உலக வரலாற்றில் எத்தனையோ போராட்டங்கள் நடந்திருக்கின்றன என்பதை நாம் அறிவோம்.
மனிதன் உலகத்தில் எந்த மூலையில் வாழ்கிறானோ அங்கெல்லாம் ஏதோ ஒரு போராட்டம் நடந்து கொண்டேதான் இருந்திருக்கிறது ஏன் இருக்கின்றது என்று கூட சொல்லலாம்.
வலிமையானவர்கள் வலிமை குறைந்தவர்களை அடக்கி அவர்களை கசக்கிப் பிழிந்து அடிமைப்படுத்தி பல்வேறு வகைகளில் வரிகளை வசூலித்து, அவர்களின் உழைப்பை உறிஞ்சி அதன் மூலமாக மிகப்பெரிய சாம்ராஜ்யங்களை கட்டி அமைத்தார்கள் என்பது வரலாறு.
அப்படி மற்றவர்களால் கொடுமைப்படுத்தப்பட்டவர்கள் அடிமையாக இருந்தவர்கள் என்று எத்தனையோ விசயங்களுக்காக உலகில் எத்தனையோ போராட்டங்கள் நடைபெற்றன.
ஆனால் உலகத்திலேயே மானத்தை காப்பதற்காக ஒரு போராட்டம் குமரி மாவட்டத்தில் மட்டும் தான் நடந்தது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் தங்கள் இடுப்பிற்கு மேல் உடை அணிய மறுக்கப்பட்டு கலாச்சாரம் என்ற போர்வையில் பெண்களுக்கும் இது திணிக்கப்பட்டது.
உயர் சாதி பெண்களுக்கு தங்கள் மார்பை மறைக்க அனுமதி அளிக்கப்பட்டது என்றாலும் நம்பூதிரிப் பிராமணர்கள் முன்பு நாடார் சாதிப் பெண்கள் திறந்த மார்புடனே நிற்க வேண்டும் என்ற கேவலமான கட்டுப்பாடு இருந்தது.
அது மட்டுமா இன்று அரிசி, பால், மின்சாரம் என்று எத்தனையோ வரிகளை கட்டிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் இந்த உலகில் பிறந்த குழந்தைக்கு முதல் உணவு தருவது தாய்மையின் மார்பகம்தானே அப்படிப்பட்ட மார்பகத்துக்கே வரி விதித்த ஈனப்பிறவிகள் வாழ்ந்ததும் அந்த சம்பவமும் இந்த மண்ணில் மட்டும்தான் நடந்திருக்கிறது.
இதையெல்லாம் எதிர்த்து நடந்த போராட்டம்தான் தோள்சீலை போராட்டம்
பிராமணர்களுக்கே அனைத்தும் சொந்தம். அவர்களை பார்த்து கொள்வதே தர்மம் என்கிற ஆதிக்க மனப்பான்மை அந்த காலத்தில் இருந்துள்ளது.
நம்பூதிரிகள் என்று அழைத்துக் கொண்ட பிரிவினர் திருவிதாங்கூரில் அதிக அதிகாரம் பெற்றிருந்தனர்.
நம்பூதிரியை நாயர் நெருங்கி நடக்கலாம் ஆனால் தொடக்கூடாது. நம்பூதிரியிடமிருந்து நாடார் ஈழவர் போன்றோவர்கள் 36 அடி தள்ளியும் புலையர் போன்றோர் 90 அடி தள்ளியும் நிற்கவேண்டும்.
நாயர்களிடமிருந்து நாடார் ஈழவர் போன்றோர் 12 அடி தள்ளியும் புலையர் போன்றோர் 64 அடி தள்ளியும் நிற்கவேண்டும்.
இவர்கள் குடைகளை எடுத்துச் செல்லக்கூடாது. செருப்பு அணிந்து கொள்வது, தண்ணீர்க் குடங்களைப் பெண்கள் இடுப்பில் எடுப்பது, பசுக்களை வளர்த்து பால் எடுப்பது போன்றவை இவர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை.
பெண்கள் பொன் நகை அணியக்கூடாது, இடைக்கு மேலே உடை உடுத்தக்கூடாது, முண்டு எனப்படும் ஒரு முரட்டுத் துணியை மட்டும்தான் இடையில் கட்டவேண்டும், மார்பகங்களை மூடக்கூடாது.
இப்படி இன்னும் பல கொடுமைகள் சாதியின் பெயரால் அங்கே நடந்தது.
இந்த நிலை மாற பெரும் பங்காற்றியது கிறித்தவ மிஷனரிகள். தங்கள் மதத்தை பரப்புவதற்கு அவர்கள் இவர்களுக்கு உதவினார்கள் என்றாலும் அடிமைப்பட்டு கிடந்தவர்கள் எழுச்சி காண காரணமாய் இருந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
அதோடு ஐயா வைகுண்டர், இராமன் தம்பி போன்றவர்கள் இப்போராட்டத்தில் பெரும் பங்காற்றினார்.
பெண்களின் கல்விக்கு பெரிதும் உதவிய பெண் மிஷனரிகளான ஜோகன்னா செலஸ்டீனா, மீட் அம்மையார் மற்றும் மார்த்தா அம்மையார் போன்றவர்களைப் பற்றி தனித்தனி கட்டுரைகளாக ஆசிரியர் எழுதி இருக்கிறார்.
சாதியின் பெயரால் இவ்வளவு கொடுமைகள் நிகழ்த்தப்பட்டிருக்கிறதை படித்து மனம் பதறுகிறது. அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இது.
நன்றி: ஶ்ரீதேவி சத்தியமூர்த்தி
நூல்: தோள்சீலை போராட்டம்
பிரிவு: பெண்ணியம்
ஆசிரியர்: கொல்லால் எச். ஜோஸ்
விலை:₹120
பக்கங்கள்: 105