இயக்குநர் பாக்கியராஜிடம் உதவி இயக்குநராக இருந்து தனது முதல் படமான புதிய பாதை படத்தை இயக்கியவர் பார்த்திபன்.
பொதுவாக பாக்கியராஜை மாதிரி படம் எடுக்க வேண்டும் என்று தான் இயக்குநர்கள் ஆசைப்படுவார்கள். ஆனால் பாக்கியராஜ் போல் தன்னுடைய படங்கள் இருக்கக் கூடாது என்பதுதான் பார்த்திபன் எடுத்த முடிவு.
இயக்குநர் பாரதிராஜாவிடம் தான் கற்றுகொண்ட மற்றொரு முக்கியமான விஷயமாக பார்த்திபன் கூறுவது தான் இயக்கும் படங்களில் தானே நடிக்கலாம் என்பதுதான்.
தன்னுடையப் படங்களில் எப்போது புதிதாக எதையாவது முயற்சிக்க வேண்டும் என்பதே பார்த்திபனின் 30 ஆண்டுகால சினிமாவின் ஒரே நோக்கம்.
தொடர்ந்து தனது இரண்டாவது படமான பொண்டாட்டி தேவை படத்தை இயக்கிய பார்த்திபன் தனது மூன்றாவது படமான சுகமான சுமைகள் படத்தை இயக்கினார்.
தான் பார்த்த மலையாளப் படங்களைப் போல் ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து வழக்கமான கமர்ஷியல்தன்மை எதுவும் இல்லாமல் தன்னுடைய சொந்த தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கினார்.
ஆனால், இந்தப் படம் சரியான வரவேற்பைப் பெறவில்லை. இந்தப் படத்தினால் 75 லட்சம் ரூபாய் கடன் சுமையை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அன்றைய காலத்தில் இரட்டை அர்த்தங்கள் அதிகம் பயன்படுத்தி வெளியான ஒரு சில மசாலா படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. தனது கடனை ஈடுசெய்ய தானும் அதே மாதிரியான ஒரு முயற்சியில் இறங்கினார் பார்த்திபன்.
இதைத் தொடர்ந்து அவர் இயக்கிய உள்ளே வெளியே படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் விமர்சகர்கள் இந்த படத்தை வெளுத்து வாங்கினார்கள்.
இப்போது பார்த்திபன் முன்னாடி இருக்கும் ஒரே குழப்பம் தனக்கு பிடித்த சுகமான சுமைகள் மாதிரியான படங்களை இனி எடுப்பதா அல்லது இதே மாதிரியான மசாலா படங்களை இயக்குவதா என்பதே.
எப்போதும் தான் இயக்கும் படங்களில் தனக்கு ஒரு சுவாரஸ்யம் வேண்டும் என்று ஆசைப்படும் பார்த்திபன் முதல் முறையாக தான் இயக்கிய ஹவுஸ்ஃபுல் படத்தை திரைக்கதையே இல்லாமல் இயக்கினார்.
இந்த படத்திற்கான திரைக்கதை அவரின் மூளையில் மட்டுமே இருந்தது. இதே படத்திற்காக சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்றார் பார்த்திபன்.
15 படங்களை இயக்கிய பார்த்திபன் சுமார் 50 படத்திற்கும் மேல் நடிகனாக நடித்துள்ளார் பார்த்திபன்.
ஆயிரத்தில் ஒருவன், பொன்னியின் செல்வன் போன்ற கதாபாத்திரங்கள் அவரது நடிப்பு பயணத்தின் உச்சம் என்று சொல்லலாம்.
மேலும் நடிப்பில் பார்த்திபன் மற்றும் வடிவேலுவின் காம்பினேஷன் தமிழ் சினிமாவின் வெற்றி காம்போக்களில் ஒன்றாக அமைந்தது.
இயக்குநர், நடிகர், டப்பிங் ஆர்டிஸ்ட், பாடலாசிரியர் என பல விதங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு தற்போது வரை வெற்றி வாகை சூடி வருகிறார் பார்த்திபன்.
– நன்றி: ஏபிபி இதழ்.