உலகக் கோப்பை: புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்குச் சென்ற இந்தியா!

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பைத் தொடரின் 29வது லீக் போட்டி லக்னோ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங் செய்வதாக அறிவித்தார்.

இதனால் முதலில் விளையாடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோஹித் சா்மா நிதானமாக விளையாடி, 10 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 87 ரன்கள் சோ்த்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

பின்னா் களமிறங்கிய கே.எல்.ராகுல் 3 பவுண்டரிகளுடன் 39 ரன்களும், சூா்யகுமார்யாதவ் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 49 ரன்களும் சோ்த்தனர்.

இங்கிலாந்து தரப்பில் டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளும், கிறிஸ் வோக்ஸ், ஆதில் ரஷீத் ஆகியோர்தலா 2, விக்கெட்டுகளை எடுத்தனா்.

பின்னா் 230 என்ற இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணியில், லியம் லிவிங்ஸ்டன் 27 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாக இருந்தது. ஜானி போ்ஸ்டோ 14 ரன்களும், டேவிட் மலான் 16 ரன்களும், கேப்டன் ஜோஸ் பட்லா் 10 ரன்களும் எடுத்தனர்.

இதனால் அந்த அணி 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  இதன் மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

You might also like