ஜோதிகா எனும் நடிப்பு ராட்சசி!

தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைத்துவிட முடியும்.

நிறம், உயரம், உடல்வாகு, முக வசீகரம் ஆகியவற்றோடு ரசிகர்களைக் கவரும் நடிப்பு என்று அதற்குப் பல காரணிகளும் உண்டு.

அந்த அளவீடுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட சிலரில் ஒருவர் நடிகை ஜோதிகா.

வாலி, குஷி, பூவெல்லாம் கேட்டுப்பார் படங்களில் தென்பட்ட இளமையையும் துறுதுறுப்பையும் இன்று அவரிடம் எதிர்பார்க்க முடியாது; என்றபோதும், அவர் எவ்வாறெல்லாம் திரையை ஆக்கிரமித்து ரசிகர்களை ஆட்கொள்வார் என்பது குறித்த எதிர்பார்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முடியும்.

அதனைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு, திரையில் ஜோதிகாவின் இருப்பு அமையும் என்பதுவே அவரது நடிப்புக்கான பாராட்டுப் பத்திரம்.

அப்படிப்பட்ட ஜோதிகாவுக்குப் புகழ் பெற்றுத்தந்த சில படங்கள் என்னவென்று பார்க்கலாமா?

சோனாவாக அசத்திய ஜோதிகா!

காதலுக்கு மரியாதையின் இந்தி ரீமேக்கான ‘டோலி சஜா கே ரஹ்னா’வில்தான் ஜோதிகா முதன்முறையாக அறிமுகம் ஆனார். அந்தப் பெருமை இயக்குனர் பிரியதர்ஷனைச் சாரும்.

ஆனாலும், அதன் மூலமாகப் புதிதாக இந்திப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில்தான், ‘வாலி’ படத்தில் மிகச்சில நிமிடங்களே வந்து போகிற ‘சோனா’ பாத்திரம் ஜோதிகாவுக்குக் கிடைத்தது.

உண்மையைச் சொன்னால், அந்த படத்தில் அவரது பாத்திரத்தின் பெயர் சோனா கிடையாது. ஆனாலும், ‘ஓ.. சோனா…’ என்று ரசிகர்கள் கொண்டாடுகிற அளவுக்குப் படத்தில் அவர் தோன்றியிருந்தார்.

1999ஆம் ஆண்டு வெளியான ‘வாலி’ படத்தின் வெற்றியால், தொடர்ச்சியாகப் பல படங்களில் இடம்பிடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் ஜோதிகா.

குஷி தந்த முகவரி!

எஸ்.ஜே.சூர்யா இயக்கிய இரண்டாவது படமான ‘குஷி’ வழியே, ஒரு நாயகியாக பட்டிதொட்டியெங்கும் புகழ் பெற்றார் ஜோதிகா.

அதில், அவர் ஏற்ற பாத்திரத்தின் பெயர் ஜெனிஃபர். கொஞ்சம் ஹாலிவுட் நாயகிகளின் சாயல் தெரிந்தாலும், அதில் அவரது நடிப்பு நாயகன் விஜய்க்கு இணையானதாக அமைந்திருக்கும்.

திரையில் இயல்பான நடிப்புடன் விஜய் வலம் வர, அவரை விட ஒரு படி மேலாக ஜோதிகாவின் இருப்பு அமைந்திருக்கும். அதுவே, ’அவர் ஓவர் ஆக்டிங் செய்கிறார்’ என்று ‘கமெண்ட்கள்’ பிறக்கவும் காரணமானது.

2000ஆவது ஆண்டில் மட்டும் குஷியோடு சேர்த்து முகவரி, ரிதம், தெனாலி, சினேகிதியே, உயிரிலே கலந்தது ஆகிய படங்களில் தோன்றியிருந்தார் ஜோதிகா. இப்படங்கள் அனைத்திலுமே பாடல்கள் ஹிட் ஆகின.

காமெடி நடிப்பும் வரும்!

2001ஆம் ஆண்டில் லிட்டில் ஜான், டும் டும் டும், ஸ்டார், பூவெல்லாம் உன் வாசம், 12பி ஆகிய படங்களில் நடித்தார் ஜோதிகா. இவையனைத்திலுமே, நகைச்சுவை நடிப்பைக் கொஞ்சமாகவோ, அதிகமாகவோ அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

குறிப்பாக, ‘டும் டும் டும்’ படத்தில் மாதவன், கல்பனா, விவேக்கோடு இணைந்து அவர் நடித்த காட்சிகள் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தன. அதுவே, ஜோதிகாவுக்கு ‘காமெடி நடிப்பு நன்றாக வரும்’ என்பதைத் திரையுலகுக்கு உணர்த்தியது.

‘தூள்’ பெர்பார்மன்ஸ்!

2002ஆம் ஆண்டு அஜித்துடன் ’ராஜா’, பிரபுதேவா உடன் ’ஒன் டூ த்ரி’, கன்னட நடிகர் உபேந்திராவுடன் ‘நாகரஹாவு’ படங்களில் இணைந்தார் ஜோதிகா.

அம்மூன்று படங்களும் பெரிய வெற்றிகளைப் பெறவில்லை; ஆனால், அதற்கடுத்த ஆண்டு மாபெரும் ‘ப்ளாக்பஸ்டர்’ படங்களில் அவர் இடம்பிடித்தார்.

விக்ரம் உடன் ‘தூள்’, மாதவனுடன் ‘பிரியமான தோழி’, சூர்யாவுடன் ‘காக்க காக்க’, விஜய்யுடன் ‘திருமலை’, சிரஞ்சீவி உடன் ‘தாகூர்’ மற்றும் லைலா, ரம்பாவுடன் இணைந்து நடித்த ‘த்ரி ரோசஸ்’ ஆகியன அடுத்தடுத்து வெளியாகின.

முற்றிலும் சினிமாத்தனம் நிறைந்தது என்றபோதும், ‘தூள்’ படத்தில் ஜோதிகா ஏற்ற ஈஸ்வரி பாத்திரம் நம்மைக் கவர்ந்தது.

அந்த ஆண்டு வெளியான இதர படங்களுக்கும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்புக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.

மன்மதனும் சந்திரமுகியும்..!

அருள், பேரழகன் படங்கள் சுமார் வெற்றியைப் பெற்றபோதும், 2004ஆம் ஆண்டில் வெளியான ‘மன்மதன்’, ‘மாஸ்’ இரண்டும் பெருவெற்றியை அடைந்தன. முன்னதில் சிம்பு உடனும், பின்னதில் நாகர்ஜுனா உடனும் நடித்திருந்தார் ஜோதிகா.

மன்மதனைப் பொறுத்தவரை, சிம்புவோடு அவர் இணைந்து நடித்த காட்சிகள், பாடல்கள் ரசிகர்களுக்குத் துருத்தலாகத் தோன்றவில்லை. அதற்கு ஜோதிகாவின் நடிப்புத் திறமையே காரணம் என்று தாராளமாகச் சொல்லலாம்.

2005ஆம் ஆண்டில் மாயாவி, சந்திரமுகி என்ற இரண்டு படங்களில் இடம்பிடித்தார் ஜோதிகா. ‘மாயாவி’ படத்தில் ஒரு நடிகையாகவே அவர் தோன்றியிருந்தார்.

அதில், சிம்ரனை உயர்த்தியும் ஜோதிகாவைத் தாழ்த்தியும் சூர்யா பேசுவதாக ஒரு வசனம் உண்டு. அது திரையில் இடம்பெற ஒப்புக்கொண்டது சாதாரண விஷயமல்ல.

அதே ஜோதிகா தான், ‘சந்திரமுகி’யில் சிம்ரன் நடிக்க இயலாமல் போன ’கங்கா’ பாத்திரத்தை ஏற்றார். அப்படம் நம்மை எப்படியெல்லாம் ஆட்டுவித்தது என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை.

அப்படத்தின் படப்பிடிப்பின்போது, தயாரிப்பாளரான பிரபுவும் நாயகனான ரஜினிகாந்தும் செட்டுக்கு வருவதற்கு முன்பே ஒப்பனையுடன் தயாராக இருப்பாராம் ஜோதிகா.

தான் செய்த வேலைக்கு அவர் அளித்த மரியாதை எத்தகையது என்பது அந்தவொரு தகவலில் அடங்கியிருக்கிறது.

ஆராதிக்க வைக்கும் நடிப்பு!

’காக்க காக்க’, ‘பேரழகன்’, ‘மாயாவி’ என்று தொடர்ந்து சூர்யா உடன் ஜோடி சேரத் தொடங்கியபோதே, ஜோதிகாவும் அவரும் காதலிக்கின்றனர் என்று செய்திகள் வெளிவரத் தொடங்கி விட்டன.

அந்தச் சூழலில், 2006ஆம் ஆண்டில் சரவணா, ஷாக், ஜூன் ஆர், வேட்டையாடு விளையாடு, சில்லுன்னு ஒரு காதல் ஆகிய படங்களில் நடித்தார் ஜோதிகா. இவற்றில் ‘சில்லுன்னு ஒரு காதல்’ படம் மட்டும், சூர்யா – ஜோதிகா திருமணத்திற்குப் பின்னர் வெளியானது.

கமலோடு ஜோதிகா ஜோடி சேர்ந்த ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படம், நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் திரைக்கு வந்தது.

ஆனாலும், அதில் அவர் ஏற்ற ஆராதனா பாத்திரம் ரசிகர்கள் மனதோடு ஒட்டிக் கொண்டது.

திறமைக்கான சான்று!

2007ஆம் ஆண்டு வெளியான ‘மொழி’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ இரண்டும் ஜோதிகா என்றொரு நடிப்பு ராட்சசியின் விஸ்வரூபத்தைக் காட்டின.

இரண்டுமே வெவ்வேறு முனைகளில் நிற்கும் பாத்திரங்கள். ஆனாலும், அவற்றை அப்பாத்திரங்களாக எண்ண வைத்ததே அவரது நடிப்புத் திறமைக்கான சான்று.

இரண்டையும் பார்த்து முடித்தபிறகு, ‘மிகை நடிப்பு’ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட முடியாது.

திருமணத்திற்கு முன்னர் ஜோதிகா நடித்த ‘மணிகண்டா’ உட்படச் சில படங்கள் மிகத்தாமதமாக வெளியாகின. அதன் தொடர்ச்சியாக, ஜோதிகா மீண்டும் நடிப்பாரா என்ற கேள்வியும் அவரைத் தொடர்ந்தது.

2015ஆம் ஆண்டு வெளியான ’36 வயதினிலே’ அதற்கான பதிலாக அமைந்தது.

தனித்துவம் வேண்டும்!

திருமணத்திற்குப் பிறகு ஜோதிகா நடித்தவற்றில் ‘மகளிர் மட்டும்’, ‘காற்றின் மொழி’ போன்றவை மட்டுமே நம் நினைவில் நிற்கின்றன. காரணம், அவற்றில் அவர் ஏற்ற பாத்திரங்களின் படைப்பு.

அப்பாத்திரங்களில் அவரைத் தவிர்த்து இன்னொருவரை யோசித்துப் பார்க்க இயலாது. அதுவே, அப்படங்களை அவர் தேர்ந்தெடுத்து நடித்ததன் வெற்றி.

அதேநேரத்தில் நாச்சியார், ராட்சசி, பொன்மகள் வந்தாள் உட்படச் சில படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதற்கும், ஜோதிகாவின் பாத்திரத் தேர்வே காரணம்.

ஏனென்றால், வெறுமனே நாயகியை முன்னிறுத்தும் படங்களை மட்டும் அவரிடம் இருந்து நாம் எதிர்பார்க்கவில்லை.

அதையும் தாண்டி, அவரது இருப்பைக் கொண்டாடும்விதமான கதையும் காட்சியமைப்பும் இருந்தாக வேண்டியது கட்டாயம்.

‘மொழி’, ‘வேட்டையாடு விளையாடு’ போன்று ‘அலப்பறை’ அற்ற நடிப்பைத்தான் வெளிப்படுத்த வேண்டுமென்ற கட்டாயமில்லை; ‘தூள்’, ‘12பி’ படங்கள் தந்த கமர்ஷியல் பட கொண்டாட்டங்களையும் ஜோதிகாவினால் உருவாக்க முடியும்.

அதற்கு, அவர் ஏற்கும் பாத்திரங்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தக் கதையும் நேர்த்தியானதாக, இயல்பானதாக, இன்றைய ரசிகர்கள் ஏற்கத் தகுந்ததாக இருக்க வேண்டும்.

அதனைக் கைக்கொண்டால், நடிப்பு ராட்சசி எனும் பாராட்டுக்குரிய படங்களை ஜோதிகாவால் அள்ளி அள்ளித் தர முடியும்!

– உதய் பாடகலிங்கம்

You might also like