– முத்துராமன் பற்றி நெகிழ்ந்த நடிகர் ராஜேஷ்
நான் 10-ம் வகுப்பை, என்னுடைய அத்தை ஊரான காரைக்குடிக்கு அருகில் உள்ள கண்டனூரில் படித்தேன். அந்த ஊரில் தங்கி படித்து வந்த நேரத்தில், முத்துராமனை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
1965-ம் ஆண்டு, கால்பந்து போட்டி ஒன்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கொடுப்பதற்காக நடிகர் பாலாஜியும், முத்துராமனும் வந்திருந்தனர்.
அப்பொழுதுதெல்லாம் நடிகர் – நடிகைகளைப் பார்ப்பது என்பதே அரிது. அதுவும் அருகில் இருந்து பார்ப்பது அபூர்வம்.
அதன்பிறகு முத்துராமனை, 1969-ம் ஆண்டு ராஜாஜி ஹாலுக்கு முன்பாக நடந்த, ‘சிவந்த மண்’ ஷூட்டிங்கில் பார்த்தேன். நான் நடிகனான பிறகும் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
‘நீங்கள் நன்றாக நடிக்கின்றீர்கள். தொடர்ந்து சினிமாத் தொழிலில் நீங்கள் நீடித்து இருப்பீர்கள். உங்களுக்கென்று ஐந்தாறு படத் தயாரிப்பு நிறுவனங்களுடன் நல்ல தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள்’ என்று அறிவுரையோடு ஆசியும் வழங்கினார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் வேலைபார்த்தவர் முத்துசாமி என்பவர், அவர் சாண்டோ சின்னப்பா தேவருடன் நெருங்கிய பழக்கம் வைத்திருந்தார்.
அவர் சாண்டோ சின்னப்பா தேவர் நினைவாக வருடாவருடம் விருது ஒன்றைக் கொடுத்து வந்தார். 1979-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வாக்கில் அந்த விருது வழங்கும் விழா, கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
அந்த வருடம் ‘கன்னிப் பருவத்திலே’ படத்தில் நடித்ததற்காக எனக்கும் விருது கொடுத்தார்கள்.
அந்த விழாவிற்கு முத்துராமனும் வந்திருந்தார். அன்று அவரோடு நீண்ட நேரம் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
‘பால் நியூமென்’ என்ற ஹாலிவுட் நடிகரைப் பார்க்கும் பொழுதெல்லாம், எனக்கு முத்துராமன் நினைவுக்கு வருவார்.
பால் நியூமென் நடிப்பும், வசன உச்சரிப்பும் முத்துராமனைப் பார்ப்பது போலவே இருக்கும்.
அந்த ஹாலிவுட் நடிகரும் கூட, முத்துராமனைப் போலவே ஒரே மனைவியுடன் கடைசிவரை வாழ்ந்தவர். இந்த மாதிரி நான் ஒப்பிட்டுப் பார்த்ததை, முத்துராமனிடம் சொன்னேன்.
அவர் ‘அப்படியா?’ என்று ஆச்சரியத்துடன் கேட்டு விட்டு சிரித்தார்.
1980-ம் ஆண்டு வெளியான ‘உச்சக்கட்டம்’ என்ற திரைப்படம் 100 நாட்கள் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது.
செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள ஒரு பள்ளி ஆண்டு விழாவுக்கு அந்தப் படத்தின் இயக்குனர் ராஜ்பரத், நடிகர் முத்துராமன், நடிகை பிரவீணா, நடிகர் ஏ.ஆர்.எஸ். ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
எனக்கும் அழைப்பு வந்திருந்தது. விழாவை நடத்தியவர்களே கார் வைத்து அனைவரையும் அழைத்துச் சென்றனர். ஒரு சிலர் மட்டுமே சொந்தக் காரில் வந்திருந்தனர்.
விழா முடிந்ததும் முத்துராமன் காரில் நானும், ஏ.ஆர்.எஸ். இருவரும் ஏறி வந்தோம். அப்போது முத்துராமன், ஏ.ஆர்.எஸ். இருவரும் பழைய ஆங்கிலப் படங்களைப் பற்றி பேசிக்கொண்டே வந்தனர்.
அன்று தான், முத்துராமனின் ஆங்கிலப் படங்கள் மற்றும் ஹாலிவுட் நடிகர்களைப் பற்றிய அனுபவ அறிவை நான் முழுமையாக தெரிந்து கொண்டேன்.
சென்னை வந்ததும் ஏ.ஆர்.எஸ். வீட்டில் அவரை இறக்கிவிட்டு விட்டு, போயஸ் கார்டனில் உள்ள முத்துராமன் வீட்டிற்கு வந்தோம்.
என்னை வீட்டிற்குள் அழைத்த முத்துராமன், மலை வாழைப் பழமும், சூடான பாலும் கொடுத்தார்.
20 நிமிடங்கள் அவரோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முத்துராமனின் நடனம், நடிப்பு அருமையாக இருந்ததைப் பற்றிக் குறிப்பிட்டேன்.
நான் சொன்னதை எல்லாம் அவரது வழக்கமான சிரிப்போடு ஏற்றுக் கொண்டார்.
1979-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 1981 அக்டோபர் மாதம் 16-ம் தேதி, அதாவது முத்துராமன் மறையும் வரை 5 முறை அவரை சந்தித்துப் பேசியிருக்கிறேன்.
ஒருமுறை ‘போக்கிரி ராஜா’ படப்பிடிப்பு ஏவி.எம். ஸ்டூடியோவில் நடைபெற்றது. அந்தப் படப்பிடிப்பில் இருக்கும் ரஜினியைப் பார்க்க இயக்குனர் மகேந்திரன் சென்றார்.
அவருடன் நானும் ஏவி.எம். ஸ்டூடியோவிற்கு சென்றிருந்தேன். அங்கும் முத்துராமனைப் பார்த்து பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதிகம் பேசவில்லை, வழக்கம் போல் அவர் சிரிக்கும் சிரிப்பைத்தான் உதிர்த்தார்.
1981-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந் தேதி, ஊட்டியில் முத்துராமன் மாரடைப்பால் மரணமடைந்த செய்தி அறிந்து அதிகம் வேதனைப்பட்டேன். அன்று தமிழக முதலமைச்சராக இருந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான்.
அண்ணன் சிவகுமார், எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்த ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரின் பெரும் முயற்சியால், முதலமைச்சரின் துணை கொண்டு முத்துராமனின் உடல் எந்தவித இடையூறும் இன்றி சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு நான் சென்றிருந்தேன். சிவாஜி அண்ணன் முதல் எல்லா நடிகர், நடிகைகளும் வந்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
அன்று சிவாஜி அண்ணன் பக்கத்தில் இருந்தவர்களிடம் ஒன்றைச் சொன்னார்.
‘டேய்! முத்துராமன் சீக்கிரம் போய்ட்டான்டா.. நல்லா இன்னும் அதிக காலம் வாழவேண்டியவன் தான், என்ன பண்றது போயிட்டான். ஆனால் நல்ல மரணம். பொசுக்குன்னு போயிட்டான்.
அவன் அதிர்ஷ்டக்காரன்டா. அப்படி இல்லாமல் வயதாகி, மலம், ஜலம் எல்லாம் படுக்கையில் கழித்து, அதுவும் நான்கு நாட்கள் தொடர்ந்து கொண்டிருந்தால், தாலிகட்டிய பொண்டாட்டியே முகம் சுழித்து விடுவாள்’ என்றார்.
அவர் அன்று கூறியது, வயதின் காரணமாக அப்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஆனால் அதற்குப் பிறகு, பல பேர்களின் மரணத்தையும், கடைசி காலங்களில் பலர் பட்ட கஷ்டங்களையும், அவர்களுடைய வீட்டில் உள்ளவர்கள் அவர்களிடம் நடந்து கொண்ட முறையையும் நான் நேரடியாகக் கண்ட பிறகு, சிவாஜி அண்ணன் சொன்னது எனக்குப் பொன்மொழியாகத் தெரிந்தது.
அவருடைய அனுபவத்தில் அன்று அவர் சாதாரணமாக அந்த விஷயத்தைக் கூறிவிட்டார். அதெல்லாம் அனுபவத்தால் விளைந்த விளைச்சல், சாதாரணமாக அந்த ஞானம் எல்லோருக்கும் எளிதில் வந்துவிடாது.
‘அந்த 7 நாட்கள்’ படம் 1981-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ந் தேதி வெளியானது. நவம்பர் மாதம் 16-ந் தேதி முத்துராமனின் படத்தைத் திறந்து வைக்க என்ன அழைத்திருந்தனர். திருநெல்வேலியில் உள்ள ஒரு தியேட்டரில் திறக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.
திருநெல்வேலி ரெயில்வே ஸ்டேஷனில் எங்களை அழைத்துச் செல்ல கட்டுக்கடங்காத கூட்டம் வந்திருந்தது.
ரயில் படிக்கட்டுகளில் இருந்து இறங்கிய எனது கால்கள் தரையில் படவே இல்லை; நேராக லாரியில் ஏற்றி ஒரு பெரிய அரசியல்வாதியைப் போல், பல்வேறு கோஷங்களைப் போட்டுக் கொண்டே என்னை அழைத்துச் சென்றார்கள். ஒரு பெரிய ஓட்டலில் தங்க வைக்கப்பட்டேன்.
அங்குதான் திருநெல்வேலியில் உள்ள பெரும் புள்ளிகள் பலரைச் சந்தித்தேன்.
முத்துராமன் கடைசி வரை எந்தக் கெட்ட பெயரும் வாங்காமல் வாழ்ந்து வந்தார். நடிகைகளிடம் ‘ஜென்டில்மேன்’ என்று பெயரெடுத்தார். அவர் இறந்தது 16.10.1981. இறக்கும்பொழுது வயது 53.
சிவாஜிகணேசனை விட 4 மாதங்கள் இளையவர். ஒரு முறை பத்திரிகையாளர்கள் எம்.ஜி.ஆரிடம், ‘உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?’ என்று கேட்டனர். அதற்கு அவர், ‘முத்துராமன்’ என்று பதிலளித்திருக்கிறார்.
மன்னார்குடி சாலையில் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு தான், முத்துராமனின் சொந்த ஊர் ஆகும். அங்குள்ள பள்ளியில்தான் 5-ம் வகுப்பு வரை படித்திருக்கிறார்.
அப்போது அவரோடு படித்த மாணிக்கம் என்பவர் இன்னும் அந்த ஊரில் இருக்கிறார். அவருக்கு இப்போது 89 வயது ஆகிறது. இவர் முத்துராமனை விடவும் 1 வயது மூத்தவர்.
முத்துராமனுக்கு பூர்வீகத்தில் 6 ஏக்கர் நஞ்சை நிலமும், ஒரு வீடும் சொந்தமாக இருந்திருக்கிறது. அவரை நாம் எப்பொழுது நினைத்தாலும் அவரது இளமையான தோற்றமே நமது நினைவிற்கு வரும் என்பதுதான் நடிப்புத் துறையில் அவருக்குக் கிடைத்த வெற்றி.
நானும் நடிகை சுஜாதாவும் 6 படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறோம்.
ஒரு படப்பிடிப்பில் சுஜாதா, என்னிடம் முத்துராமன் அண்ணனைப் பற்றிக் கூறும்பொழுது, ‘அவர் மிகவும் நல்ல மனிதர், ஜென்டில் மேன்’ என்று குறிப்பிட்டார்.
அதோடு, ‘ராஜேஷ்! உங்களுடன் நடிக்கும் பொழுதும், பேசும் பொழுதும், முத்துராமனோடு இருப்பது போன்ற ஓர் உணர்வு எனக்கு ஏற்படுகிறது’ என்றார்.
இதேபோல் இயக்குனர் எஸ்.பி.முத்துராமனும் ஒரு முறை, ‘ராஜேஷ்! நீங்கள் ஒரு அடுத்த முத்துராமன்’ என்றார். அவர்கள் இருவரும் என்னை முத்துராமனோடு ஒப்பிட்டது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.
– நன்றி: முகநூல் பதிவு