகோதரர் டோமி (ஜோஜி ஜான்), மகள் ஃபெமி மட்டுமல்லாமல் ஊராருக்கும் இந்த விஷயம் தெரிய வருகிறது. எதிர்க்கட்சியினர் இதனைப் பிரசாரத்தில் பேசுபொருளாக எடுத்துக் கொள்கின்றனர்.
கம்பீரமான ஆணாகச் சமூகத்தில் வலம் வந்த மேத்யூ, அதன்பிறகு சக மனிதர்களை எதிர்கொள்ளும்போது கூனிக் குறுகுகிறார். முக்கியமாக, அவர் தனது தந்தை மற்றும் மனைவியை நேருக்கு நேராகப் பார்ப்பதில்லை.
இன்னொரு பக்கம், ஊரார் மத்தியில் தங்கன் ’கேலிப்பொருள்’ ஆகிறார். அவரது தங்கைக்கு இரண்டாம் திருமணம் நடந்த காரணத்தால், முதல் கணவரின் மகன் தங்கனிடம் வளர்கிறார். அந்த பதின்ம வயதுச் சிறுவனால் இந்த கேலி கிண்டல்களைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
இந்த நிலையில், குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது, 19 ஆண்டுகள் கழித்து விவாகரத்து கோரக் காரணம் என்ன? மேத்யூ தன்பாலின ஈர்ப்பாளர் என்பதற்கு சாட்சியம் இருக்கிறதா? அவரது குரூரத்தால் காயப்பட்டதாகக் கூறியிருப்பது உண்மையா என்பது உட்படப் பல கேள்விகள் ஓமனாவிடம் கேட்கப்படுகின்றன. அதற்கு அவர் என்ன பதிலளித்தார்? உண்மையிலேயே மேத்யூ தன்பாலின ஈர்ப்பாளர் தானா என்பதை விளக்குகிறது மீதமுள்ள திரைக்கதை.
காதல் என்பதற்கு நேசிப்பு என்று பொருள் கொள்ளலாம். அப்படிப் பார்த்தால், இதில் பல்வேறுபட்ட உறவுகளும் அதில் இழையோடும் அன்பும் பெருகி நிற்பதைக் காண முடியும். ஆதலால், இப்படத்தில் பல காதல்கள் உள்ளன என்று சொல்வதே சரி.
மாறும் சுபாவம்!
தொடக்கக் காட்சிகளில் வழக்கமான கமர்ஷியல் படங்களில் தோன்றுவது போல கெத்து காட்டுகிறார் மம்முட்டி. அதேநேரத்தில், தன்பாலின ஈர்ப்பாளர் என்று சக பாத்திரங்களால் கருதப்படும்போது, அப்பாத்திரத்தின் சுபாவத்தில் தென்படும் மாற்றங்கள் ‘அடேயப்பா’ ரகம்.
குற்றவுணர்ச்சி நிறைந்து வழியும் முகம் என்பதை ஒவ்வொரு ஷாட்டிலும் மம்முட்டி உணர்த்தியிருப்பதே, இக்கதையின் வெற்றியை வலுவாக்கியுள்ளது. அது மட்டுமல்லாமல், படத்தின் மீதமுள்ள கதை எப்படி நகரும் என்பதைச் சொல்லிவிடுகிறது.
இறுதிக் காட்சியில், ஜோதிகாவைத் தனியே விட்டுவிட்டு நகரும் இடத்தில் மம்முட்டியின் முகபாவனையில் தென்படும் குழப்பமும் தயக்கமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. படத்தை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று தூண்டுகிறது.
வெறுமையும் இயலாமையும் நிறைந்த நடுத்தர வயதுப் பெண்மணியாக, இதில் நடித்துள்ளார் ஜோதிகா. வீட்டுக்கு வந்த தேவாலயப் பாதிரியாரிடம் பேசும் காட்சியில் மட்டும் அவரது நடிப்பில் ‘செயற்கைத்தனம்’ தென்படுகிறது. போலவே, ஜோமோள் அவருக்கு ‘டப்பிங்’ கொடுத்திருப்பதும் அசூயையை ஏற்படுத்துகிறது.
சில காட்சிகளில் வந்தாலும், இப்படத்தில் தங்கன் ஆக நடித்துள்ள சுதி கோழிக்கோடு நம்மை வசீகரிக்கிறார். ஒரு ஆண் இன்னொரு ஆண் மீது ஈர்ப்பு கொள்வதை திரையில் வெளிப்படுத்துவது எளிதான காரியமல்ல. அது தரும் முத்திரை எதிர்கால வாய்ப்புகளையும் கூட கேள்விக்கு உள்ளாக்கும். அதையும் மீறி, ’மும்பை போலீஸ்’ படத்தில் பிருத்விராஜ் நடித்தது போல, இதில் அவர் அசாதாரண நடிப்பைத் தந்திருக்கிறார்.
வழக்கறிஞர்களாக வரும் முத்துமணி, சின்னு சாந்தினி, நீதிபதியாக வரும் கலாபவன் ஹனீப், நாயகன் நாயகியின் மகளாக வௌர்ம் அனகா ரவி உட்படப் பலரும் இதில் அருமையாக நடித்துள்ளனர்.
பெரும்பாலான இடங்களில் ‘சவுண்ட் எபெக்ட்’ மட்டுமே நிறைந்துள்ளது. மிகச்சில இடங்களில் மட்டுமே தேவைப்படும் அளவுக்குப் பின்னணி இசையைத் தந்திருக்கிறார் இசையமைப்பாளர் மேத்யூஸ் புலிக்கன்.
சலு கே.தாமஸின் ஒளிப்பதிவில், காட்சிகள் நிகழும் களங்கள் யதார்த்தமாகத் தெரிகின்றன. மிக முக்கியமாக, அறைக்குள் நிகழும் உரையாடல்களில் அவர் அதிகமாகச் செயற்கை விளக்குகளைப் பயன்படுத்தாதது அல்லது அப்படியொரு தோற்றத்தை உருவாக்கியிருப்பது அருமை.
தயாரிப்பு வடிவமைப்பாளர் ஷாஜி நடுவில் அதற்கேற்ற சூழலை கேமிராவின் முன்னே நிறைத்துள்ளார்.
எந்த இடத்திலும் திரைப்படம் பார்க்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தாதவாறு, ஒரு வாழ்க்கையை நம் முன்னே பரப்பும் பணியைச் செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரான்சிஸ் லூயிஸ்.
ஆதர்ஷ் சுகுமாரன், பால்சன் சகாரியா இருவரும் இணைந்து இப்படத்திற்கு எழுத்தாக்கம் செய்துள்ளனர். இவர்களது எழுத்தில் பெரும்பாலான பாத்திரங்கள் ரொம்பவே ’மெச்சூர்டாக’ தெரிகின்றன.
குறிப்பாக ஜோதிகா மற்றும் அவரது மகளாக வருபவர்களின் பாத்திரங்கள் அவ்வாறு இருக்கின்றன. அதுவே, இந்த படத்தைத் தனித்துவமானதாக ஆக்குகிறது.
தைரியம் வேண்டும்!
எழுபது வயதிலும் நரைக்காத தலைமுடி, சுருக்கம் இல்லாத சருமம், பெரிதாகப் பொலிவிழக்காத முகம் ஆகியவற்றுடன் உலா வருபவர் நடிகர் மம்முட்டி. ஆண்மைக்கான இலக்கணமாகவே அவரது உருவம் அறியப்படுகிறது. கேரள நாட்டு ஆண்களுக்கான ஒரு முன்மாதிரியாகக் கொள்ளப்படும் உருவங்களில் அவருடையதும் ஒன்று. அதுவே, துல்கர் சல்மான் வெற்றிகளைப் பெறும்போதும் அவருக்கான ரசிகர்கள் நகர்ந்துவிடாமல் இறுகப் பிடித்து வைத்துள்ளது.
அப்படிப்பட்ட மம்முட்டி திரையில் தன்பாலின ஈர்ப்பாளராகத் தோன்றுகிறார் என்பது சாதாரண விஷயமல்ல. அதற்குப் பெரும் தைரியம் வேண்டும்.
அதேபோல, அப்பாத்திரத்தின் செய்கைகளை ‘ஜஸ்டிபை’ செய்யும் தொனியிலான அபத்தனமான காட்சிகள் இதில் கிடையாது. அதற்குப் பதிலாக, டைட்டிலுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாத்திரமும் எப்படிப்பட்ட மனமாற்றத்தை நோக்கி நகர்கிறது என்று இதில் காட்டியிருக்கிறார் இயக்குனர் ஜியோ பேபி. அதுவே வழக்கத்திற்கு மாறான திரையனுபவத்தை நமக்குத் தருகிறது.
முக்கியமாக, இடைவேளையின் போதும், கிளைமேக்ஸ் காட்சியிலும் தங்கனாக நடித்த சுதியின் முகபாவனைகளை ‘க்ளோஸ்அப்பில்’ இயக்குனர் படம்பிடித்திருக்கும் விதம் ‘ஆஹா’ என்று சொல்ல வைக்கிறது.
எத்தனையோ மேத்யூக்களும் தங்கன்களும் இந்த உலகில் வேறு முகங்களுடன் உலாவிக் கொண்டிருக்கின்றனர் என்று சொன்ன வகையில், மனவறையின் சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடக்கும் சில ஆண்களின் மீது வெளிச்சம் பாயிச்சியுள்ளது இந்த ‘காதல் – தி கோர்’. முடிந்தவரை, வறட்சியாக உணர வைக்காமல் நேர்த்தியானதொரு காட்சியனுபவத்தைத் தருவதற்காகவே இயக்குனரைப் பாராட்டலாம்!
– உதய் பாடகலிங்கம்