அ.தி.மு.க. – பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகியதாக அறிவித்தபிறகு என்னென்ன மாற்றங்கள் நடந்திருக்கின்றன என்பதை ஒரு பார்வை பார்க்கலாமா?
அ.தி.மு.க. விலகியதாக அறிவித்தாலும், பா.ஜ.க. வைப் பற்றிய எந்தவிதமான விமர்சனத்தையும் அ.தி.மு.க இதுவரை முன்வைக்கவில்லை – மாநிலத் தலைவரான அண்ணாமலையை அவ்வப்போது விமர்சித்ததைத் தவிர.
அண்மையில் ஆளுநர் மாளிகைக்கு முன்பு பெட்ரோல் குண்டு வெடித்த நிகழ்வில் கூட, ஆளுநருக்காகப் பரிந்து பேசி ஆதரவு காட்டினார் எடப்பாடி பழனிச்சாமி. ஏற்கனவே ஒரு சர்ச்சை பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையில் இருந்தது.
நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி பிரதமராவதை அ.தி.மு.க ஏற்றால்,
அடுத்து நடக்கப் போகும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக அங்கீகரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க வேண்டுகோள் வைத்தபோது, இங்கிருக்கும் அண்ணாமலையே அதை ஏற்கவில்லை.
“அதை எங்களுடைய தலைமை தான் முடிவு செய்யும்’’ என்று அறிவித்து அ.தி.மு.க.வினரின் வாயை அடைத்துவிட்டார்.
அதற்காக அ.தி.மு.க தரப்பு சும்மா இருக்குமா?
“மோடி எங்கள் டாடி’’ என்று ஏக உரிமை கொண்டாடிய ஒருவர் நம்ம கட்சியிலேயே கொஞ்ச காலமாகப் பேசாமல் இருக்கிறாரே, அவரைப் பேச வைக்கலாமே என்று முடிவு செய்து அமல்படுத்திவிட்டார்.
ராஜேந்திர பாலாஜியும் சளைக்கவில்லை. “எடப்பாடி பிரதமராகலாம்’’ என்று சிலர் பிரதமர் ஆன பட்டியலை எல்லாம் பேசி, பா.ஜ.க.வினரைச் சற்றே பரபரப்படைய வைத்தார். உடனே யாராவது அதை வழிமொழிய வேண்டாமா?
மதுரைக்காரரான செல்லூர் ராஜூவும் எடப்பாடி பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்று 2 கோடி தொண்டர்களைக் கொண்ட தலைவருக்கு இது முடியாதா? என்று மதுரை வட்டாரத் தமிழில் தன் பங்கிற்குக் கொளுத்திப் போட்டிருக்கிறார்.
இவ்வளவு எல்லாம் நடந்தும் பிரதமர் வேட்பாளருக்குப் பரிந்துரை செய்யப்படுகிற எடப்பாடி பழனிசாமி இதுவரை எதுவுமே பேசவில்லை.
பற்றாக்குறைக்கு இந்த நேரத்தில் முன்னாள் மத்திய அமைச்சரான சுப்பிரமணிய சுவாமியும் “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக ஆக்கினால் தோற்பது உறுதி’’ என்று கணித்து ஒரு பேட்டியைக் கொடுத்திருக்கிறார்.
அ.தி.மு.க.வுக்கும், பிரதமர் பதவிக்குமான எதிர்பார்ப்பு இப்போது உருவானதல்ல. அ.தி.மு.க தலைமைப் பொறுப்பில் ஜெயலலிதா வந்தபோதே அவருக்குப் பிரதமராக வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருந்திருக்கிறது.
தனக்கு நெருக்கமான வாட்டாரங்களில் அதைப் பகிர்ந்தும் இருக்கிறார்.
இந்நேரத்தில் தான் குஜராத் முதலமைச்சர் பொறுப்பிலிருந்து பிரதமர் பதவிக்கு மோடியை ‘பிரமோட்’ செய்து அத்வானியின் முன்னிலையில் சென்னையில் நடந்த துக்ளக் ஆண்டுவிழாவில் பேசினார் அதன் ஆசிரியரான சோ.
அதை ஜெயலலிதாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது பகிரங்கமாகவே ”மோடியா, இந்த லேடியா?’’ என்று கேள்வி கேட்டார்.
குஜராத்தைவிட, தமிழ்நாடு எந்தெந்த அளவில் முன்னேறியிருக்கிறது என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார். தான் சிறந்த நிர்வாகி என்பதையும் தெளிவுபடுத்தினார்.
அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து அ.தி.மு.க.வைப் போட்டியிட வைத்தார்.
37 தொகுதிகளில் வெற்றி பெற்று இந்தியாவில் பெரிய மூன்றாவது கட்சியாக அ.தி.மு.க.வைக் கொண்டு போனார். 44 சதவிகித வாக்குகளை வாங்கி அரசியல் பார்வையாளர்களை வியக்க வைத்தார்.
ஆனால், அந்த வெற்றியை வைத்துக்கொண்டு பிரதமர் பதவியை நோக்கி அவரால் நகரமுடியவில்லை.
மத்திய அமைச்சரவையில் முக்கியப் பொறுப்புகளையும் பெற முடியவில்லை.
அதன் பிறகு 2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க பெற்ற வாக்குச் சதவிகிதம் தனித்துப் பார்த்தால் 18.44 சதவிகிதம் மட்டுமே.
அப்போது டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க பெற்ற வாக்குச் சதவிகிதம் 5.38 சதவிகிதம்.
தற்போது நடக்கவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதற்கு முன் இன்னும் நலிந்திருக்கிறது அ.தி.மு.க.
இப்படிப்பட்ட நிலையில் தான் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிகிறார்கள் அ.தி.மு.க. புள்ளிகள்.
தன்னுடைய இயக்கத்தையும் பலப்படுத்தாமல், தன்னுடன் இருக்கப்போகும் கூட்டணியையும் பலப்படுத்தாமல் இத்தகைய பிரச்சாரத்தை அ.தி.மு.க முன்னெடுத்தால் அதற்கு எந்த அளவுக்கு மதிப்பிருக்கும்? அல்லது நடைமுறைச் சாத்தியம் இருக்கும்?
– யூகி