தமிழுக்‍குப் பெரும் தொண்டாற்றிய வீரமா முனிவர்!

மறை பரப்ப வந்த இடத்தில் தமிழ் மணம் பரப்பிய வீரமா முனிவர்:

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

என பல நூற்றாண்டுகளுக்‍குப் பின் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதுவதற்கு உந்து சக்‍தியாய் இருந்தவர் ஒரு கிறிஸ்தவ பாதிரியார்.

இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்த அவரது இயற்பெயர் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி (Constantine Joseph Beschi).

உண்மைக்‍காகவும், நன்மைக்காகவும் உழைக்‍கும் இயேசு சபையைச் சேர்ந்த குருவானவர்தான் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709-ஆம் ஆண்டு இயேசு சபையில் குருவானபின், 1710-ஆம் ஆண்டு அதாவது அவரது 30-வது அகவையில் தமிழகத்திற்கு வந்தார்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், பல கிறிஸ்தவ தேவாலயங்களை எழுப்பினார்.

விருத்தாசலத்தில் புனித பெரியநாயகி அன்னை திருத்தலம், புதுக்‍கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்தில் உள்ள தவளபள்ளம் கிராமத்தில் புனித பெரியநாயகி அன்னை ஆலயம், கடலூர் மாவட்டம் கோனான்குப்பம் கிராமத்தில் புனித பெரியநாயகி அன்னை ஆலயம், ஏலாக்‍குறிச்சி கிராமத்தில் உள்ள புனித அடைக்‍கல அன்னை ஆலயம் ஆகியவற்றை கட்டினார்.

மறை பரப்ப வந்த இடத்தில், தமிழின் சுவை அறிந்த கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி, பின்னாளில் தனது பெயரை வீரமாமுனிவர் என மாற்றிக்‍கொண்டார். தமிழ் மொழியின் வளர்ச்சிக்‍கும் முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளை செய்துள்ளார்.

தமிழில் முதன்முதலாக உரைநடை தமிழை உருவாக்‍கியவர் இவரே.

ஏசுவின் வரலாற்றை தமிழ் பண்பாட்டுக்‍கேற்ப ‘தேம்பாவணி’ என்ற பெருங்காப்பியமாக இயற்றினார்.  சுப்ரதீபக் கவிராயர் மூலம் தமிழ் கற்றார்.

தமிழ் இலக்‍கியச் சுவடிகளை தேடிக்‍ கண்டுபிடித்து சதுரகராதியை உருவாக்‍கினார். அக்‍காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்‍கு புள்ளி வைக்‍காமல் எழுதுவது வழக்‍கம்.

‘ஆ’ என எழுதுவதற்கு ‘அர’ என இரண்டு எழுத்துகள் வழக்‍கில் இருந்தது. அவற்றை மக்‍கள் எளிதில் படிக்‍க மாறுதல் செய்தவர் வீரமாமுனிவர்.

தொன்னூல் விளக்‍கம் என்ற நூலில், எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்‍கணங்களை 370 நூற்பாக்‍களில் எடுத்துரைத்தார்.

கொடுந்தமிழ் இலக்‍கணம் என்ற நூலில் பேச்சுத் தமிழை அறிமுகம் செய்தார்.

தமிழில் முதல் நகைச்சுவை நூலான “பரமார்த்த குருவின் கதை” என்ற நூலை எழுதியவர் வீரமாமுனிவர்தான். பல மருத்துவ நூல்களையும் வீரமாமுனிவர் எழுதியுள்ளார்.

திருச்சியில் சந்தா சாகிப் என்பவரின் அரசில், திவானாக பணியாற்றிய வீரமாமுனிவர், மரதர்களின் படையெடுப்பை அடுத்து டச்சு ஆட்சியில் உள்ள காயல்பட்டினத்தில் வாழ்ந்து, நோயால் பாதிக்‍கப்பட்டு இயற்கை எய்தினார் என்கிறது வரலாறு.

தமிழர்கள் என்று சொல்லிக்‍ கொள்பவர்களைவிட, தமிழரல்லாதோர் பலர், தமிழுக்‍கு மிகப்பெரும் தொண்டாற்றி உள்ளனர். அவர்களில் வீரமாமுனிவர் முதன்மையானவர், மூத்தவர்.

(தமிழறிஞர் வீரமாமுனிவர் பிறந்த நாள் – நவம்பர் 8, 1680)

✍️ லாரன்ஸ் விஜயன்

You might also like