விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம் ‘தங்கலான்’. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி கிருஷ்ணன், பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரொடக்ஷன் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் ஜனவரி 26-ம் தேதி வெளியாகிறது.
இதன் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதுகுறித்து விழாவில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் இந்தப் படம் பண்ணுவதற்கு முன் நான் ஆர்ட் போர்டில் கதாபாத்திரம் எப்படி இருக்க வேண்டும் என்று வரைவேன். அதை விக்ரம் சாரிடம் காட்டினேன்.
நான் எப்படி வரைந்தேனோ அப்படியே வந்த படப்பிடிப்பில் நின்றார். கடுமையாக உழைக்கிறார் என்பதைத் தாண்டி ஒரு நடிகனாக கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறார்.
அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு மாதத்தில் சண்டைக்காட்சி எடுத்தோம். படப்பிடிப்பில் நான் சுயநலமானவன். படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காகப் படப்பிடிப்பில் அவரை மிகவும் கஷ்டப்படுத்திவிட்டேன்.
கதாபாத்திரங்களை உண்மையாகக் காட்டுவதற்கு அவர் அவ்வளவு உழைக்கிறார். கஷ்டங்களைத் தாங்கிக் கொள்கிறார். இது மிகவும் பிரமிக்க வைக்கிறது. தங்கலான் எல்லோருக்கும் பிடித்தப்படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இதில் பேசப்பட்டிருக்கும் வாழ்க்கை முக்கியமானது. தொன்மத்துக்கும் வரலாற்றுக்கும் இடையில் இருக்கிற நம்பிக்கையை பற்றி இந்தப் படம் பேசுகிறது. இது தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும் என பா.ரஞ்சித் கூறினார்.