– எழுத்தாளர் பவா செல்லதுரை விளக்கம்
எழுத்தாளனிடம் இருக்கும் ஒரே சொத்து, அவனின் ஒரே ஒரு சொல் மட்டுமே. அதுவே அவனை உயர்த்தும்! அதுவே அவனை வீழ்த்தும்! அப்படி ஒரு சொல்லால்தான் இப்போது நான் வீழ்த்தப்பட்டிருக்கிறேன்.
நண்பர்களின் தொடர் அறிவுறுத்தல்களால் இந்த ஐந்து நாட்களாக அலைக்கழிக்கப்பட்டேன். எதுவும் எதிர்வினையாற்றாதே, பேஸ்புக் பார்க்காதே, பதில் ஏதும் எழுதாதே என்று.. அதனாலேயே இன்று வரை இம்மௌனம் காத்தேன்.
தொடர்ந்து பல நண்பர்கள் நான் என்றோ, யாருக்கோ செய்த சில உதவிகளை இந்நேரத்தில் என்னை தேற்றுவதாக சொல்லி என்னை உள்ளுக்குள் சுருங்க வைக்கிறார்கள்.
ஆனால், என்னை அறிந்த, என் வாழ்நாள் முழுவதும் உடன் இருந்த நண்பர்கள் என நம்பிய பலரும் தங்கள் மீது ஒரு கல்லும் பட்டுவிடக்கூடாதென மௌனம் காக்கிறார்கள். நான் செய்த தவறுக்கு எல்லா கல்லெறிகளையும் என் திரேகமே ஏற்கட்டும் அல்லது சிதையட்டும்.
கல்வி நமக்கு எதுவும் செய்யாது என நான் மட்டுமல்ல. ஒரு பொது சமூகத்தின் எதிரி கூட சொல்ல மாட்டான்.
கிராமம் கிராமமாகப் போய் சைக்கிள் மிதித்து இருபது வருடங்களாக அதற்காக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் அறிவொளி இயக்கத்துடன் சேர்ந்து நாடகம் போட்டவன் நான்.
இந்த வகுப்பறை கல்வியில் போதாமைகள் இருப்பதை தொடர்ந்து பேரா. வசந்தி தேவி, எஸ்.எஸ்.ராஜகோபாலன், பேரா. மாடசாமி தொடங்கி, தோழர் பிரான்சிஸ் கஜேந்திர பாபு வரை அரை நூற்றாண்டு காலமாய் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வரிசையில் கடைசி வரிசை ஆள் நான். அதற்காக அவர்களோ, நானோ இக்கல்வியை நிராகரிக்க எங்குமே சொன்னதில்லை.
ஒவ்வொருவரும் கல்வித் தரத்தை இன்னும் ஒரு அங்குலம் மேம்படுத்த ஒவ்வொரு வகையாய் செயல்படுகிறோம், பேசுகிறோம். அவ்வளவுதான். இணையத்தில் பரவிக்கிடக்கும் என் காணொளிகளே இதன் நேரடி சாட்சி.
பெண் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி ராஜாஜி எழுதின ஒரு கதையை 50 முறையாவது நான் பல கல்லூரிகளில் பேசியிருக்கிறேன். பல தனியார் கல்வி நிறுவனங்களின் அழைப்பில் போய் அரசு பள்ளிகளின் முக்கியத்துவத்தை இன்றைக்கும் பேசுகிறேன்.
அந்த ஷோவில் நடந்தது ஜோவிகா என்ற அந்தப் பெண் கிட்டத்தட்ட விசித்திரா மேடத்தால் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டார்.
குடும்பத்தோடு தெருவில் நிற்கும்போது எப்படி மேடம் மேத்ஸ் மண்டைக்கு ஏறும் எனக் கேட்டதற்கு பெருங்குரலெடுத்து கத்தியும், தமிழில் உன் பெயரை எழுதத் தெரியுமா-டீ உனக்கு என்று விசித்திரா மேடத்தால் மீண்டும் அவமானப்படுத்தப்பட்ட போது நான் ஜோவிகாவை சமாதானப்படுத்த போய் சொன்ன வார்த்தைதான் அது.
எடிட் செய்யப்பட்ட அக்காட்சியை இப்போது பார்த்தபோது நான் முற்றிலும் தவறாக அர்த்தப்படுமாறு பேசி இருக்கிறேன் என்று தெரிகிறது.
வகுப்பறைகளைத் தாண்டியும் கற்றுக் கொள்ள முடியும் என்பது மட்டுமே நான் சொல்ல வந்த கருத்து.
அது தவறான அர்த்தத்தில் வெளிப்பட்டதை முழு மனதோடு ஒப்புக்கொண்டு என் மன்னிப்பை தமிழ் சமூகத்தின் முன்வைக்கிறேன்.
இந்த கல்லெறிதல்களினூடே நேற்று காலை திருவண்ணாமலையிலிருந்து அழைத்த ஒரு நண்பர், உங்களால் மட்டும் 2000 பேர் இந்த ஊரில் கல்வி கற்றிருப்பார்கள் என கலங்கினார்.
அவருக்கு என் மீது உள்ள அதீத பிரியம் அது. ஆனால் யோசித்துப் பார்க்கையில் என் முயற்சியால் கல்வி கற்றவர்கள் ஒரு 200 பேராவது குறைந்தது இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஆரம்பித்து ஜூலை வரை இதை ஒரு இயக்கமாகவே நண்பர்களோடும், குடும்பத்தோடும் சேர்த்து செய்திருக்கிறேன்.
அண்ணாமலைபுரம், கரியான் செட்டித்தெரு ஆகிய மலைவாழ் மக்கள் பெருமளவில் வசிக்கும் பகுதிகளில் கோவில் வாசலில் உட்கார்ந்து இரவெல்லாம் கணக்கெடுத்து அக்குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க உதவியிருக்கிறோம்.
தொடர்ந்து செய்து கொண்டும் இருக்கிறோம். இனிமேலும் அது தொடரும்.
இந்த கல்வியாண்டில் மட்டும் முப்பதைந்து மாணவர்களுக்கு பள்ளிக் கல்லூரி கட்டணம் செலுத்த என் நண்பர்களிடம் கையேந்தியிருக்கிறேன்.
எம்.பி.ஏ படிக்கிற மாணவனிலிருந்து தொடங்கி ஒன்றாம் வகுப்பு சேர்கிற மாணவன் வரை இதில் அடக்கம்.
இதில் ஒரு துளியும் பங்கேற்காதவர்கள் தான் கருங்கற்களோடு முன் வரிசையில் நிற்பவர்கள் என்பதும் நானறிந்ததே.
ஐம்பதாண்டு கால ஒரே மாதிரியான ஓட்டம் சலிப்பதற்கு முன் ஒரு சிறு வேறு மாதிரியான தேர்வுத் தேவைப்பட்டது எனக்கு. அந்த நேரத்தில் தான் முற்றிலும் புதிதான இருபது பேரோடு இருக்கப் போகிறோம் என்பதுவே பிக்பாஸூக்கு நான் போனதற்கான முன்னகர்வு.
வாழ்வில் ஒருமுறைக் கூட பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் பார்த்ததில்லை. அதில் ஆர்வமும் இருந்ததில்லை.
முற்றிலும் வெற்று மனநிலையுடன் தான் பிக்பாஸ் – க்கு சென்றேன். அது ஒரு கேம் ஷோ என்பது புரியவே எனக்கு ஒரு வாரம் தேவைப்பட்டது.
நீங்கள் நினைப்பது மாதிரி அந்த வீட்டில் எனக்கு எந்த சிறுமையும், அவமானமும் நிகழ்ந்துவிடவில்லை, அக்கலைஞர்கள் தங்கள் அப்பாவை மாதிரி கூட இல்லை. அதற்கும் மேலாக என்னை பாதுகாத்தார்கள்.
24 மணி நேர நிகழ்வை வெறும் 45 நிமிடங்களில் பார்த்து விட்டு தாங்களாகவே ஒரு முடிவுக்கு வருவது எவ்விதத்திலும் நியாயமில்லை.
நான் அங்கு ஒரு காஃபிக்காக விசித்திரா மேடம் முன் அவமானப்படுத்தப்பட்டேன் என்பது என் வாசகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது என பதிவிட்டிருந்தார்கள். காஃபித்தூள் தீர்ந்துவிட்ட நிலையில் நானாக இருந்தாலும் அந்த பதிலையே கூறியிருப்பேன்.
பணம்தான் என் குறிக்கோள் எனில் நூறு நாட்களை சிரமப்பட்டேனும் கடந்திருக்கலாம். ஏனோ அன்று இரவு என் மனதை சூழ்ந்து கொண்ட இருண்மையிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள முடியாமல் மட்டுமே வெளியேறினேன்.
வெளியில் அதைவிடவும் பேரிருள் இன்னமும் அடர்த்தியாகவும், அழுத்தமாகவும் இணைய நண்பர்களால் என் மீது சூழவைத்துவிட்டது.
மூன்றாம் நாள் நான் கதை சொல்லிக் கொண்டிருக்கும்போதே பிரதீப் அழ ஆரம்பித்தார். அத்தம்பியை ‘வாழ்’ திரைப்படம் பிரிவியூ பார்க்கும்போதே பார்த்திருக்கிறேன்.
பேசுவதை நிறுத்திவிட்டு ஏன் எனக் கேட்கிறேன். சார் நீங்க கடைசிவரை எங்க கூட இருக்கனும் சார்.
இவங்க யாராவது நீங்க எச்சில் துப்புறீங்க, அதற்கடுத்து நாலைந்து காரணங்களை சொல்லி உங்களை அசிங்கப்படுத்திடுவாங்களேன்று கவலையா இருக்கு சார் என சொல்லும்போது அங்கிருக்கிற விசித்திரா மேடம் உட்பட அவர் எப்படா எச்சி துப்பினார்? என கோபப்பட்டார்.
அவர் அதன் பின் எங்க கூட ஜாலியா இருக்கமாட்டிறீங்க என சொன்னபோது அதை மறுத்துதான் நான் என் இயல்பை பிக்பாஸே சொன்னாலும், கடவுளே சொன்னாலும் மாத்திக்க முடியாது என்றேன்.
அவைகள் எடிட் செய்யப்பட்டு எச்சித்துப்புதலுக்காக நான் அவ்விதம் எதிர்வினையாற்றினேன் என திரிக்கப்பட்டிருந்தது.
ஒரு நட்சத்திர விடுதிபோல வடிவமைக்கப்பட்டிருக்கும். அவ்வீட்டில் நாகரீகமுள்ள எந்த மனிதனும் எச்சில் துப்ப முடியாது. கேட்டால் அப்படித்தான் துப்புவேன் எனவும் சொல்ல முடியாது.
வெளியில் இதை பல கோடி பேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கடுத்த வார்த்தைகளில் அவர் சொன்ன குற்றச்சாட்டுகள் கவனமாக எடிட் செய்யப்பட்டிருப்பதை வெளியில் வந்த பிறகே நண்பர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
வருடத்தில் ஒரு லட்சம் பேரையாவது, பல நகரங்களில் பல்வேறு நிலப்பரப்புகளில் சந்திக்கிறேன்.
அப்படி ஒரு பழக்கம் என்னையறியாமல் எனக்கு உண்டு என இப்போதும் யாராவது சொல்லுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
அனன்யா என்ற நடன கலைஞர் பிரதீப்பிடம் சாரை பற்றி ஏண்டா, அப்படி சொன்ன? எனக் கேட்டபோது அதுதான் பிக்பாஸ் கேம் அது அவருக்கும் தெரியல, உனக்கும் தெரியல என சொன்ன காட்சியும் வெளியாகியுள்ளது. ஒரு வகையில் பிரதீப் தன் கேமில் முழு வெற்றியடைந்திருக்கிறார். அடையட்டும்.
முற்றிலும் சிதைக்கப்பட்ட பால்யத்தைக் கொண்ட அவருக்கு இப்பரிசு பணம் என்னை அவமானப்படுத்துவன் மூலம் கிடைக்குமென்றால் கிடைத்துவிட்டுப் போகட்டும்.
அவரைவிட எல்லா நிலையிலும் வறுமையிலும் வாழ்வின் மேன்மையிலும் இருக்கும் நிக்ஸனுக்கும் இது கிடைத்தால் எனக்கு சந்தோஷமே.
கமல் என்னை அறிமுகப்படுத்தும் போது ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ எந்த பெயரை திட்டமிட்டு தவிர்த்தேன் என்பது இன்னொரு குற்றச்சாட்டு.
அந்த இரு நிமிடங்களில் என்ன கேட்கப் போகிறார் என தெரியாத போது எந்த கலைஞனும் அவ்வளவு கான்ஷியசாக இருக்க முடியுமா?
அடுத்த நிமிடமே ஒளிப்பரப்பட்ட என்னைப் பற்றிய ஏ.வி யில் நான் கான்ஷியசாகவே ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ பெயரை சொல்லியிருக்கிறேன்.
இது பற்றி கேள்வியெழுப்பிய தோழர்களை தனித்தனியே தொலைபேசியில் அழைத்து என்னை விளக்கியிருக்கிறேன்.
சமூக வலைத்தளத்தில் என் காணொலிகளில், என் நேர் காணல்களில், என் புத்தகங்களில் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ என்ற பெயரை என் அளவுக்கு உச்சரித்த இன்னொரு கலைஞன் இருந்திருக்க வாய்ப்பில்லை. தோழர்கள் படித்துவிட்டு பதிவிடுங்கள்.
இனி வருங்காலங்களில் நான், என் எழுத்து, கதைசொல்லல், சினிமா என என்னை சுருக்கிக்கொள்கிறேன் போதுமா?
அடுத்த கதைசொல்லல்.
நான் அன்று சொன்னது கதையல்ல. ஒரு வாழ்வனுபவம். அதை இப்படிச் சுருக்கலாம் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு ஊறுகாய் விற்க வந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறார்.
அவள் அவரை கன்னத்தில் அறைகிறாள். நிதானித்து பின் நான் தவறாக நடந்துகொண்டேன் என வருந்துகிறார்.
அவர்கள் அப்புறம் நட்பாகி ‘அவள் திருமணத்திற்குப் பிறகு முதல் விருந்துத் தருகிறார்’.
அப்பிரதியின் கடைசிவரி இப்படி முடியும். எல்லாவற்றையும் எனக்காக பொறுத்துக் கொண்ட விஜயலஷ்மி இதையும் பொறுத்துக் கொண்டார். விஜயலட்சுமிக்கு இந்நிகழ்வில் வேறுஎந்த முக்கியத்துவமும் இல்லை.
இச்சம்பவத்தை யாரும் எப்படியும் சொல்வழியாகப் பகிரலாம் இச்சம்பவத்தில் விஜயலஷ்மி டீச்சருக்கு எந்த இடமும் இல்லை. அப்பெண் அவரின் மாணவி இல்லை. விஜயலஷ்மி டீச்சரே இல்லை.
மருத்துவ கல்லூரியை பாதியில் கைவிட்டு பாலேந்தரனோடு ஓடி வந்து டெலிபோன் டிபார்ட்மெண்டில் வேலை பார்ப்பவர், நான் அன்றைய மனநிலையில் நுட்பமற்ற அப்பார்வையாளர்களுக்கு இச்சம்பவத்தை சுருக்கிச் சொன்னேன். அவ்வளவுதான்.
இப்பிரதியின் தலைப்பு ‘பிழை’ இல்லை. ‘முகம்’. பிழை என்பது நான் அடுத்து சொன்ன ஜெயமோகனின் கதை.
வாசிப்பின் ஆரம்பம் அல்லது அறிமுகமுள்ள எவராலும் புரிந்துகொள்ள கூடிய இன்னொன்று அடுத்து நான் சொன்ன ‘கால்’ கதை. அது ஐந்து வருடங்களுக்கு முன் கமல் எனக்கு சொன்ன ஒரு சம்பவம்.
அன்று அவர் எனக்குச் சொன்னது பிக்பாஸில் சொன்னதின் இன்னொரு வெர்ஷன். அதை நான் புனைவாக மாற்றி சிறு கதையாக்கினேன்.
நான் எழுதின கதையை நானே மாற்றி சொல்வேனா? அது சாத்தியமா என மட்டும் யோசியுங்கள்.
கமல் சொன்னது ஒரு நிகழ்வு. நான் எழுதியது ஒரு புனைவு.
நான் கதைகளை மாற்றிச் சொல்கிறேன் என ஒரு கடைகோடி வாசகன் சொன்னாலும் அவரை அழைத்துபேசி அதை சரிசெய்பவன் நான்.
ஒரு கதைசொல்லி கதையை ஒப்பிப்பவன் அல்ல. அதிலிருந்து இன்னொன்றை உருவாக்குபவன். இருவருமே கிரியேட்டர்கள்தான்.
ஆனால் உலகின் மகத்தான ஒரு கதைசொல்லியால் கூட எழுத்தாளனின் ஸ்டைல்யை வார்த்தைகளில் கொண்டு வந்து விடவே முடியாது. இதைதான் அராத்து தன் காணொலியில் விளக்கியிருக்கிறார்.
அதனால் தான் மௌனி, லா.சா.ரா, அசோகமித்ரனின் உள்ளடங்கிய குரலை சொல்ல முடியாமல் தவிர்த்தும் அல்லது முயன்றும் பார்ப்பேன். என் காணொலிகளில் இதை சொல்லியிருக்கிறேன்.
ஆனால் பல எழுத்தாளர்களின் பெயர்களை பல வாசகர்களுக்கு கடத்தியிருக்கிறேன் என்பதிலும் பெருமிதம் கொள்கிறேன்.
இறுதியாக, நான் வாசிக்கவும். எழுதவும் புத்தகங்கள் நிறைந்திருக்கிறது. கதை சொல்லி கல்லாகட்ட என்னிடம் எதுவுமில்லை.
பத்து வருடங்களாக கதைசொல்லி நூற்றுக்கணக்கான வீடியோக்கள் இணையத்தில் உள்ளது. நூறு ரூபாய் கூட அதில் இதுவரை சம்பாதித்தது இல்லை. அது எனக்குத் தேவையுமில்லை.
அந்த வீடியோ மூலம் வரும் வருமானம் வேறு ஒரு சேனலுக்கு சென்று சேர்கிறது அது எவ்வளவு என்பதை கூட நான் இதுவரை கேட்டது இல்லை.
இதை பொதுவெளியில் பதிவிட வேண்டியிருப்பது அவர்களை சிறுமைப்படுத்துவது. அது அவசியமுமில்லை.
என் வாழ்வாதறத்துக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது. ஒரு வருடத்தில் ஐம்பது கூட்டங்களிலாவது பேசுகிறேன்.
யாரிடமாவது வற்புறுத்தி பேரம் பேசியிருக்கிறேனா? பணம் கேட்டிருக்கிறேனா? என சம்பந்தப்பட்ட யாரேனும் கூறுங்கள். எந்த இலக்கிய அமைப்பின் கூட்டங்களில் கலந்துக்கொள்வதற்கும் ஒரு ரூபாய் கேட்டதில்லை.
என் Youtube Account காலாவதியாகிக் கிடக்கிறது. Twitter, Insta விலும் நண்பர்கள் ஆர்வத்தால் ஆரம்பித்த கணக்கு அன்றே என்னால் கைவிடப்பட்டது.
எனக்கு பணம் தேவையெனில் E.B யில் உதவி நிர்வாக அதிகாரியாக இருந்த போது ஒரு நாளைக்கு சில ஆயிரங்களை வீட்டிற்கு எடுத்து வந்திருக்கலாம். அப்புறம் பேசுவதற்கும், எழுதுவதற்கும் அர்த்தமற்று போகும் வாழ்வு.
இதய சிகிச்சைக்காக மலர் ஹாஸ்பிட்டலில் இருந்து மீண்டபோது ஷைலஜாவிடம் நண்பர்கள் கொடுத்திருந்த நான்கு லட்சத்தையும் திருப்பித்தர அவ்வளவு போராட வேண்டியிருந்தது. யாருமே திருப்பி வாங்க சம்மதிக்கவில்லை.
என் அலுவலகமே அதன் செலவை ஈடுகட்டியது. இப்போதும் அப்படி ஒன்று வந்தால் எனக்காக வந்து நிற்கப் போகும் பல நூறு பேரை எனக்குத் தெரியும். அதுபோதும்.
விமர்சனங்களை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். திருத்திக் கொள்வேன். வன்மங்களை கடக்க முயல்கிறேன்.
கதை எழுதியோ, கதைசொல்லியோ, யாரோ ஒரு மாணவனின் கல்விக்கு உதவியோ இது எதுவும் சாத்தியமில்லையெனில் என் நிலத்தில் வீழ்ந்துக் கிடப்பேன் போதும்.
இதில் விடுப்பட்ட ஒன்று இரண்டு விஷயங்கள் குறித்து விரிவாக எழுதுவேன்.
இதை மேலும் விவாதிக்கவும் தொடரவும் இப்போதைக்கு எந்த மனநிலையும் இல்லை. பின்னூட்டம் இடவேண்டிய தேவையும் இல்லை.
இது என் தரப்பிலான சமர்ப்பிப்பு அவ்வளவு மட்டுமே ஏற்றுக்கொள்வதும் முரண்படுவதும் அவரவர் இயல்பு அவரவர் வாழ்வு.
இத்துயர்பட்ட காலங்களில் நான்காயிரத்துக்கும் மேல் என் வாசகர்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் ஆறுதல்களாக செய்திகளை அனுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள்.
நாற்பதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் நேரில் வந்து என் கைப்பற்றி தங்கள் ஆறுதல்களை இரத்த நாளங்களின் வழியே எனக்கு கடத்தியிருக்கிறார்கள்.
என் முகநூல் பின்தொடர்பவர்கள் நாலாயிரம் பேர் கூடியிருக்கிறார்கள் என நண்பர்கள் சொன்னார்கள்.
இவர்களுக்கெல்லாம் என்னிடம் திருப்பித்தர எதுவுமே இல்லை. விரைவில் ஒரு பெருங்கதையாடலில் சந்திப்போம். நன்றி நண்பர்களே உங்கள் செதுக்கல்களுக்கு.