முக்தா சீனிவாசன் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம்கூட இயக்கியதும் இல்லை, தயாரித்ததும் இல்லை. மாறாக சிவாஜி கணேசனை வைத்து 13 படங்கள் இயக்கி இருக்கிறார்.
சிவாஜியின் ஆள் என்று தான் இவரை திரையுலகில் அழைப்பார்கள். அப்படி இருந்தும் எம்.ஜி.ஆர். உடன் நட்புறவு கொண்டிருந்தார் ‘முக்தா’ சீனிவாசன்.
தனது 86 வயதில் பழைய சம்பவங்களை நினைவுகூர்வதில் சிரமம் இருந்தாலும், முடிந்தவரை தன் நினைவுப் பெட்டகத்தில் இருந்த எம்.ஜி.ஆரைப் பற்றிய அந்த நாள் ஞாபகங்களை மெல்ல பகிர்ந்து கொண்டார்.
“சேலம் மார்டர்ன் தியேட்டர்ஸ் டைரக்டர் டி.ஆர்.சுந்தரம் கிட்ட அசிஸ்டென்ட்டா நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, அவர்கள் படங்களில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆர். அடிக்கடி அங்கு வருவார்.
அங்கு தான் அவர் எனக்கு பழக்கமானார். அந்தத் தொடர்பு கடைசி காலம் வரைக்கும் இருந்தது.
அசிஸ்டென்ட்டா இருந்து 1957வது ஆண்டு ‘முதலாளி’ படத்தின் மூலம் தனியாக டைரக்டரானேன்.
அதுக்குப் பிறகு 1959-ல் முக்தா பிலிம்ஸ் படக் கம்பெனியை துவக்கி படங்கள் தயாரிக்கவும் தொடங்கினேன். நான் சிவாஜியை வச்சுத் தான் நிறைய படங்கள் தயாரித்து இருக்கிறேன்.
அந்தக் காலத்தில் தேவையில்லாத குரூப் அரசியல் இருந்தது. எம்.ஜி.ஆர். குரூப், சிவாஜி குரூப் என்று படத் துறையிலேயே இரண்டு குரூப்களாக செயல்படுவார்கள்.
நான் சிவாஜி குரூப்னு முத்திரை குத்தப்பட்டேன். இந்த குரூப் பாலிடிக்ஸ் எல்லாம் தயாரிப்பாளர்கள் மத்தியில் தான் இருந்ததே தவிர எம்.ஜி.ஆரும் சிவாஜியும் அதைப் பற்றி கவலைப்படவே மாட்டார்கள்.
நான் சிவாஜியை வைத்து நிறையப் படங்கள் தயாரித்துக் கொண்டிருந்த நேரத்தில் கூட எங்காவது என்னை பார்க்க நேர்ந்தால், ‘‘டேய் சீனு… எப்படிடா இருக்க?’’ என்று உரிமையுடன் என்னை அழைத்துப் பேசுவார் எம்.ஜி.ஆர்.
‘‘நல்லாருக்கேண்ணே…’’ என்பேன்.
‘‘தயாரிப்பு வேலையெல்லாம் எப்படி இருக்கு? படத்தை வித்துட்டியா…? எப்படிப் போகுது? கவனமா பண்ணு’’ என்பார் உண்மையான அக்கறையுடன்.
அதேபோல என்னைப் பார்க்கும்போதெல்லாம் ‘‘சிவாஜி எப்படி இருக்கார்?’’ என்று தவறாமல் கேட்டுவிடுவார்.
இவன் சிவாஜி குரூப் என்ற எண்ணமெல்லாம் அவருக்கு கிடையாது. தன் எதிரியை கூட நண்பனாக மாற்றிக் கொள்ளும் வல்லமை எம்.ஜி.ஆருக்கு உண்டு.
அதற்கு நானே சிறந்த உதாரணம். சிவாஜியை வைத்து 13 படங்கள் செய்த நான் கடைசி வரை எம்.ஜி.ஆரிடம் போகவே இல்லை. அதையெல்லாம் அவர் மனதில் வைத்துக் கொண்டு பேசவே மாட்டார். அப்படி ஒரு சிறந்த குணம் கொண்டவர் அவர்.
எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆனதும் அவருக்கு ஒரு பாராட்டு கூட்டம் நடந்தது. மவுண்ட் ரோட்டில் இருந்த எஸ்டேட் கார்டன் என்ற இடத்தில் தான் அந்தக் கூட்டம் நடந்தது. அதில் நானும் எழுத்தாளர் சாண்டில்யனும் பிரதம பேச்சாளர்கள்.
சாண்டில்யன் மிகச் சாதாரணமாக சபை அடக்கத்துடன் பேசிவிட்டு அமர்ந்து விட்டார். சபை அடக்கம் என்பதில் நம்பிக்கை இல்லாதவன் நான்.
என் பேச்சின்போது, “சினிமா மூலமா நிறைய நல்ல விஷயங்களை சொல்றீங்க. உங்க பாடல்கள் மூலம் நல்ல கருத்துக்களை எங்கள் மனதில் விதைக்கிறீங்க. அதையெல்லாம் கேட்டுவிட்டு நாங்க அதை பின்பற்றுறோம்.
நீங்க என்னடான்னா அதை விட்டுவிட்டு இப்ப திடீர்னு இந்த கையெழுத்துப் போடுற வேலையில போய் சேர்ந்துட்டீங்க” என்று அவர் முதல்வரானதைக் குறிப்பிட்டுப் பேசிவிட்டேன்.
முதல்வர் பதவி என்பது மிக உயர்ந்த மரியாதைக்குரிய பதவி என்பதில் சந்தேகமில்லை. அதன் மீது பெரும் மரியாதை உள்ளவன் நான்.
ஆனால் அந்த மேடையில் மனதில் தோன்றியதை வெளிப்படையாகப் பேசிவிட்டேன். அதைக் கேட்டுவிட்டு தீவிர யோசனையில் ஆழ்ந்து விட்டார் எம்.ஜி.ஆர்.
அவர் பேசும்போது, “சீனு சொன்னது சரி தான். இனிமே நான் மாசத்துல 15 நாட்கள் முதலமைச்சராகவும், 15 நாட்கள் நடிகனாகவும் இருப்பேன்” என்று மேடையிலேயே ஓபன் மைக்கில் அறிவித்து விட்டார்.
அரங்கத்தில் சலசலப்பு. இதைக் கேட்டுக் கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியே சென்று தங்கள் அலுவலகத்துக்கு போன் செய்து எம்.ஜி.ஆர். இப்படி பேசிவிட்டார் என்று தகவல் சொல்லிவிட்டனர்.
அடுத்த நாள் நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாக இது தயாராகத் தொடங்கி விட்டது.
இந்தத் தகவல் அடுத்த 15வது நிமிடத்தில் டெல்லிக்கு போய்விட்டது. பிரதமர் மொர்ராஜி தேசாய் எம்.ஜி.ஆரை தெலைபேசியில் அழைத்துப் பேசினார்.
“எம்.ஜி.ஆர். நீங்கள் சிறந்த நடிகர், சிறந்த அரசியல்வாதி. அதில் சந்தேகமே இல்லை.
ஆனால் பாலிடிக்ஸ் என்பது கண்ணியமான துறை. அதில் இருந்து கொண்டு நீங்கள் சினிமாவில் மரத்தைச் சுற்றி வந்து டூயட் பாடவது நன்றாக இருக்காது.
சினிமா, அரசியல் இதில் எதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இரண்டிலுமே கால் வைக்காதீர்கள். அது சரியாக வராது” என்று அட்வைஸ் செய்துள்ளார்.
அவர் சொல்வது சரிதான் என்று உணர்ந்த எம்.ஜி.ஆர்., இனி அரசியல் மட்டும் தான் என்று முடிவு செய்தார். உடனே அத்தனை பத்திரிகை ஆபீசையும் அழைத்து அந்தப் பேச்சை பிரசுரிக்க வேண்டாம் என்று எம்.ஜி.ஆர். சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அப்படியும் அடுத்த நாள் ஒரு தினசரியில் இந்தச் செய்தி வெளியாகி விட்டது. பின்னர் அதற்கு மறுப்பு போடப்பட்டது தனிக்கதை” என்று சொன்ன சீனிவாசன், அடுத்ததாக எம்.ஜி.ஆரின் ஒழுக்கம் குறித்து பேச்சை திருப்பினார்.
“நான் அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்தபோது ஒருமுறை எம்.ஜி.ஆர். என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். “நீ இப்ப வேலைப் பார்த்துட்டு இருக்குற கம்பெனிக்கு நான் அடுத்து ஒரு படம் பண்றேன். அந்தக் கம்பெனியோட நடவடிக்கைகள் எப்படின்னு எனக்கு சொல்லு” என்றார்.
நான் சொன்னேன், “அந்தக் கம்பெனியில பொம்பள நடமாட்டம் ஜாஸ்தி. அங்க வர்ற அத்தனை பேருமே ‘அந்த’ ஈடுபாட்டுல மயங்கிப் போறாங்க”னு சொன்னேன்.
“சரி” என்று மட்டும் கேட்டுக்கொண்டு என்னை அனுப்பிவிட்டார்.
அப்போது ஆரம்பிச்சு, அந்தப் படம் முடியுற வரை, அந்த ஆபீஸ் பக்கமே அவர் போகவில்லை.
காலையில போன் செஞ்சு இன்னிக்கு எந்த இடத்துல ஷூட்டிங் என்று கேட்டுவிட்டு நேராக ஸ்பாட்டுக்கு போய்விடுவார். வேலை முடிந்ததும் நேராக வீட்டுக்கு வந்துவிடுவார்.
ஒரு நாளும் கம்பெனியில் அவர் கால் வைக்கவில்லை. பல வருடங்கள் கழித்து நானும் ஒரு இயக்குநராக வளர்ந்த பிறகு, இந்தச் சம்பவத்தைப் பற்றி எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் அவர் முன்னால் நான் பேசினேன்.
கூட்டம் முடிந்ததும் நேராக என்னிடம் வந்தவர், “அப்ப ஒரு பந்தயம் கட்டுனமே ஞாபகம் இருக்கா” என்று கேட்டார்.
“நீங்க 1000 ரூபா பந்தயம் கட்டினீங்க. அவ்வளவு தொகை என்னால கட்ட முடியாதுன்னு நான் 100 ரூபாய் கட்டினேன்” என்றேன்.
“பந்தயத்துல நீ தோத்துட்ட… எடு பணத்தை” என்றவர், என் சட்டைப் பாக்கெட்டில் கைவிட்டு 100 ரூபாய் எடுத்துக் கொண்டார்.
“என்கிட்ட இருக்கிறதே அவ்வளவு தான். வீட்டுக்கு போக கூட காசு இல்ல” என்றேன்.
“நடந்தே போ…” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், எம்.ஜி.ஆர். அந்த அளவுக்கு மன உறுதியுடன் வாழ்ந்தவர். இதை இன்றைக்கு இருக்கும் இளம் தலைமுறையினர் பின்பற்ற வேண்டும்” என்பதே இந்த மூத்த படைப்பாளியின் ஆசை.
– அருண் சுவாமிநாதன்