பெண்களுக்கென்று தனி உலகம் இல்லையா?

முகங்கள் – நூல் விமர்சனம்

பெண்களின் முகம் மகள், சகோதரி, மனைவி தாய் என்பதாகவே இருக்கின்றன. இவை குடும்ப உறவு சார்ந்த சுய அடையாளமற்ற முகங்கள். பெரும்பாலான பெண்களின் வாழ்க்கை இந்த முகவரிகளுடனே முடிந்து போகின்றன.

தனித்தன்மையுடன் பரிமளிக்கும் பெண்களை சமூகத்துக்கு அடையாளம் காட்டுவதே இந்நூல்.

இவர்களின் வாழ்க்கை சொல்லித்தரும் அனுபவங்கள் சராசரி பெண்களின் வாழ்க்கை பற்றிய மதிப்பீடுகளை மாற்றி அமைத்தால் அதுவே இந்த புத்தகத்தின் வெற்றி என்கிறார் நூலாசிரியரான ஆர்.வைதேகி அவர்கள்.
*
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு? என்பது போன்ற மூடத்தனமான மேற்கோள்களும், அவற்றை ஒட்டிய சமூகத்தின் கோட்பாடுகளும் ஆண்டான்டு காலமாய் பெண்களை அடக்கி வைத்திருந்தன. மட்டுமின்றி. அவர்களை அடுக்களை அடிமைகளாக்கியும்…

ஆணாதிக்க மனோபாவத்தில் உருவாக்கி வைக்கப்பட்டிருந்த அந்த அடிமை விலங்கை உடைத்தெறிந்துவிட்டு வெளிஉலகத்தில் வியாபித்துவிட்டனர் இன்றைய தலைமுறைப் பெண்கள்.

அவர்கள் ஈடுபடாத துறைகளே இல்லை என்கிற அளவுக்கு இன்று சகல துறைகளிலும் சாதிக்கவும் தொடங்கி விட்டனர்.

எனினும், பெண்களை பிணைத்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத கை விலங்குகள் முற்றிலுமாக அவர்களை விடுவித்துவிடவில்லை.

மதம், சாதி, குடும்பம், ஆணாதிக்கம், பொருளாதாராம் என்ற பெயர்களில் எத்தனையோ பெண்கள் இன்னமும் வீட்டுச் சிறையில் அடைப்பட்டுக் கிடக்கிறார்கள். வேறு சில பெண்களுக்கோ வீட்டுப் பெண்ணாய் இருப்பதிலேயே சுகமும். பெருமையும்..

மகள், மனைவி, தாய் என ஆண்களை சார்ந்த உறவு முறைகள் மட்டுமே கடைசிவரை பெண்களின் அடையாளங்களாய், வாழ்க்கையாய் இருக்கின்றன. இவற்றைத் தாண்டி பெண்களின் உலகம் என்று ஏதுமில்லையா? ஏன் இல்லை? என்ற கேள்வியோடு பெண்களின் வாழ்க்கைக்கு புது அர்த்தங்களை கற்பித்தவர்கள் பலர்.

அவர்களில் சிலரது வாழ்க்கைப் பதிவே – முகங்கள். சுமார் பத்து ஆண்டுகளாய் பத்திரிகையாளராய் இருக்கும் ஆர். வைதேகி அவர்கள் பல துறைகளில் சாதனை செய்ததன் மூலம் பிரபலமான பெண்களை நேர்கண்டு அதை நேர்த்தியாய் தொகுத்திருக்கிறார்.
*
இந்த புத்தகத்தில் 39 பிரபலமான பெண்களின் அகமுக உணர்வுகளை வெற்றிகளை சாதனைகளை படம்பிடித்து எழுதி இருக்கிறார் ஆசிரியர்.

**

ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்து தன்முகமும். முகவரியும் சமூகத்திற்குத் தெரியும்படியாய் வெளியே வந்திருக்கும் பெண்கள் இன்று அநேகம்.
அவரவர் வீட்டுச்சூழல், உறவுச் சூழல், வாழும் சூழல் அத்தனையிலும் தடைகளைக் கடந்து வரவேண்டியிருக்கிறது. தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும். எடுத்த இலட்சியத்தில் இடையறா உழைப்பும் கொண்டு முன்னேறி வரும் பெண்களின் அனுபவங்களை இங்கு ஆர். வைதேகி, ‘முகங்கள்’ என்ற தன் நூலில் தெளிவாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்களைப் பேட்டி கண்டு அவர்கள் பெற்ற வெற்றிகளைத் தொகுத்துக் காட்டியதன் மூலம் முன்னேறத் துடிக்கும் பெண்களுக்கு ஓர் உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறார்.

அறிவும், திறமையும், கலையுணர்வும் பெரும்பான்மையான பெண்களுக்கு நிறைந்திருக்கின்றன. பயன்படுத்தும் *தீவிரத்திற்கேற்றபடியும், சூழ்நிலையின் வசதிக்கேற்றபடியும் அவை பிரகாசிக்கின்றன. திருமணமாகாத பெண்களுக்குப் பெற்றோரும், திருமணமான பெண்களுக்கு கணவன், சுற்றமும் உறுதுணையாய் அமையும்போது பெண்களுக்கு அது பெருந்துணையாகிவிடுகிறது. எவர் துணையுமின்றி தன்னம்பிக்கையும் துணிவும் கொண்டு அதீத உழைப்போடு அயராத முயற்சியோடு முனைந்து வெற்றிகண்ட பெண்களும் பலர்.

இங்கு, வைதேகி அவர்கள் ஒவ்வொரு பெண்ணின் முகத்தையும், முகவரியையும் முடிந்தவரை முழுமையாகச் சொல்லியிருக்கிறார்.

பெண் இல்லாத உலகம் ஆணுக்குத் துயரமானது. அவனது ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் உணர்ந்து பணிவிடை செய்ய காலத்துக்கும் பெண் வேண்டும். ஆனால் அப்பெண்ணின் வெற்றியும், அவளுக்கான சமூக அங்கீகாரமும் அவனுக்கு ஜீரணிக்க முடியாத நெருடல்கள். வீட்டைத் தாண்டி வெளியேவும்,
வேலை பார்க்கிற இடங்களிலும் பெண் சந்திக்கிற ஆண்களிடம் மட்டும் காணப்படுகிற விஷயமில்லை இது. அவளது இரத்தமும், சதையுமான குடும்ப ஆண்களிடமும் இந்த நெருடல்கள் உண்டு என்பதே வேதனையான உண்மை!

பெண்ணுக்கும் ஆசைகள் உண்டு. கனவுகள் உண்டு. லட்சியங்கள் உண்டு. பெண்ணின் வாழ்க்கையை முழுமையானதாக்குவதாகச் சொல்லப்படுகிற திருமணம்தான் இங்கே பெரும்பாலானவர்களக்குக் கனவுகளை, ஆசைகளை, லட்சியங்களைச் சிதைக்கிற முதல் ஈமச் சடங்கு வரதட்சணை.

சீர் செனத்திகளோடு புகுந்த வீட்டுக்குப் பயணப்பட்டாலும், அவள் தன் திறமைகளை, கலையார்வத்தைப் பிறந்த வீட்டு உறவுகளோடு சேர்த்து உதறிவிட்டே வாழப் போகிற வீட்டில் வலது கால் வைக்கிறாள். பெண்ணுரிமை பெண் விடுதலை என மூலைக்கு மூலை முழக்கங்கள் தொடர்ந்தாலும், நம் சமுதாயத்தைப் பொறுத்தவரை பெண் இன்னமும் இரண்டாம் பிரஜையே.

நினைத்ததை நிகழ்த்திக் காட்டுவதும் லட்சியத்தில் வெற்றியைத் தொடுவதும் எல்லாப் பெண்களுக்கும் சாத்தியப்படுவதில்லை.

பெண்ணின் வெற்றியும் சாதனையும் இங்கே ஆண்களின் பார்வையில் ஏளனத்துக்குரிய விஷயங்கள். அழகு அழுகை இரண்டும் பெண்ணுக்கு சகலத்தையும் வசப்படுத்தித் தருகிற ஆயுதங்கள் என்பது ஆண்களின் வாதம், ‘ஜெயித்தவர்களின் வாழ்க்கையை நெருங்கி நோக்கினால், அதற்காக அவர்கள் விலையாய் கொடுத்த வலி, வேதனை. கண்ணீர், முயற்சி, உழைப்பு தியாகம் என எல்லாம் விளங்கும்.

வேலைக்குப் போவது அல்லது வீட்டிலிருப்பது என பெண்ணுக்குத் தெரிந்தது இரண்டே வழிகள்; மனமும், தன்னம்பிக்கையும் இருந்தால் சம்பாதிக்கவும் சாதிக்கவும் வழிகள் எத்தனையோ உண்டு. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பலரது வாழ்க்கையே உதாரனங்கள்! வெற்றியை அடைய பெண்கள் பிரயோகிக்கும் ஆயுதங்களென ஆண்கள் குறிப்பிடும் அழகு வசீகரம். வயது என எல்லாமே இங்கே அர்த்தமற்றுப் போயிருக்கின்றன.

பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு ஆண் இருப்பான், வெற்றிக்கு வழிகாட்டியாய் சிலர். அவளை விரக்திக்குத் தள்ளி, வாழ்க்கையை சிதைத்து, அதன் விளைவாகவே வெற்றியை நோக்கி ஓட வைத்த சிலர் இங்கே பல பெண்களின் வெற்றிக்குப் பின்னால் இருப்பது ஆண்களின் வஞ்சகங்கள், துரோகங்கள்.

மகள், மனைவி, தாய் என்கிற பெண்ணின் வாழ்க்கை, பிறருக்காக வாழ்ந்து, மெழுகாய் உருகி, சுயம் இழந்து நிற்கிற பெண்கள் பரவலாய் உண்டு.

வாழ்க்கையை எதிர்நோக்க, வாழ்க்கை என்கிற சவாலில் ஜெயிக்க, தன்னை உணர இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் அத்தனை பெண்களும் உதாரண மனுஷிகள், சுலபமாய் கிடைக்கும் எதிலும் சுவை இருக்காது. பெண்ணின் வெற்றியும் அப்படித்தான். விமர்சனங்களை, கட்டுப்பாடுகளை. தடைகளை, சிரமங்களைத் தகர்த்து, அதன் பின்னர் அடையும் வெற்றி குசியானது. ருசித்தவர்களுக்கு மட்டுமே புரிகிற ரகசியம் அது.

ஜெயித்த பெண்களின் வாழ்க்கைப் பதிவுகள், வாழ்க்கையைத் தொலைத்த ஒவ்வொரு பெண்ணுக்கும் உற்சாக மருந்தாய் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தின் விளைவே இத்தொகுப்பு உதயமாகக் காரணம்.

விதித்த வாழ்க்கை இதுதான் என்று தனக்குத்தானே முற்றுப்புள்ளி வைத்துக் கொண்ட பெண்களுக்கு ‘முகங்கள் தொகுப்பு ஒரு தொடக்கத்தைக் காட்ட வேண்டும் அதுதான் இத்தொகுப்புக்குக் கிடைத்த வெற்றியாக கணக்கில் எடுத்துக் கொள்ள முடியும்.

ஆர். வைதேகி அவர்களின் முகங்களில் வரும் அத்தனை முகங்களுமே வித்தியாசமானவை.

தன்பாட்டுவாசனையால் தெய்வீகத்தெம்பாங்குபாடி மக்களை ஈர்த்துவரும் பரவை முனியம்மா, சர்க்கார் விருது கிடைக்கலை என்று கவலைப்பட்டிருக்கிறார். இவருக்கு மக்கள் தந்திருக்கும் விருது மாபெரும் விருது.

நாட்டியத்திற்காக மட்டுமே தன்வாழ்க்கையை வார்த்துக் கொண்ட மாளவிகா சருக்கையின் பேட்டியில், தன் வாழ்வைப் பயனுள்ள செலவழிப்பதற்காக, தான் வாழுமிடத்தில் 247 ஆலமரம் வளர்த்து நிம்மதி முறையில் கொண்டுவிட்ட பெங்களூர் திம்மக்கா பற்றிய செய்தி அற்புதமானது.

சகல துறைகளிலும் தன் முத்திரை பதித்து எடுத்தகாரியம் யாவினும் வெற்றி கண்டு வரும் கமலிஸ்ரீபால்,

விழிப்புணர்வுக்காகப் போராடும் சுசீலாமாரியப்பன், திருச்செந்தூர் முருகன் சன்னதியில் கே.பி.எஸ். அவர்களால் ‘வாரிசாக’ப் பாராட்டப்பட்ட கோவை கமலா,
பெண்களுக்கு பாதகமான சட்டங்களை மாற்றக்கோரிக் குரல் கொடுக்கும் பத்மினி ஜேசுதுரை,

முஸ்லீம் லீக் மகளிர் அணித் தலைவி ஃபாத்திமா ஸாஃபர், கமலா செல்வராஜ் என்று பெண் சாதனையாளர்களின் பட்டியல் நீளமாயிருக்கிறது.

ஒவ்வொரு முகமும் துல்லியமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அவரவர் இயல்பு, எண்ணம். இலட்சியம்: போராட்டம், வெற்றி, நிகழ்வு வாழ்க்கை எல்லாம் எதார்த்தமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது .

இத்தனை முகங்களில் ஒரு சில முகங்களை மட்டும் அறிமுகமாக கொண்டிருக்கிறேன்.

டல்லாஸ் நகரத்தில் இருந்தபோது நர்த்தகி நடராஜன் அவர்களை நேரில் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். அவர்கள் நாட்டியத்தை முழுமையாக கண்டு களித்திருக்கிறேன், களி நடம் புரிந்து இருந்தேன். அவர்களது முக ஓவியம் வரைந்து அவர்கள் மகிழ தந்திருக்கிறேன்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள ஆளுமைகள்:

டாக்டர்.கமலா செல்வராஜ்
சித்
பரவை முனியம்மா
அனிதா குப்புசாமி
இளம்பிறை
டாக்டர் மனோரமா
ஃபாத்திமா முஸாஃபர்
பானுமதி
ரேவதி ஷன்முகம்
நர்த்தகி நட்ராஜ்
மாலதி லஷ்மண்
சுசீலா மாரியப்பன்
சுமலி ஸ்ரீபால்
பத்மினி ஜேசுதுரை
ரேகா ஷெட்டி
மாளவிகா சருக்கை
அருள்மொழி
ரமணிச்சந்திரன்
ஜானகி விஸ்வநாதன்
இரம் அலி
நோயலின் ஜான்
கலைராணி
மல்லிகா பத்ரிநாத்
சூர்யநர்மதா
தபஸும்
ஜெயா ஸ்ரீதர்
கோவை கமலா
ஃபவுசியா ஃபாத்திமா
அஜிதா
ரோஷிணி
கலா
டாக்டர் வி.ஜமுனா
மேஜிக் ராதிகா
ரஜ்னி கிருஷ்ணன்
சுமதி
ராதிகா சுரஜித்
மாலதி
பாரதி பாஸ்கர்
பாம்பே ஞானம்

***

நூல்: முகங்கள்
ஆசிரியர் : ஆர்.வைதேகி .
வெளியீடு : போதி பதிப்பகம்  .
முதல் பதிப்பு :  2003
மொத்த பக்கங்கள் : 130
விலை : ரூபாய் 60.

You might also like