– ரெங்கையா முருகன்
01.11.2023 முதல் 27.11.2023 நவம்பர் மாதம் முழுவதும் “Kovilpatti: The Town that Papered India” என்ற தலைப்பில் கொண்டையராஜூவின் 125 ஆம் பிறந்தநாளையொட்டி (நவம்பர்-7) தட்சிணசித்ரா மற்றும் சித்ராலயம் இணைந்து நடத்தும் சிறப்பு கண்காட்சி முட்டுக்காடு தட்சணசித்ராவில் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கொண்டையராஜூ ஓவியங்கள் குறித்து கலந்துரையாடல் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, சோமசுந்தரம், கோவில்பட்டி மாரீஸ் (ஓவியர் டி.எஸ்.சுப்பையா மகன்), கலை ஊக்குநர் மற்றும் அட்வகேட் காந்தி மற்றும் நான் உட்பட ஆய்வரங்க உரையாடலில் பேசினோம்.
சிறப்பான கேள்விகளுடன் திருமதி. அனிதா அவர்கள் தலைமையில் ஒருங்கிணைத்து ஆய்வரங்க கலந்துரையாடலை வழிநடத்தினார்.
முதலாவதாக நான் உரையாடும்போது வெகுஜன கலை (Popular Art) தோற்றம், வளர்ச்சி மற்றும் வரையறை கோட்பாடுகள் ஆகியவற்றை விளக்கிவிட்டு முகலாய, விஜயநகர நாயக்கர் காலங்களில் ஓவியச்செயற்பாடுகள்,
பஜனை மடங்களில் இடம்பெற்ற தஞ்சாவூர் ஓவியங்கள், வடக்கத்திய நாத்வாரா ஓவியங்கள் வரிசையில் நவத்சம் நாராயணா வரிசையில் நரோத் நாராயண சர்மா வரைந்த பிரிஜ்பாஸி ஓவிய தொகுப்பு, கல்கத்தா பசார் ஓவியங்கள்,
ஆங்கிலேய வருகைக்குப் பின்னர் ரவிவர்மா ஓவியங்கள், கோவில்பட்டி கொண்டையராஜூ ஈறாக காலண்டர் ஓவியங்கள் குறித்து விளக்கினேன்.
அதன் பின்னர் சிவகாசி தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழில் வருகை அதனைத் தொடர்ந்து லேபிள் அச்சிட அச்சு இயந்திரம் இறக்குமதி காலண்டர் அச்சிடல் குறித்தும் பேசினேன்.
ஓவியர் மருது பேசும்போது, போட்டோகிராபி, ஓவியங்களின் மாடல்கள், ஆரம்ப கால சினிமாக்களில் மராட்டிய தியேட்டர் பார்சி நாடக அரங்கின் பிரதிபலிப்பு, சினிமாவுக்கும் காலண்டருக்கும் உள்ள கொடுக்கல் வாங்கல் உறவு, சினிமா வருகைக்குப் பிறகு கொண்டையராஜூ ஓவியங்களின் செல்வாக்கு செலுத்திய பளிச் வண்ணங்கள், ஓவியத்துக்கும் மக்களின் உணர்வுக்கும் உள்ள தொடர்பு, காலேஜ் ஆப் ஆர்ட்ஸ் இந்த வெகுஜன ஓவியங்களை எவ்வாறு பார்க்கின்றனர் ஆகியன குறித்து மிகச் சிறந்த முறையில் விளக்கினார்.
எம்.ராமலிங்கம் மகன் ஓவியர் சோமசுந்தரத்தின் பேச்சில், கொண்டையராஜூ ஓவியங்களின் கலைநுட்பம் மற்றும் ராமலிங்கம் மற்றும் டி.எஸ்.சுப்பையா ஓவியங்களின் தனித்துவ வேறுபாடுகள்,
டி.எஸ்.சுப்பையா ஓவியங்கள் அணிகலன்கள் வரைவதில் உள்ள நேர்த்தி மற்றும் அக்கால ஓவியச் செயற்பாடுகளின் நினைவலைகள் இடம்பெற்றிருந்தன.
கோவில்பட்டி மாரீஸ் பேசும்போது, கோவில்பட்டி ஓவியங்களில் இடம்பெற்ற முக்கிய கடவுளர்கள், வடக்கத்திய ஓவிய வருகையால் ஏற்பட்ட வண்ண மாறுபாடுகள்,
வெறுமனே ஐந்து தெய்வங்களை மட்டுமே பிரதானமாக கொண்டு ஆயிரக்கணக்கான வேவ்வேறு பேக்ட்ராப் பின்னனியில் சாமிப்படங்கள் வரைவதில் உள்ள சவால்கள்,
ஓவியர் ராமலிங்கம் வடக்கு நோக்கி சந்தைக்கு செல்வதற்கான எடுத்துக் கொண்ட முன்மாதிரியான ஓவிய முயற்சிகள் என கோவில்பட்டி ஓவியச் செயற்பாடுகளை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்.
கலை ஊக்குநர் மற்றும் அட்வகேட் காந்தி அவர்கள், ஓவியச் செயற்பாடுகள் பல்லவர்கள் காலத்தில் இருந்து இன்றைய காலண்டர் ஓவியங்கள் நீட்சியை பல முன்னுதாரணங்களோடு விளக்கினார்.
பஜனை மடங்களில் இடம்பெற்ற கடவுள் படங்கள், கோனேரிராஜபுரம், திருவரங்கம், திருப்புடைமருதூர் போன்ற ஊர்களில் இடம் பெற்ற வண்ண ஓவியங்கள், காலண்டர் ஓவியங்கள் வழியாக அனைவருக்கும் பொதுவாக கிடைக்கும் வழியில் கடவுளை ஜனநாயகப்படுத்தியது இந்தவகை காலண்டர் ஓவியங்களே என்றும்,
நாயக்கர் கால ஓவியத்திற்கும், இன்றைய காலண்டர் ஓவியங்களுக்கும் இடைப்பட்ட கால மறக்கடிக்கப்பட்ட சில முக்கிய ஓவியச் செயற்பாடுகள் குறித்தும்,
காலண்டர் ஓவியங்கள் வழியாக கோவில் வேலைப்பாடுகள் ரெபரன்சிற்கும்,
கோவில் சிலை வடிவங்கள் காலண்டரில் பயன்படுத்துவதையும் இந்த மரபு நீண்டநெடிய தொடர்ந்து வரும் மரபின் நீட்சியே காலண்டர் ஓவியங்கள் என்று அருமையாக தனது உரை மூலம் வெளிப்படுத்தினார்.
சித்ராலயம் மியூசியம் திரு. ஜெயகுமார் அவர்கள் தனது மியூசியம் ஆரம்பித்து இவ்வளவு குறுகிய நாட்களில் தட்சணசித்ராவில் கொண்டையராஜூ ஓவியங்கள் கண்காட்சி ஏற்படுவதற்கு முழுமுதற் காரணம் திருமதி.அனிதா மேடம் மற்றும் கனடா நாட்டு கலைத்துறை மானுடவியல் பேராசிரியர் திரு.ஸ்டீபன் இங்க்லீஸ் அவர்களுக்கு உரிய விதத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த கண்காட்சி பின்னனியில் செயற்பட்ட ஒவ்வொருத்தருக்கும் தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்து சித்ராலயம் தோன்றிய கதையையும் பகிர்ந்துகொண்டார்.