இஸ்ரேல் நாட்டுக்கும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே இரண்டாவது வாரமாக நீடிக்கும் யுத்தம், மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுக்குமா? என்பது தெரியவில்லை.
ஆனால், நீண்ட நெடிய இந்த யுத்தத்துக்கான விதை, முதலாம் உலகப்போரின் போது விதைக்கப்பட்டு, இன்று விருட்ஷமாக வளர்ந்திருப்பது எத்தனை பேருக்கு தெரியும் என தெரியவில்லை.
யூதர்கள் என அழைக்கப்படும் இனத்தவருக்கு ஆரம்பத்தில் தனி நாடு ஏதும் கிடையாது. ஐரோப்பாவின் பல பகுதிகளில் சிதறுண்டு வாழ்ந்து கொண்டிருந்தனர்.
‘தங்களுக்கென தனிநாடு வேண்டும்’ என்பது அவர்களின் தணியாத ஆசை.
இங்கிலாந்தில் வசித்த யூதர்கள் மிகவும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தனர்.
1915 ஆம் ஆண்டு முதலாம் உலகப் போரின் போது, இங்கிலாந்து நாட்டுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
அப்போது யூத சமூக செல்வந்தர்கள், பெருமளவிலான பொருளாதார உதவிகளை இங்கிலாந்துக்கு அளித்தனர்.
அதற்கு பிரதி உபகாரமாக யூத இனத்திற்கு பாலஸ்தீனில் தனியாக ஒரு நாட்டை உருவாக்கித் தருவதாக வாக்குறுதி கொடுத்தது, இங்கிலாந்து.
அந்த நேரத்தில் பாலஸ்தீனம், இந்தியா போன்று ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்தது.
1948 ஆம் ஆண்டு பாலஸ்தீனில் இருந்து வெளியேற முடிவு செய்த இங்கிலாந்து, அந்த நாட்டை இரண்டாக கூறு போட்டு ஒரு பகுதியை யூதர்களுக்கு அளித்தது.
அதுவே இஸ்ரேல்.
இன்னொரு பகுதி பாலஸ்தீனத்து அரேபியர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
தங்கள் நிலத்தில் இஸ்ரேல் என்ற நாடு உருவானதால் பாலஸ்தீன முஸ்லிம்கள் கொதித்தனர். அப்போது ஆரம்பித்த சண்டைதான் இன்று வரை தொடர்கிறது.
அப்போது அந்த பகுதியில், யூதர்கள் மக்கள் தொகை ஐந்தரை லட்சம் மட்டுமே. ஆனால் முஸ்லிம்கள் 11 லட்சத்துக்கும் மேல் இருந்தார்கள்.
அதன் பின் பல்வேறு நாடுகளில் இருந்த யூதர்கள் இஸ்ரேலில் குடி புகுந்தனர். அதனால் இஸ்ரேல் மக்கள் தொகை 98 லட்சமாக இன்று உயர்ந்துள்ளது.
அப்போது இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீன விடுதலை அமைப்பு (பி.எல்.ஓ) எனும் பெயரில் இயக்கம் ஆரம்பித்தார் யாசர் அராஃபத்.
தனது போராட்டத்தை மதச்சார்பற்ற போராட்டமாக அவர் முன்னெடுத்து சென்றார்.
அதனை விரும்பாத சிலர் ‘இது முஸ்லிம்கள் விவகாரம்’ என சொல்லி 1980 களில் ஹமாஸ் இயக்கத்தை ஆரம்பித்தனர்.
அராஃபத்துக்கு சவாலாக அந்த இயக்கம் இருக்கும் என அப்போது இஸ்ரேல் கருதியது.
இஸ்ரேல் அதிகாரிகள், அந்த இயக்கத்தை தமது நாட்டில் பதிவு செய்து நிதியுவியும் செய்துள்ளனர்.
அந்த ஹமாஸ் இயக்கம் தான் இன்று, இஸ்ரேலுக்கு எதிராக, அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது.
23 லட்சம் பேர் வசிக்கும் காசா பகுதி இன்றைக்கு முற்றிலுமாக ஹமாஸ் கைகளில் உள்ளது. அங்கிருந்து தான் அவர்கள் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் தொடுத்து வருகிறார்கள்.
கடந்த 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல், உக்கிரமானது.
இஸ்ரேலின் தெற்கு பகுதியில் தரை, வான், கடல் மார்க்கமாக நுழைந்த ஹமாஸ் தீவிரவாதிகள் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை வீசினர். இதில் 1,300 இஸ்ரேலியர்கள் பலியானார்கள்.
இதற்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது போர் தொடுத்துள்ளது. இதில் பாலஸ்தீனர்கள் 2,400 பேர் உயிரிழந்துள்ளனர்.
போரை தீவிரப்படுத்தி ஹமாஸ் பயங்கரவாதிகளை முழுவதுமாய் ஒழிப்போம் என சபதமிட்டுள்ள இஸ்ரேல், முதல் கட்டமாக காசாவின் வடக்குப் பகுதியில் தரை வழி தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
அங்குள்ள மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் ராணுவம் எச்சரித்ததால் லட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்து வருகிறார்கள்.
வடக்கு காசாவில் இருந்து 5 லட்சம் பேர் தெற்கு காசாவுக்கு சென்றுவிட்டனர்.
இன்னும் 6 லட்சம் பேர் வடக்கு காசாவிலேயே உயிரை கையில் பிடித்துக்கொண்டு உள்ளனர்.
காசா வடக்கு பகுதியில் இஸ்ரேலின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்த தயாராகி விட்டன. இதற்காக 10 ஆயிரம் வீரர்கள் ஏற்கனவே காசா எல்லை பகுதிக்குள் நுழைந்து விட்டனர்.
இஸ்ரேலுக்கு சிக்கல்
இஸ்ரேலை சேர்ந்த நூற்றுக்கணக்கானோரை ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். அவர்களை மனித கேடயங்களாக, ஹமாஸ் தீவிரவாதிகள் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன.
தங்கள் பதுங்கு குழிகளில் பிணைக்கைதிகளை தீவிரவாதிகள் மறைத்து வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனால் தரை வழி தாக்குதலை இஸ்ரேல் தாமதப்படுத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
காசாவில் பனி மூட்டம் இருப்பதால் விமானங்களை இயக்குவதிலும், குறிப்பிட்ட இலக்குகளைத் தாக்கி அழிப்பதிலும் ராணுவத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அசுத்த நீரை பருகும் மக்கள்
காசாவுக்கு வழங்கி வந்த குடிநீர், மின்சாரம், எரிபொருள் உள்ளிட்டவற்றையும், இஸ்ரேல் நிறுத்தி உள்ளது. இதனால், காசாவில் வசிக்கும் மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்,
மின்சார விநியோகம் இல்லாததால் இரவு நேரம் வெளிச்சமின்றி இருட்டாக உள்ளது. அத்தியாவசிய மின்சார தேவைக்கான எரிபொருள் இல்லாததால் மின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
காசாவுக்கு விநியோகித்து வந்த குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். வேறு வழியின்றி அசுத்தமான நீரை குடிக்க வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அசுத்தமான நீரை குடிப்பதால், நீரினால் பரவும் நோய்களின் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் ஆபத்து
காசா மருத்துவமனைகளில் மருந்துகள் குறைவாகவே உள்ளன. எரிபொருள் இல்லாததால் ஜெனரேட்டர்கள் இரண்டு நாட்கள் மட்டுமே செயல்படும் சூழல் உள்ளது.
எனவே குழந்தைகள் உள்பட ஆயிரகணக்கானோர் உயிர் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக காசா சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது.
தமிழர்கள் வருகை
இஸ்ரேல் நாட்டில் சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். இவர்களில் 900 பேர் பல்வேறு பல்கலைகழகங்களில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களை மீட்க ‘ஆபரேஷன் அஜய்’ எனும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் வாயிலாக சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள், தாய்நாட்டுக்கு அழைத்து வரப்பட வண்ணம் உள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த 128 பேர் இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்து பதிவு செய்திருந்தனர்.
அவர்களில் 110 பேர் சிறப்பு விமானம் மூலம் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர்.
என்ன நடக்கும் ?
பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் பாலஸ்தீனம் பக்கம் நிற்கும் நிலையில், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளன.
பல்வேறு தளங்களில் சமரச பேச்சுக்களும் நடைபெறுவதால், போரின் அடுத்த கட்டத்தை கணிக்க முடியவில்லை.
– பி.எம்.எம்.