யாஷ், சுதீப், தர்ஷன், ரக்ஷித், ரிஷப் போன்ற கன்னட நட்சத்திரங்கள் கர்நாடகாவுக்கு வெளியிலும் புகழ் பெற்ற நிலையில், முந்தைய தலைமுறை நடிகரான சிவராஜ்குமார் தனது ‘சக்கரவர்த்தி’ அந்தஸ்தைக் கட்டிக் காப்பதிலேயே கவனம் செலுத்தி வந்தார்.
‘அது மட்டுமே போதாது’ என்று அவர் யோசித்து வருவதைக் கடந்த சில ஆண்டுகளாக வெளிவரும் படங்களே உணர்த்துகின்றன.
‘ஜெயிலர்’ படம் வந்தபிறகு பிற மாநில ரசிகர்களும் கூட, அவரை உற்றுநோக்கத் தொடங்கியுள்ளனர்.
அதனைப் பயன்படுத்திக்கொண்டு தமிழ், தெலுங்கு, இந்தியில் ‘டப்’ செய்யப்பட்டு, ‘பான் இந்தியா படம்’ முத்திரையுடன் வெளிவந்திருக்கிறது ‘கோஸ்ட்’.
எம்.ஜி.ஸ்ரீனிவாஸ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு அர்ஜுன் ஜென்யா இசையமைத்துள்ளார்.
கைப்பற்றப்படும் சிறை!
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு சிறை சில கைதிகளால் கைப்பற்றப்படுகிறது.
அந்த சிறைச்சாலையைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் விழா நடைபெற்று வந்தபோது அச்சம்பவம் நிகழ்கிறது.
அவ்விழாவில் கலந்து கொண்டவர்களில் மத்திய அமைச்சரும் முன்னாள் சிபிஐ அதிகாரி வாமனனும் (பிரசாந்த் நாராயணன்) அடக்கம்.
வாமனனை மீட்க வேண்டுமென்ற நோக்குடன், உதவி கமிஷனர் செங்கண்ணா (ஜெயராம்) தலைமையில் தனிப்படை அமைக்கப்படுகிறது. கடத்தல் கும்பலுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொ
றுப்பும் அவரிடமே ஒப்படைக்கப்படுகிறது. தங்களது கோரிக்கை என்னவென்று சரிவரச் சொல்லாமல் அக்கும்பல் இழுத்தடிக்கிறது.
அதேநேரத்தில், சிறைக்குள் மாட்டிக்கொண்டவர்களை மீட்கும் நோக்கோடு பல வேலைகளில் இறங்குகிறார் செங்கண்ணா.
அவர் மேற்கொண்ட விசாரணையில், அந்த சிறையைக் கைப்பற்றியவர் தளவாயி முத்தண்ணா (சிவராஜ்குமார்) என்பதை அறிந்ததும் அதிர்கிறார்.
காரணம், முன்னாள் கேங்க்ஸ்டரான முத்தண்ணா இறந்துவிட்டார் என்றே காவல்துறை கருதி வருகிறது.
சிறையிலிருக்கும் கைதிகளை வைத்தே முத்தண்ணா சிறையைக் கைப்பற்றி இருக்கிறார். ஆதலால், ‘நிச்சயமாக அது ஓரிரு நாட்களில் திட்டமிடப்பட்டதல்ல’ என்று உணர்கிறார் செங்கண்ணா.
‘முத்தண்ணா ஏன் வாமனனைக் கடத்த வேண்டும்? அவருக்கும் வாமனனுக்கும் மோதல் இருக்கிறதா’ என்று அவர் ஆராய்கிறார்.
அப்போது, சில ஆண்டுகளுக்கு முன் சட்டவிரோதமாகப் பதுக்கப்பட்ட தங்கத்தை சிபிஐ கைப்பற்றிய வழக்கைப் பற்றி தெரிய வருகிறது. அதில், அரசு வசம் ஒப்படைக்கப்பட்டது 100 கிலோ தங்கம் என்றும், அங்கு கைப்பற்றப்பட்டது 1,000 கிலோ தங்கம் என்றும் தெரிய வருகிறது.
அப்படியானால், மீதமுள்ள தங்கம் பதுக்கப்பட்டிருக்கிறதா? அதனைப் பதுக்கியது யார்? அந்த உண்மை முத்தண்ணாவுக்கு தெரிந்தது எப்படி என்பது போன்ற பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது இந்த ‘கோஸ்ட்’.
ஹெய்ஸ்ட் த்ரில்லர் படங்களின் கடைசி ரீலில் பல ஆச்சர்யங்கள் நிறைந்திருக்கும்; அது ரசிகர்களை உற்சாகமூட்டும். இதிலும், அப்படிப்பட்ட விஷயங்கள் உள்ளன.
ஏற்ற இறக்கமுள்ள திரைக்கதை!
சிறைச்சாலையைச் சில கைதிகள் கைப்பற்றும் தொடக்கக் காட்சியே, இப்படத்தின் உள்ளடக்கம் செறிவாக இருக்குமா இல்லையா என்பதைச் சொல்லிவிடுகிறது.
இது மாபெரும் பிரமாண்ட படம் இல்லை என்பதையும் உணர்த்திவிடுகிறது.
அதேநேரத்தில், சின்னச் சின்னதாகத் திருப்பங்களைப் புகுத்தி திரைக்கதையில் ஆச்சர்யங்களை நிறைத்திருக்கிறார் இயக்குனர் எம்.ஜி.ஸ்ரீனிவாஸ். அதுவே, லாஜிக் மீறல்களைப் பற்றி யோசிக்காமல் இப்படத்தைப் பார்க்கச் செய்திருக்கிறது.
மகேந்திர சிம்ஹாவின் ஒளிப்பதிவு, தீபு எஸ்.குமாரின் படத்தொகுப்பு, மோகன்.பி.கெரேவின் தயாரிப்பு வடிவமைப்பு ஆகியன இணைந்து இயக்குனரின் கனவுக்கு உருவம் தந்திருக்கின்றன.
இது வழமையான மசாலா படம் இல்லை என்பதை உணர்த்த, துரு பிடித்தாற் போன்ற தோற்றம் பிரேம்களில் நிரப்பப்பட்டிருக்கிறது.
டிஐயும் விஷுவல் எபெக்ட்ஸும் இணைந்து, ஒரு குறிப்பிட்ட வண்ணக் கலவை படம் முழுக்கச் சீராகப் பரவியிருக்க வகை செய்திருக்கிறது.
அதற்கேற்ப திரையில் பாத்திரங்களை அளவாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் எம்.ஜி.ஸ்ரீனிவாஸ்.
சிவராஜ்குமாரின் ஹீரோயிசம், அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், அக்காட்சிகளையே துருப்புச்சீட்டாகக் கொண்டு கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர். அதற்கு அவரும் ஒப்புக் கொண்டிருப்பது நல்ல விஷயம்.
இப்படத்தின் இறுதிக்காட்சிகளில் இளமைத் தோற்றத்தில் சிவராஜ்குமார் உலா வருவது நம்மை ஆச்சர்யப்படுத்தும். அதற்காக, ப்ரோஸ்தடிக் ஒப்பனை மற்றும் டீஏஜிங் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளன.
‘நெடுஞ்சாலை’யில் வந்த பிரசாந்த் நாராயணன் இதில் வில்லனாக நடித்துள்ளார். தொடர்ச்சியாக ஹாலிவுட் ஆக்ஷன் படங்களைப் பார்ப்பவர்களுக்கு, அவர் ஏற்ற பாத்திரம் புதிதாகத் தெரியாது.
மேலும் ‘கேஜிஎஃப்’ புகழ் அர்ச்சனா ஜோயிஸ், சத்யபிரகாஷ், தத்தண்ணா என்று கன்னடப் படவுலகில் கவனத்திற்குரிய கலைஞர்களாகத் திகழும் சிலர் நடித்துள்ளனர்.
அவர்களோடு ஜெயராமும் பிரதான பாத்திரமொன்றில் தோன்றியுள்ளார்.
உண்மையைச் சொன்னால், சிவராஜ்குமாருக்கு இணையான முக்கியத்துவம் இப்படத்தில் அவருக்குத் தரப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்திக்கொண்டு, மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
சிவராஜ்குமாரும் ஜெயராமும் சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருப்பது, இதுவொரு நேரடித் தமிழ் படம் எனும் உணர்வை உருவாக்குகிறது.
அர்ஜுன் ஜென்யாவின் பின்னணி இசை, படம் விறுவிறுப்பாக நகர்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
சிறையைக் கைப்பற்றியவர்களுக்கும் போலீஸ் தரப்புக்குமான ‘போட்டா போட்டி’ ரசிகர்களை ஆட்கொள்வதற்கு, அதுவே வகை செய்திருக்கிறது.
தொடக்கத்திலும் இறுதியிலும் இடம்பெற்ற காட்சிகள் நம்மை இருக்கை நுனிக்குக் கொண்டு வருகிறது.
ஆனால், திரைக்கதையின் நடுப்பகுதியில் இருக்கும் ஏற்ற இறக்கங்கள் சற்றே அயர்ச்சியைத் தருகின்றன. அதையும் மீறி, அக்காட்சிகளில் நிறைந்துள்ள திருப்பங்கள், ‘இன்னும் கதை மீதமுள்ளது’ என்பதை உணர்த்தியிருப்பது நல்ல விஷயம்.
சிவராஜ்குமாரின் இமேஜ்!
கர்நாடக அரசியலிலும் திரைத்துறையிலும் ராஜ்குமார் குடும்பத்திற்கென்று தனி செல்வாக்கு உண்டு. அந்த இமேஜை இன்று சிவராஜ்குமார் கட்டிக் காத்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக வெளியாகும் அவரது படங்களிலும், காட்சிகளில் அது லேசாக வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.
அதனைப் பயன்படுத்திக் கொண்டு, முற்றிலும் வேறொரு திசையில் கதை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் எம்.ஜி.ஸ்ரீனிவாஸ். அது மட்டுமே, இப்படத்தை வழக்கத்திற்கு மாறானதாக உணர வைத்திருக்கிறது.
போலவே, எண்பதுகளின் இறுதியில் சிவராஜ்குமார் எப்படி இருந்தாரோ அந்த தோற்றத்தை விஎஃப்எக்ஸ் உதவியுடன் காட்டியிருக்கிறது ‘கோஸ்ட்’.
அந்தக் காட்சிகள் அவரது நீண்டநாள் ரசிகர்களை நிச்சயம் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
ஒரு கேங்க்ஸ்டர் கொள்ளையடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் என்பதுதான் இப்படத்தின் ஒருவரிக் கதை.
இந்தக் கதையில் லாஜிக் மீறல்களைக் கணக்கெடுப்பது தேவையற்ற ஒன்று.
ஏனென்றால், அவ்வாறு நோக்கினால் பல துருத்தல்கள் தலைநீட்டும் என்று நன்கு தெரிந்துதான் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
அதேநேரத்தில், சென்னையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவமொன்றைத் தழுவி இப்படத்தை ஆக்கியிருப்பதாக இயக்குனர் எம்.ஜி.ஸ்ரீனிவாஸ் தந்த பேட்டிகள் அதற்கு எதிர்த்திசையில் இருக்கின்றன.
இந்தக் கதையில் வரும் எந்த விஷயத்தை உண்மைச் சம்பவம் என்று இயக்குனர் குறிப்பிடுகிறாரோ என நமக்குத் தெரியாது. அவர் வெளிப்படையாகச் சொன்னால் மட்டுமே, அது நமக்குத் தெரியவரும்.
அதையும் மீறி, ‘வெளிநாடுகளில் இருப்பது போன்று நம்மூரிலும் சிறைச்சாலைகள் தனியார்வசம் செல்லுமா’ என்ற விவாதத்தைத் தொடங்கி வைத்திருப்பது கவனத்தை ஈர்க்கும் முக்கிய அம்சம்.
அது போன்ற சில அம்சங்களே இந்த ‘கோஸ்ட்’டை கூர்ந்து நோக்க வைக்கின்றன.
– உதய் பாடகலிங்கம்