இயற்கையைக் காப்பாற்றப் போராடுவதே இன்றைய தேவை!

கார்ப்பரேட் கோடரி – நூல் விமர்சனம்:

பசிக்கும் கார்ப்பரேட் கோடரி என்ற இந்தப் புத்தகத்திற்கும் ஓர் நெருங்கிய பந்தம். உண்மையாகச் சொல்ல வேண்டுமெனில் நாளை வரப்போகிற பட்டினிச் சாவிற்கான பசிப்போராட்டம் இந்த ‘கார்ப்பரேட் கோடரி’

மண் மீதான ஒரு கொடூரத்தின் குருதித்தெறிப்பு. புத்தகம் நெடுகிலும் ரத்தம் உறிஞ்சும் (கார்ப்பரேட்) ட்ராகுலாக்களின் பணவெறி எத்தனை எத்தனையோ விவசாயிகளின் ஏதும் அறியா ஏழைகளின் இயற்கையை தன் உயிரோடு ஒட்டிக்கொண்டு வாழ்ந்த தொல்குடிகளின் உணவுக்குழாயை அறுத்துவிட்ட அவலம் அத்தனைப் பக்கத்திலும் விரவிக் கிடக்கிறது.

நியூயார்க் நகரின் இரட்டைக் கோபுரத்தை இலகுவாய் இடித்துத் தரைமட்டமாக்கும் அம்மோனியம் நைட்ரேட் வயல்களை மட்டும் வளமுள்ளதாகவா மாற்றப்போகிறது என்ற பெருங்கேள்வியை முன்வைக்கிறது புத்தகம்.

தொழிற்புரட்சி உணவுத்தேவையை அதிகரிக்கிறது. உணவுத்தேவை நாட்டுப்பற விளைபொருட்களை நகரத்துக்கு இடம்பெயர வைக்கிறது. இதனால் விளைமண் சத்துக்களை இழக்கிறது. நகரமயமாக்கல் மண்ணின் மறுசுழற்சியைத் தடுக்கிறது.

லண்டன் மாநகரின் மனிதக் கழிவுகள் முறையான பயன்பாடில்லாமல் தேம்ஸ் ஆற்றங்கரையை பாழ்ப்படுத்தி லண்டனை மாசுபடுத்தியதுபோல லண்டன் என்பது சென்னையாகவும் தேம்ஸ் என்பது கூவமாகவும் மாறியிருப்பது மனவருத்தம்.

மனித எலும்புகள் பறவைகளின் எச்சங்களென நைட்ரஜன் சத்துகளைத் தேடி குண்டு சத்தங்கள் இல்லாத நைட்ரேட் போரையே நடத்தியிருக்கிறது கார்ப்பரேட்.

சாக்ரா என்பது தொல்குடி மக்களை வழிநடத்திய கடவுள் என்பதும் பொருந்தும். நிலத்தைப் பார்த்துப் பார்த்துப் பழக்கப்படுத்தினார்கள் விளையாத மண்ணிலும் அதீத விளைச்சல் எடுக்கும் அற்புதத்தைக் கூட அறிந்துவைத்திருந்தார்கள்.

தொழில்நுட்பத்திற்கே டப் கொடுத்தார்கள் தொல்குடிகள். மண்ணிற்கும் ஓய்வுக் கொடுத்தார்கள். தரிசுக்காலம் தன் வளத்தை மீட்டுக்கொள்ள மட்டுமல்ல பயிர்களைத் தாக்கும் ஒட்டுண்ணிகளை அழிக்கவும் என்றறிந்த ஆய்வாளர்களாகவும் இருந்தார்கள்.

சாக்ராவையும் விட்டு வைக்கவில்லை அந்த வியாபார ஒட்டுண்ணிகள்.

உழவுக்குடிகளின் நிலத்தை அபகரித்து வாழ்வாதாரத்தை அழித்து கொத்தடிமைகளாக்கி வருமானம் இழந்து வாழ்க்கை இழந்து அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பட்டினியில் இறக்க வைத்த கார்ப்பரேட்டுகள்,

சோயாவில் தொடங்கி செம்பனை வரைக்கும் நிலம், வளமென எல்லாவற்றையும் பணப்பேராசையிலும் வியாபாரப் போட்டியிலும் கொன்று அழிக்கின்ற, அழித்திருக்கின்ற காலச்சுவடுகளின் வடுக்களையும் வருங்காலத்தின் வாழ்க்கையையும் விவரித்திருக்கும் புத்தகம்.

‘இருண்ட கண்டம்’ ஆப்ரிக்காவை மீளா இருளில் தள்ளிய கொடும்பாவிகள் கார்ப்பரேட்டுகள்.

இந்தக் கண்டத்தில் இருக்கும் 53 நாடுகளில் 43 நாடுகள் பெரும்பசியை மட்டும்தான் சேமித்து வைத்திருக்கின்றன. கொக்கோ பயிர் என்ற பெயரில் நுண்சத்துகள் எல்லாம் கொள்ளையடிக்கப்படுகின்றன.

காஃபி அவ்வளவு வாசமாகத்தான் இருக்கிறது. பெட்ரோலுக்கு அடுத்து உலகின் இரண்டாவது ஏற்றுமதிப் பொருள் ஐக்கிய அமெரிக்காவின் ராஜாங்கத்தால் எத்தியோப்பியா சுரண்டப்படுகிறது.

ஆடுகள் கண்டுபிடித்தக் காஃபி இந்தியாவின் குடகு மலை வரை ஓடிவந்துவிட்டது. இன்று அந்தக் காஃபிக்காக அடிமையாகி அலைகிறோம்.

அழகான வெண்மை அந்தப் பருத்திப் பஞ்சு மறைநீரைப்போல உழவர்களின் குருதியும் மறைந்திருப்பதால் சிவப்பாக மாறிவிட்டது.

உலகின் நான்காவது பெரிய நன்னீர் ஏரி ஏரல்கடல். இது அரால்கம் பாலைவனமாய் உருமாற்றப்பட்டதன் பின்னால் பருத்தி கார்ப்பரேட்.

நன்னீர் உவர்நீராகி நீர்ப்பற்றாக்குறை ஏரல்கடல் முழுதும் உப்புப் படிந்து புழுதிப்புயல் வேளாண் நிலங்களை உவர்நிலமாக்கி உப்பை மட்டுமல்லாமல் நஞ்சையும் கடத்தி புற்றுநோய், நூரையீரல் நோய்களை பரிசளித்தக் கொடூரம் இப்படியெல்லாம் நடக்கும் என்று முன்பே தெரிந்திருந்தும் தெரிந்தே செய்த சதி, அப்பப்பா இவ்வளவு சூழலியல் இறப்பை ஏற்படுத்திவிட்டு கொஞ்சமும் மனம் வருந்தாது நிற்கும் இயற்கையின் எமன்கள் தான் இந்த கார்ப்பரேட் எருமைகள்.

செயற்கையான காட்டுத்தீயை ஏற்படுத்தி காடுகள் அழித்து மீள் காடு புதுப்பிக்காது செம்பனை உருவாக்கத்திற்கென குரங்கினங்கள் அழிக்கப்பட்டு பழங்குடிகள் விரட்டப்படுகிற கொடுமைகள் வியாபார லாபத்தில் கரைந்தோடிவிடுகிறது கண்டுக்கொள்ளப்படாமல்.

உயிரி எரிபொருளும் உயிரி நெகிழியும் ஏழைகளின் உயிரைக் காக்கப்போவதில்லை. பஞ்சத்தையும் பசியையும் மட்டுமே கணக்கில்லாது அள்ளித்தரப்போகிறது.

உணவுப்பொருட்களெல்லாம் உதிரிபாகத்திற்கெனவே உற்பத்தி செய்யப்படும் இனிமேல்.

உலகமயமாக்கல், ஊர்மயமாக்கல் என்பதெல்லாம் கண்ணைப் பறித்துவிட்டு கண்ணாடிப்போட்டு மறைத்துக்கொள்ளுங்கள் என்பதைப்போல.

ஆசைக்காட்டி நிலங்களை அபகரிக்கப் பார்ப்பார்கள். கொடுத்துவிடாதீர்கள். நாளை மண்ணைக்கூட அள்ளித் தின்ன முடியாது நம்மால்.

நக்கீரன் ஐயா புத்தகங்களை வாசித்தால் கனம் வாசிக்காது கடப்பது குற்றம். நிச்சயமாக எல்லோருமே வாசித்துவிடுங்கள். விவசாயிகள் கட்டாயமாக வாங்கிவிடுங்கள்.

எல்லா விருதுகளையும் நக்கீரன் ஐயாவிற்கு தந்துவிடலாம். நாவலுக்கும் சிறுகதைக்கும் சாகித்ய அகாடமியும் யுவ புரஷ்கரும் கொடுப்பதைக்காட்டிலும் இயற்கையே வாழ்வின் மூலதனம் இதைக் காப்பாற்ற போராடுவதே போற்றுதலுக்குரியது.

அதனால் எல்லா விருதுகளையும் இயற்கையின் பக்கம் மடைமாற்றலாம் தானே. உலகின் உயிர்ப்பையே அழிவில் தள்ளிவிட்டு வெறும் கவிதைகளும் கதைகளும் மட்டும் எந்த உலகைச் சுத்தப்படுத்தும்.

“நிலம் என்பது
வெறும் மண்ணல்ல
உணர்வுகள் நிரம்பிய
நரம்புகள்”

****

நூல் : கார்ப்பரேட் கோடரி
ஆசிரியர் : நக்கீரன்
பதிப்பகம் : விகடன் பிரசுரம்
பக்கங்கள் : 96
விலை : ₹100

 

You might also like