மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக!

– சைதை துரைசாமி, பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர்.

அ.தி.மு.க.வுக்கு விதை போட்டவன் என்ற வகையில், 52-ம்ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுகவின் ஆரம்ப நாட்களை எண்ணிப் பார்க்கிறேன்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 10-ம் தேதி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செய்தி கேட்டவுடன் உடுமலைப்பேட்டை இஸ்மாயில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

மதுரை கர்ணன் கண்களைப் பறிகொடுத்தார். வத்தலக்குண்டு ஆறுமுகம், பூலாவரி சுகுமாரன் என 20-க்கும் மேற்பட்டோர் உயிர்த்தியாகம் செய்தனர்.

தன்னெழுச்சியாக 2-வது சுதந்திரப் போராட்டம் போன்று நடந்த ஆர்ப்பாட்டம், தர்ணா, சாலை மறியல்களால் தமிழகம் ஸ்தம்பித்தது.

எல்லா ஊர்களிலும் தாமரைப்பூ கொடியேற்றி புரட்சி செய்த எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

‘எம்.ஜி.ஆர். வாழ்க’ என்று எழுதப்பட்ட வாகனங்கள் மட்டுமே செல்ல முடிந்தது. அலையலையாய் சென்னைக்கு கிளம்பிவந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளை மதித்து, தர்ம யுத்தத்தின் அடையாளமாக அக்டோபர் 17-ம் தேதி அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். உருவாக்கினார்.

இப்படி எம்.ஜி.ஆரின் லட்சக்கணக்கான ரசிகர்களின் ரத்தத்திலும், வியர்வையிலும்தான் அ.தி.மு.க. தோன்றி, வளர்ச்சியடைந்தது.

முதலில் அ.தி.மு.க.வுக்கு அனைத்து நிர்வாகிகளும் எம்.ஜி.ஆரால் நியமனம் செய்யப்பட்டார்கள்.

முதல் பொதுக்குழு நடைபெற்ற அன்று, சைதாப்பேட்டையின் தொகுதி அமைப்பாளராக 21 வயதான என்னை நியமனம் செய்து, எனது தியாகத்தை அங்கீகரித்தார்.

இந்தியாவிலே முதன்முதலாக, கட்சியின் கிளைக்கழக செயலாளர் முதல் பொதுச்செயலாளர் வரை அனைவருமே தொண்டர்களால் தேர்வு செய்யப்பட வேண்டுமென்ற புரட்சிகரமான சட்டவிதிகளை கட்சிக்கு உருவாக்கி, 1980-ம் ஆண்டு கட்சியின் முதல் தேர்தல் நடைபெற்றது.

சென்னை மாவட்டத்தின் பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு, போட்டியின்றி எம்.ஜி.ஆர். தேர்வு செய்யப்பட்டார்.

சென்னையின் 14 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், நான் மட்டும் சைதாப்பேட்டை தொகுதிச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டேன்.

அதேபோன்று ஜெயலலிதா – ஜானகி அணிகள் இணைப்பிற்கு பிறகு 2-வது முறையாக கட்சி விதிகளின்படி நடைபெற்ற தேர்தலிலும், நான் தொகுதிச் செயலாளராக போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றேன்.

1977-1987 வரையிலும் சட்டமன்ற பொதுத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு சென்னை மாவட்ட கட்சி நிர்வாகிகள் யாருக்கும் எம்.ஜி.ஆர். வாய்ப்பு தரவில்லை.

ஆனால், எனக்கு மட்டும் 1980-1984 தேர்தல்களில் சென்னையில் போட்டியிட அனுமதித்து எனது தியாகத்தை அங்கீகரித்தார்.

1972-1977 வரை என் மீது மட்டும் 17 பொய் வழக்குகள் போடப்பட்டன. இதில் மிக முக்கியமானது, அன்றைய முதலமைச்சர் கருணாநிதிக்கு சைதாப்பேட்டையில் எலுமிச்சம்பழ மாலை அணிவித்ததற்காக, கொலை முயற்சி என புனையப்பட்ட பொய் வழக்கு. இதில் எனக்கு 9 மாதக் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.

சென்னை  உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து விடுதலை பெற்றேன். அதற்காக எனக்கு பாராட்டுக் கூட்டத்தை நடத்த எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார்.

அதுவே கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெயலலிதாவின் முதல் பொதுக்கூட்டமாகவும் அமைந்தது.

அந்தக் கூட்டத்தில் எனக்கு மலர்மாலை, மலர்க்கீரிடம் அணிவித்து என் தியாகத்தைப் பாராட்டிப் பேசினார் ஜெயலலிதா.

1980 சட்டமன்றத் தேர்தலில் நான் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்த சோகத்துடன் தலைவரை சந்தித்தபொழுது, “தோல்வியைப் பற்றி கவலைப்படாதே. நீதான் அ.தி.மு.க.வின் முதல் மேயர், இன்றில் இருந்து களப்பணியாற்று” என்று ஆறுதல் சொன்னார்.

ஆனால், நீதிமன்றத் தடைகளால் சென்னை மாநகராட்சி தேர்தல் நடைபெறவில்லை. 1984-ம் ஆண்டு சைதாப்பேட்டை தொகுதியில் என்னை மீண்டும் போட்டியிட வைத்து, வெற்றி பெறச் செய்தார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு எனக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

ஆனால், அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி ஏற்பட்ட 1996-ம் ஆண்டு தேர்தல் மற்றும் 2011-ம் ஆண்டு அரசியல் முக்கியத்துவம் பெற்ற கொளத்தூர் தொகுதி தேர்தலிலும் என்னை வேட்பாளராக நிறுத்தினார் ஜெயலலிதா.

அப்போது கொளத்தூர் தொகுதியில் சில சதிகளால் குறைந்த வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்த என்னை, அதன்பிறகு நடந்த பெருநகர சென்னை மேயர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பளித்தார்.

1980-ல் எம்.ஜி.ஆர். சொன்ன தீர்க்கதரிசனப்படி 31 ஆண்டுகள் கழித்து, கூட்டணி இல்லாமல் அ.தி.மு.க. தனித்துப் போட்டியிட்ட பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலில், 5 லட்சத்து 19 ஆயிரத்து 747 வாக்குகள் பெற்று, இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்து, பெருநகர சென்னையின் முதல் அ.தி.மு.க. மேயராக ஜெயலலிதா முன்னிலையில் பதவியேற்றேன்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் சென்னையின் 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், ஒட்டுமொத்த தமிழகத்தில் 37 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு ஜெயலலிதாவுக்கு நான் வாழ்த்து சொன்னபோது, ‘இந்த வெற்றிக்கு உங்களது அம்மா உணவகம் ஒரு முக்கிய காரணம்’ என்று என்னைப் பாராட்டினார்.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னரும், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னரும் கட்சியில் நிகழ்ந்த பல பிளவுகளை ஒன்றிணைத்து, ஒற்றுமை ஏற்படுத்தி கட்சிக்கு வலிமை சேர்த்தவர்களில் நானும் ஒருவன்.

அ.தி.மு.க.வுக்கு விதை போட்ட நான் இன்று வரை கட்சிக்கு உரமாகவே இருந்து வருகிறேன்.

அ.தி.மு.க.வின் முதல் தியாகி என்று என்னை அடையாளப்படுத்திய எம்.ஜி.ஆரின் வாக்குப்படி, அரசியலில் இன்றும் அந்த தியாக வாழ்க்கையே தொடர்கிறது.

அ.தி.மு.க.வுக்காக தியாகம் செய்த அனைவருக்கும் வீர வணக்கம் செலுத்தி, அன்று முதல் இன்று வரை கட்சியை வளர்த்து வரும் பொறுப்பாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், எம்.ஜி.ஆர். பக்தர்கள், தொண்டர்கள் என அத்தனை நல்ல உள்ளங்களையும் வாழ்த்துகிறேன்.

சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் மதுபானக் கடைகள் நடத்துவதற்கு வாய்ப்பு கிடைத்த போதும், அவற்றை நிராகரித்து, அறவழியில் பொருள் ஈட்டி மனிதநேய செயல்பாடுகளை செய்து வருகிறேன்.

இதுவரை 6 முறை சட்டமன்ற தேர்தல்களிலும், ஒரு முறை மேயர் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றியும், தோல்வியும் பெற்றுள்ளேன்.

எந்த தேர்தலிலும் ஓட்டுக்குப் பணம்ணிகா அரசியலாக ஆனால், இப்போது கொடுத்ததில்லை.

ஆனால் இப்போது வணிக அரசியலாக களம் மாறிவிட்டதால், தேர்தல் அரசியலில் இருந்து விலகி, இனி என்றென்றும் மக்களுக்கான சேவையை மட்டுமே பிரதானப்படுத்தி, எம்.ஜி.ஆரின் பெரும்புகழ் பரப்பும் அ.தி.மு.க. தொண்டனாக பிரதிபலன் பாராமல் செயல்படுவேன்.

  • நன்றி : தினத்தந்தி
You might also like