உருக்கமாகப் பேசி வீடியோ வெளியிட்ட மருத்துவர்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
தொடர்ந்து 14வது நாளாக இன்றும் வன்முறை நீடித்து வருகிறது. பெரும்பாலான மருத்துவமனைகள் செயல்படாமல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.
மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வசதிகள் குண்டுவெடிப்புகளால் சேதமடைந்துள்ளன. சில தினங்களுக்கு முன் காசா நகரில் உள்ள அல்-அஹ்லி அரபு – மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலால் தான் இந்த மருத்துவமனை தாக்குதல் ஏற்பட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், இந்த தாக்குதல் பாலஸ்தீனத்தால் ஏவப்பட்ட ஏவுகணையால் தவறுதலாக நிகழ்ந்திருக்கக் கூடும் என இஸ்ரேல் சார்பில் மறுக்கப்பட்டது. எனவே இரு தரப்பினரும் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.
இந்த மருத்துவமனை தாக்குதலில் 471 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காஸா ஐரோப்பிய மருத்துவமனை இயக்குநர் யூசுப் அல் அகாத் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் மருத்துவர் முன்னே 6 குழந்தைகளின் சடலங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது.
மருத்துவர் யூசுப் அல் அகாத் பேசியபோது, “இந்த குழந்தைகளைப் பாருங்கள்.. இவர்களை கொன்றது யார்?.
சுதந்திர உலகமே, ஒடுக்கப்பட்டு துயறுற்று இருக்கும் இந்த மக்களின் மீது படுகொலை நடத்தப்பட்டபோது எங்கே சென்றாய். இந்த குழந்தைகளை உலகம் பார்க்கட்டும்” என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.
காண்போரின் மனதை உலுக்கும் இந்த வீடியோ தற்போது வேகமாகப் பரவி வருகிறது.