தேர்தலில் தனியாக நின்று திமுகவால் வெல்ல முடியுமா?

திமுகவின் வயது 74.

கடந்த 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி உதயமானது.

அறிஞர் அண்ணா தொடங்கி, இந்தக் கட்சியை உருவாக்கிய முன்னோடிகள் அனைவருமே முதலில் ஈ.வெ.ரா. பெரியார் தலைமையிலான திராவிடர் கழகத்தில் இருந்தனர்.

தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தொடர்பாக பெரியாருடன், முரண்பாடு ஏற்பட்டதால், அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தனர்.

1949 ஆம் ஆண்டு கட்சி உதயமானாலும் முதன் முதலாக தேர்தலில் போட்டியிட்டது 1957 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில்தான்.

அப்போது 15 எம்.எல்.ஏ.க்களுடன் பேரவையில் அடி எடுத்து வைத்த திமுக, அடுத்த பத்தே ஆண்டுகளில், 1967 ஆம் ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்றியது. அறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனார்.

அதன் பின்னர் திமுகவில் நிகழ்ந்தேறிய மாற்றங்கள், வளர்ச்சிகள், பிளவுகள், வீழ்ச்சிகள் எல்லாவற்றையும், ஏடுகள், ஊடகங்கள், பெரியோர்கள் வாயிலாக தமிழக மக்கள் தெரிந்தே வைத்திருப்பார்கள் என்பதால், தலைப்பில் குறிப்பிட்டுள்ள (தேர்தலில்  தனியாக நின்று திமுகவால் வெல்ல முடியுமா?) விஷயத்தை மட்டும் புள்ளி விவரங்களோடு அலசலாம்.

திமுகவில் எம்.ஜி.ஆர். இருந்த வரைக்கும், அனைத்து தேர்தல்களிலும் அந்தக் கட்சி தனித்து நின்று வெற்றியே அடைந்து வந்ததுள்ளது.

அப்போது கூட்டணியில்  சிறு குறு கட்சிகள் சிற்சில இருந்தாலும், அந்தக் கட்சிகள்,  திமுகவால் வெற்றி பெற்றனவே தவிர, பெரிய அளவில் அவர்களால் திமுகவுக்கு  லாபம் இல்லை.

1971 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகம் முழுக்க, திமுக கூட்டணிக்காக எம்.ஜி.ஆர். சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அந்தத் தேர்தலில் திமுக மட்டும் 184 தொகுதிகளை அள்ளியது. (மொத்த தொகுதிகள் 234)

தமிழக சரித்திரத்தில், அதற்கு முன்பும் சரி, அதற்கு பின்பும் சரி, அத்தனை இடங்களை எந்தக் கட்சியும் பெற்றதில்லை.

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர், அதிமுகவை தொடங்கிய பின்னர், தமிழகத்தின் அரசியல் போக்கே திசை மாறியது.

அதிமுக தொடங்கப்பட்ட சில மாதங்களில் நடைபெற்ற திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் அதற்கு அச்சாரமாக அமைந்தது.

அந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியாக இருந்த ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாம் இடம் பிடித்தது.

ஆளுங்கட்சியாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த திமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

அதன் பின் நடந்த எந்தத் தேர்தலிலும் தனித்து நின்று திமுக ஆட்சியை பிடித்ததில்லை.

1977, 80 மற்றும் 84 ஆகிய மூன்று தேர்தல்களிலும் அதிமுக தொடர்ச்சியாய் வெற்றி வாகை சூடியது. திமுக படுதோல்வி அடைந்தது.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் அதிமுக இரண்டாக பிளவுபட்டது.

அப்போது – 1989 ஆம் ஆண்டு நடந்தத் தேர்தலில்  ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து திமுக களமிறங்கியது.

திமுக அணியை ஆதரித்து வி.பி.சிங், ஜோதிபாசு போன்ற தேசிய தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர். அந்தத் தேர்தலில் திமுக வென்றது.

1991 ஆம் ஆண்டு  நடந்தத் தேர்தலில் அதிமுகவும், காங்கிரசும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன.

பிரச்சாரத்துக்கு தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராஜிவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார். இடதுசாரிகளுடன் திமுக கூட்டணி அமைந்திருந்தது.

அந்தத் தேர்தலில் திமுக வெறும் 2 இடங்களில் மட்டுமே வென்று, வரலாற்றில் மிக மோசமான தோல்வியைத் தழுவியது.

1996 ஆம் ஆண்டு நடந்தத் தேர்தலில் திமுக பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.

காரணம்? காங்கிரசை விட்டு விலகிய மூப்பனாரின் தமாகா, சிபிஐ போன்ற கட்சிகளை தனது அணியில் சேர்த்திருந்தது திமுக.

ஒட்டு மொத்த காங்கிரசும் அப்போது மூப்பனார் கைகளில் இருந்தது.

போதைக்குறைக்கு இவர்களை ரஜினிகாந்தும் ஆதரித்தார். தேர்தலில் திமுக வென்றது.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவே அந்தத் தேர்தலில் தோற்றுப்போனார்.

2006 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தும் 96 இடங்களில் மட்டுமே திமுக வென்றது. ஆனாலும் காங்கிரசுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்காமல், தனித்து  ஆட்சி அமைத்தது திமுக.

தமிழ்நாட்டில் அமைந்த முதல் ‘மைனாரிட்டி’ அரசு இதுதான்.

தோழமை கட்சி பிரச்சினை கொடுக்காததால் 5 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தார், கருணாநிதி.

2011 மற்றும் 2016 ஆம் ஆண்டு தேர்தல்களில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தும் திமுகவால் வெல்ல முடியவில்லை.

2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா மறைந்தார். 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கருணாநிதியும் காலமானார்.

சில மாதங்களில் ஈபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி, டிடிவி தினகரன் அணி என அதிமுக மூன்றாக பிளவுபட்டது.

ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிகள் இணைந்து 2021 ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்தன. இவர்களுடன் பாஜக, பாமக, தமாகா கூட்டணி அமைத்தது.

டிடிவி தினகரன், விஜய்காந்துடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தார்.

10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத திமுக, இப்போது ஸ்டாலின் கைக்கு வந்திருந்தது.

அவர் திமுக தலைமை பொறுப்பை ஏற்றிருந்தார்.

அதிமுக பிளவுபட்டுள்ள நிலையிலும், திமுக தனியாக தேர்தலை சந்திக்க துணியவில்லை.

காங்கிரஸ், இரு கம்யூனிஸ்டுகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மமக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்கு மக்கள் தேசியக் கட்சி, பார்வர்டு பிளாக் என பல கட்சிகளுடன் இணைந்து ’மெகா’ கூட்டணியை உருவாக்கினார்  ஸ்டாலின்.

இந்தக் கூட்டணி தேர்தலில் வென்றது. ஸ்டாலின் முதன் முறையாக முதலமைச்சர் ஆனார்.

இதுவரை திமுகவுக்குக் கிடைத்த இடங்கள்:

1957 ஆம் ஆண்டு முதல் சட்டமன்றத் தேர்தலில் திமுக தொடர்ச்சியாய்  போட்டியிட்டு வருகிறது.

தமிழக சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை – 234.

ஒவ்வொரு தேர்தலிலும் திமுக ஜெயித்த தொகுதிகள் விவரம்:

ஆண்டும் வென்ற தொகுதிகளும்:

1957       –    15

1962       –    50

1967       –    138

1971       –    184

1977       –    48

1980      –    38

1984      –    24

1989      –   151

1991      –     2

1996      –    166

2001      –    37

2006      –    96

2011      –    23

2016      –     89

2021      –    125

திமுகவில் கருணாநிதி 5 முறை முதலமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் ஒரு முறை முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.

கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன்தான், அவர்கள் அந்த நாற்காலியில் அமர முடிந்துள்ளது என்பதே புள்ளி விவரங்கள் சொல்லும் உண்மை.

மக்களவைத் தேர்தல்

இன்னும் 6 மாதங்களில் மக்களவைக்குத் தேர்தல் வரப்போகிறது.

இந்தத் தேர்தலில் திமுகவின் கூட்டணி எப்படி இருக்கும்?

தேசிய அளவில்  எதிர்க்கட்சிகள் உருவாக்கியுள்ள ‘இந்தியா’ கூட்டணியில் திமுக அங்கம் வகிக்கிறது.

’இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சி, காங்கிரஸ்.

ஆனால் பல்வேறு மாநிலங்களில், ’இந்தியா‘ அணியில் உள்ள  சில கட்சிகள், காங்கிரசை எதிர்த்து போட்டியிட முடிவு செய்துள்ளன.

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி, டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தனித்தே களம் இறங்குகிறார்கள்.

உத்தரபிரதேசத்திலும்  அகிலேஷ் யாதவ், தனித்தே நிற்க ஆயத்தமாகி விட்டார்.

ஆனால் எந்தச் சூழலிலும், திமுக தனித்து போட்டியிட விரும்பாது என்பதே அரசியல் நோக்கர்கள் கருத்தாகும்.

ஏன்?

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக தனித்து போட்டியிட்டது. அதிமுகவும் தனித்தே நின்றது.

அதிமுக, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், 37 இடங்களில் வென்றது. திமுக ஒரு இடத்திலும் ஜெயிக்கவில்லை. 

– பி.எம்.எம்.

You might also like