பயணம் என்பது அனைத்து ஜீவராசிகளின் வாழ்விலும் இன்றியமையாத ஒன்று! ஆதி மனிதன் தன்னுடைய ஊர்சுற்றும் குணத்தினால் தான் ஒவ்வொரு புதிய பொருட்களையும் கண்டுபிடித்தான்.
அப்படியான பயணத்தை, ஊர் சுற்றுதலைப் பற்றிய விரிவான புத்தகம் தான் இந்த ஊர் சுற்றிப் புராணம்!
இயற்கையான புராதன மனிதன் மிகவும் ஊர்சுற்றியாகத்தான் இருந்திருக்கிறான். விவசாயம், தோப்புத் துரவு, வீடு வாசல் எதுவுமே இல்லாத அவன், வானத்துப் பறவைகளைப் போல் சுதந்திரமாக நிலத்தில் சுற்றிக் கொண்டிருந்தான்.
குளிர்காலத்தில் ஓரிடத்தில் இருந்தால், கோடைக் காலத்தில் அங்கிருந்து மிகவும் தொலைவில் வேறோர் இடத்திலிருப்பான்.
“ஊர் சுற்றி, உலகத்தின் மிகச் சிறந்த செல்வமாக ஏன் ஆகிறான்? ஏனெனில் இந்தப் புதிய உலகத்தை ஆக்கியவனே அவன்தான்!
பழங்கால மனிதர்கள், வசதியாக இருக்கிறதென்று ஏதேனும் ஒரு நதி ஓரத்திலோ, குளக்கரையிலோ தங்கிவிட்டிருந்தால் உலகம் முன்னேறி இருக்குமா?
மனிதனின் இந்த ஊர் சுற்றும் மனப்பான்மை, பலமுறை இரத்த ஆறுகளை ஓடச் செய்திருக்கிறது.
ஊர் சுற்றிகளினால் கலவரம் நிகழ்ந்து, பலர் கொல்லப்படுவதை நாம் விரும்பவில்லை தான்!
ஆனால் புராதன காலத்தில் ஊர் சுற்றிகளின் போக்குவரத்து நடக்காமல் இருந்திருந்தால் மனித சமுதாயம் மீளாத் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டிருக்கும். மனிதர்கள் மிருகங்களைவிட வளர்ச்சியடைந்திருக்கமாட்டார்கள்.
பழங்கால ஊர் சுற்றிகளில் ஆரியர், சகர், ஹுணர் தங்கள் இரத்தக் கறை படிந்த செயல்களால் மனித சமுதாயத்தை முன்னேறச் செய்த விவரம், வரலாற்றினில் நமக்குத் தெளிவாகத் தென்படுவதில்லை.
ஆனால் மங்கோலிய ஊர் சுற்றிகளின் அற்புதச் செயல்களை நாம் நன்றாக அறிவோம்.
மேற்கத்திய நாடுகளில் விஞ்ஞான யுகத்தைத் துவக்கியவை வெடி மருந்து, பீரங்கி, கந்தகம், அச்சகம், திசைகாட்டி, மூக்குக்கண்ணாடி ஆகிய பொருட்களாகும்.
இப்பொருட்களை மேற்கு நாடுகளுக்குச் சென்று அளித்தவர்கள் மங்கோலிய ஊர் சுற்றிகள்தாம்! மேற்கு நாடுகள் முன்னேற வழி செய்த கொலம்பஸும், வாஸ்கோடகாமாவும் ஊர்சுற்றிகள்தாம்!
ஒரு காலத்தில் அமெரிக்கா மனித நடமாட்டமில்லாமல் தான் இருந்தது. ஆசியாக் கண்டத்துக் கிணற்றுத் தவளைகளுக்கு ஊர் சுற்றுவது மறந்துவிட்டது. அதனால் அமெரிக்காவில் அவர்களால் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியவில்லை.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு கூட ஆஸ்திரேலியா கேட்பாரற்றுக் கிடந்தது. சீனாவிற்கும், இந்தியாவிற்கும் தங்களின் பழமையான நாகரிகத்தின்மீது ஒரே பெருமை!
ஆனால் இந்த இரு நாடுகளில் யாருக்கும் ஆஸ்திரேலியா சென்று தங்கள் கொடியைப் பறக்கவிடவேண்டுமென்ற எண்ணமே தோன்றவில்லை.
இன்று நூற்று அறுபது கோடி மக்கள் சுமையினால் சீனாவும், இந்தியாவும் தத்தளிக்கின்றன. ஆனால் நிலப்பரப்பில் பெரிதான ஆஸ்திரேலியாவில் ஒரு கோடி மக்கள்கூட இல்லை.
இன்று ஆசியாக்காரர்களுக்கு ஆஸ்திரேலியாவின் கதவு சாத்தப்பட்டுவிட்டது. ஆனால் இரு நூறாண்டுகளுக்கு முன், அது நம் கைக்கெட்டும் பொருளாக இருந்தது.
சீனாவும் இந்தியாவும் ஆஸ்திரேலியாவின் செல்வத்தை ஏன் கை நழுவவிட்டன? அவர்கள் ஊர் சுற்றும் மனப்பாங்கை இழந்து விட்டனர்; மறந்துவிட்டனர்.”
– இவ்வாறு ஊர் சுற்றியின் பெருமைகளைப் பற்றியும், ஊர் சுற்றும் பழக்கத்தைத் தொலைத்து விட்டதால் நாம் தவற விட்ட பூகோல ரீதியிலான நன்மைகள் குறித்து வருத்தம் கொள்கிறார் ஆசிரியர்.
ஒரு முதல் தர ஊர் சுற்றிக்கு இருக்க வேண்டிய குணநலன்கள் என்னென்ன? அவர்கள் ஊர் சுற்றி வாழ்வை ஆரம்பிக்கும் முன்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் யாவை என்பதை எல்லாம் ராகுலன் தெளிவாக குறிப்பிடுகிறார்!
‘இந்தியப் பயண உலகின் தந்தை’ எனப் போற்றப்படும் ராகுல்ஜி தன் பயண அனுபவங்களால் எதிர் கொண்ட சவால்களையும்,
கண்டடைந்த சாதனைகளையும், வெவ்வேறு ரசனைகளுடன் கலாபூர்வமாகவும், ஆச்சரியங்களோடும்,
அதிசயங்களோடும் அதே சமயத்தில் மிக மிக எளிமையாகவும் காட்சிப்படுத்துகிறது இந்நூல்.
‘உலகத்திலுள்ள தலைசிறந்த பொருள் ஊர் சுற்றுவது தான் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்’ என அறிவித்துக் கொண்ட ராகுல்ஜி பல உலக நாடுகளுக்கும் பயணித்த தனது அனுபவச் செழுமையால் எழுதியுள்ள இந்நூல், புதிதாக ஊர் சுற்றப் புறப்படுபவர்களுக்கான மிகச் சிறந்த வழிகாட்டும் கையேடாகும்!
புத்தகம்: ஊர் சுற்றிப் புராணம்
ஆசிரியர்: ராகுல சாங்கிருத்யாயன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பக்கங்கள் – 150
விலை – ₹130