ஜப்பான் எப்போதுமே நமக்கு வியப்பின் நகரம் தான். ஜப்பானின் ஒழுங்கு, கடமை, சுறுசுறுப்பு, தூய்மை என பல மெச்சும் தகவல்கள் நம்மை கடந்து சென்றிருக்கும்.
இந்த புத்தகத்தில் ஜப்பானில் உள்ள ஓக்கினாவா (Okinawa) உடல் நலத்தின் உலகத் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. அதுவும் அங்கு வசிப்பவர்களில் ஒரு லட்சம் பேருக்கு கிட்டத்தட்ட 25 பெயர் என்ற கணக்கில் 100 வயதை தாண்டி வாழ்ந்து வருகின்றனர்.
இது எவ்வாறு நிகழ்கிறது? என ஆராய்ந்து அம்மக்களின் உணவுப் பழக்கம், திறந்தவெளியில் அதிக நேரம் செலவிடுவது, எளிய வாழ்க்கை முறை போன்ற முக்கிய காரணங்களோடு மற்றொரு முக்கிய காரணத்தை காண்கின்றனர் அது தான் “இக்கிகய்”. அதாவது எதுக்கு வாழுறோம் என தெரிந்து வாழ்வது.
நம்ம ஊர்ல வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பு வேண்டாமான்னு சொல்லுவாங்க கிட்டத்தட்ட அது மாதிரி தான்.
அங்கேயும் வாழ்க்கைக்கான பிடிப்பை, நோக்கத்தை, உந்து சக்தியை கண்டறிந்து அதுவே நம் விருப்பம் தொழில் என்று ஆக்கிக்கொண்டால்.. அதுவே இக்கிகய். அதாவது நாம் தினமும் காலையில் கண் விழிப்பதற்கான காரணம் இக்கிகய்.
இதற்கு என பத்து விதிகளும் உள்ளன:
1. எப்பொழுதும் மும்முரமாக இருங்கள்: வேலையிலிருந்து ஓய்வு பெறாதீர்கள். தொழில் வாழ்க்கைக்கு தான் ஓய்வு என்பது உண்டு. ஆனால் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவும், மற்றவர்களுக்கு உதவவும், நம்மை சுற்றி மேம்படுத்திக் கொள்ளவும் ஓய்வு என்பது இல்லை.
2. அவசரப்படாதீர்கள்: பதறாத காரியம் சிதறாது என்பது போல நிதானமான தொடக்கமே பாதி வெற்றி
3. வயிறு நிறைய சாப்பிடாதீர்கள்: நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்றால், குறைவாக சாப்பிட வேண்டும். 80 சதவீத பசி இருக்கும் போதே, சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும்.
வைரமுத்து கவிதையில் சொல்வதானால், “பசியோடு உக்காரு, பசியோடு எழுந்திரு” இது நிச்சயம் நம்ம ஊரு அம்மா பாட்டிகள் எல்லாம் கத்துக்க வேண்டியது. கடைசி ஒரு உருண்டை வரை தினம் ஆறு வேளை கூட அசராமல் எப்படி தான் சோறு கொடுக்குறாங்களோ?
4. உங்களைச் சுற்றிலும் நல்ல நண்பர்களை வைத்து கொள்ளுங்கள்: நல்ல நண்பர்கள் உடன் இருந்தாலே நாம நல்லாவும் இருப்போம், நல்லவனாகவும் இருப்போம்
5. உங்களுடைய அடுத்த பிறந்த நாளுக்குள், ஒரு நல்ல உடற்கட்டை பெற உறுதிப் பூணுங்கள். உடல்பயிற்சி செய்து உடலைத் தொடர்ந்துப் பராமரியுங்கள்.
6. புன்னகை புரியுங்கள்: “எப்படி இருக்கீங்க” எனும் பொதுவான கேள்விக்கே “ஏதோ இருக்கன்” என பதில் சொல்லும் நபராக இருந்தால், நிச்சயம் இது நீங்கள் எப்போதும் செய்ய வேண்டியது. சின்ன புன்னகை நம்மையும் அழகாக்கும் நம்மை சுத்தி இருப்பதையும் நமக்கு அழகாக்கும்.
7. இயற்கையுடனான தொடர்பைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்: இயற்கையோடு நேரம் கொடுங்கள். இயற்கை சார்ந்த சில பணிகள் செய்யுங்கள்.
8. நன்றி உணர்வுடன் இருங்கள்: எல்லாவற்றிக்கும் எல்லாருக்கும் நன்றி சொல்லுங்கள்.
9. நிகழ்கணத்தில் வாழுங்கள்: கடந்த காலத்தை நினைத்து கவலையில் சில நாள், வருங்காலத்தின் கனவில் மீதி நாள் என்று வாழாமல் நிகழ்காலத்தில் வாழுங்கள்.
10. உங்களுடைய இக்கிகயைப் பின் தொடருங்கள்: உங்கள் வாழ்வுக்கான ஒவ்வொரு விடியலுக்கான நோக்கம் கண்டறிந்து அதை பின்தொடருங்கள்.
“உங்களுடைய இக்கிகையை கண்டுபிடித்த பிறகு ஒவ்வொரு நாளும் அதைப் பேணிப் பராமரிப்பது, உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தை கொடுக்கும், உங்கள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைத்தவுடன் தன்னுடைய தூரிகையால் எழுத்துக்களை தீட்டி கொண்டிருக்கின்ற ஒரு ஓவியக் கவிஞரை போல்,
50 ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் ஒரே மாதிரியான சுவையான உணவு பதார்த்தங்களை தயாரித்து தன் வாடிக்கையாளர்களுக்கு அன்புடன் படைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு சமையல் கலைஞரை போல், நீங்கள் செய்யும் அனைத்திலும் மகிழ்ச்சியின் ஓட்டத்தை அனுபவிப்பீர்கள்”என்கிறது இக்கிகய்.
நம் இக்கிகய் கண்டறிந்து அதை தொடருவோமாக..
புத்தகத்தின் பெயர்: இக்கிகய்
ஆசிரியர்கள் : ஹெக்டர் கார்சியா (Hector Garcia) & பிரான்செஸ்க் மிராயியஸ் (Francese Miralles)
தமிழில் : பிஎஸ்வி குமாரசாமி
நன்றி: ஆ.இராஜலெட்சுமி ஆறுமுகம் முகநூல் பதிவு