யோகாக் கலை என்பது பாரம்பரியமாக வாழ்வியலோடு ஒன்றிவிட்ட ஒரு கலையாகும். உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக செயல்படுகிறது.
யோகா அறிவியல் பூர்வமாக மனநிலையையும் உடல் நிலையையும் சீராக இயங்கவைப்பதாக நிருபிக்கப்பட்ட பாரம்பரிய கலையாகும்.
இது மனதையும், உடலையும் உற்சாகத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று யோகா.
பெரும் நோய்த்தொற்று காலங்களில் யோகாக் கலைகளில் ஒன்றான மூச்சுப் பயிற்சி சுவாசப் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைந்தது.
நுரையீரலை சுத்தப்படுத்தவும், நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்பத்தவும், செரிமானம் மற்றும் நரம்பியல் அமைப்புகள் உட்பட ஒவ்வொரு அமைப்புக்கும் சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது.
பலவிதமான நன்மைகளை உடலுக்கு ஏற்படுத்தும் யோகா, பற்களின் பிரச்சனைக்கும் தீர்வாக அமைகிறது.
இந்த யோகாவில் சில முத்திரைகள் பல் கூச்சம், வீக்கம், இரத்தக் கசிவு, பற்சிதைவு, பற்களை வலுவாக்குதல் ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கிறது.
பல் பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும் 5 யோகாசனங்களின் முத்திரைகளைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவாக யோகாசனங்கள் காலை வேளையில் உடலை வளைத்து, நெளித்து பயிற்சி செய்யப்படும். ஆனால், பற்களுக்கான இந்த யோகாசனம் குறைவான உடல் அசைவில், விரல் வித்தை காட்டி, விரலை மடக்கி நீட்டி செய்யப்படுகிறது.
இதை யோக முத்திரை எனக் குறிப்பிடுகின்றனர்.
எந்தக் கட்டுப்பாடும் இன்றி மூன்று வேளை கூட இந்த முத்திரைகளைப் பயிற்சி செய்யலாம்.
1] பிருத்வி முத்திரை
2] சூரிய முத்திரை
3] ஆகாய முத்திரை
4] சதாந்தா முத்திரை
5] அர்த்த சிரசாசனம்
முதலில் பிருத்வி முத்திரையைப் பற்றி பார்க்கலாம்:
தரையில் அமர்ந்து முதுகை நேராக நிமிர்த்தி உட்கார வேண்டும்.
பிறகு கண்களை மூடி மூச்சை இயல்பான நிலையில் இழுத்து வெளியே விட வேண்டும்.
மெதுவாக கண்களை திறந்து கைகள் இரண்டையும் முட்டியின் மேல் வைத்துக் கொண்டு பெரு விரல் மற்றும் மோதிர விரல் நுனி இரண்டையும் சேர்த்து மூச்சை இயல்பு நிலையில் வைத்துக் கொண்டு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மூச்சை உள் இழுத்து பின் வெளியிடவும்.
இவ்வாறு 2 முதல் 5 நிமிடம் வரை காலை, மாலை என இரண்டு வேளை பயிற்சி கொடுக்க வேண்டும்.
இந்தப் பயிற்சி உள் உறுப்புகளை சுத்தம் செய்கிறது. இதனால் பல் கூச்சம் குறைகிறது.
2] சூரிய முத்திரை
இயல்பான நிலையில் தரையில் அமர்ந்து கொண்டு பெருவிரலால் மோதிர விரலை மடக்கிப் பிடித்துக் கொண்டு 2 முதல் 5 நிமிடம் இயல்பான நிலையில் மூச்சை வைத்துக் கொண்டு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தினமும் காலை, மாலை என இரண்டு வேளை தவறாமல் பயிற்சி செய்து வந்தால் பற்களின் இரத்தக் கசிவு கட்டுப்படும். மேலும் வீக்கம், கூச்ச உணர்வு போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும்.
3] ஆகாய முத்திரை
ஆகாய முத்திரை செய்யும்போது தரையில் அமர்ந்து கொண்டு இரண்டு கைகளையும் முட்டியின் மேல் வைத்துக் கொள்ளவும். பெருவிரல் கொண்டு நடுவிரல் நுனியில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அடுத்து மூச்சை மெதுவாக உள் இழுத்து பிறகு மெதுவாக வெளியே விட வேண்டும். 5 முறை இவ்வாறு மூச்சை இழுத்து வெளியே விடவும். பிறகு இயல்பான நிலைக்கு கொண்டு வரவும்.
நாள் ஒன்றுக்கு இரண்டு வேளை தவறாமல் பயிற்சி செய்தால் பற்களின் பாதுகாப்புக்கு துணையாக இருக்கும்.
4] சதாந்தா முத்திரை
சின் முத்திரையில் கைகளை வைத்துக் கொண்டு மேல் பற்கள் கீழ் பற்கள் இரண்டையும் சேர்த்து கொஞ்சம் அழுத்தம் கொடுத்து பற்களைத் கடித்த நிலையில் வைக்கவும்.
பிறகு பற்களின் இடைவெளியில் மூச்சை நன்றாக உள்ளே இழுத்து, பிறகு வாயை மூடிக்கொண்டு மூக்கின் வழியாக மெதுவாக வெளியே விடவும்.
இதை 10 முதல் 15 முறை இவ்வாறு மூச்சை உள் இழுத்து வெளிவிடவும். பல் கூச்சம், வலி, வீக்கம், ரத்த கசிவு இருப்பவர்கள் காலை, மாலை என இரண்டு வேளையும் இந்தப் பயிற்சியை செய்தால் பற்களின் வேர்ப் பகுதி வலுவடையும்.
5] அர்த்த சிரசாசனம்
முட்டிக்கால் போட்டு அமர்ந்து கொண்டு கைகளை முன் நீட்டி, அதாவது உள்ளங்கை மேல் நோக்கி இருக்க வேண்டும்.
தலையை இரண்டு கைகளுக்கு நடுவில் கொண்டு வரவும்.
இரண்டு கைகளால் தலையை பிடித்து கொள்ளவும். பிறகு மெதுவாக முதுகை உயர்ந்தவும்.
கால்கள் இரண்டும் விரல்கள் மட்டுமே தரையில் இருக்குமாறு, குதிகால் தரையில் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
அப்படியே குனிந்த நிலையில் மூன்று நிமிடம் நிற்க வேண்டும். பிறகு உடலை இயல்பு நிலைக்குக் கொண்டு வரவும்.
இந்த ஆசனம் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. மேலும் முகத்திற்கு ரத்தம் சீராகப் பரப்பப்படுவதால் முகத்தின் அழகையும் பற்களின் வலிமையையும் கூட்டுகிறது.
முயற்சித்துப் பாருங்கள் முகமும் புன்னகையும் பொலிவடைவதை உணர்வீர்கள்.
– யாழினி சோமு