எம்.ஜி.ஆர்: கலைத் துறையின் ஒளிமிகுந்த சுடர்!

கலைஞர் கருணாநிதி புகழாரம்

அண்மையில் விகடன் வெளியிட்ட ‘கலைஞர் – 100: விகடனும் கலைஞரும்’ நூல் சமகாலத்தின் வரலாற்று ஆவணம். திருக்குவளை பிறப்பு துவங்கி, மெரினா வரை அந்தந்த காலகட்டம் சார்ந்த அரிய புகைப்படங்களுடன் கூடிய தொகுப்பு. வாசிப்பின் ருசி உள்ளவர்களுக்கு அருமையான தீணி. அந்தத் தொகுப்பில் இருந்து சிறுதுளி.

‘மடியில் விழுந்தது ஒரு கனி’ என்ற தலைப்பில் எம்.ஜி.ஆரைப் பற்றி, கலைஞர் 14.05.1972-ல் எழுதிய கட்டுரை.

******

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் இந்த ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நடிகர் விருதினைப் பெறுவதற்கு, மத்திய அரசின் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற இனிக்கும் செய்தி பற்றி என் கருத்துகளைக் கேட்கிறது விகடன்.

நான்கு திசைகளிலிருந்தும் எரிச்சல் கணைகள் எம்மீது ஏவப்படும் சூழ்நிலைகளை எல்லாம் மீறிக்கொண்டு எம்மனோர் திறமைகள் புகழப்படும் தித்திக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கின்றன.

எனதருமை உடன்பிறப்பனையார் எம்.ஜி.ஆர் அவர்கள் இந்தப் பெருமைக்கு முற்றிலும் தகுதியானவர். தமிழகக் கலைத் துறையின் ஒளிமிகுந்த கதிராக விளங்கிவருகிறார்.

அவரது உருவம், பிஞ்சுக் குழந்தைகள் முதல் பிராயம் முற்றிய பழுப்புகள் வரையில் அவர்தம் இதயத்தில் நிறைந்த உருவமாகும்.

அவர் நடிப்பில் தென்றலின் சுகத்தையும், அவர் ஈடுபடும் சண்டைக் காட்சிகளில் மின்வெட்டுகளின் உயிர்ப்பையும் உணரலாம்.

திரையுலகில், நாடக உலகில் அவர் ஏற்படுத்திய புதிய திருப்பத்தின் காரணமாக திருச்சியில் நடைபெற்ற ஒரு விழாவில் ‘புரட்சி நடிகர்’ எனும் பட்டத்தை நான் அவருக்கு வழங்கினேன்.

அதற்கு முன்பே அவரும் நானும் கோவை ராமநாதபுரத்தில் ஒரு சிறிய வீட்டில் சில நாள்கள் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருந்தோம்.

ஜூபிடர் பிக்சர்ஸார் தயாரித்து, அவர் முதன்முதலாக திரு ஏ.ஏ.சாமி டைரக்ஷனில் கதாநாயகனாகத் தோன்றிய ‘ராஜகுமாரி’ படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அன்று எங்களிடையே முகிழ்த்த மகிழ்ச்சியின் விரிவான பெருமிதமாக சிறப்பிக்கப்பட்டிருப்பது கண்டு வாழ்த்துகளைக் குவிக்கிறேன்.

புரட்சி நடிகராக, பொன்மனச் செம்மலாக, மக்கள் திலகமாக, எங்கள் பொருளாளராக, அண்ணாவின் தம்பியாக, என் சகோதரராகத் திகழும் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற இந்தச் சிறப்பு, தாயகத்து மக்கள் அனைவருக்கும் பூரிப்பு தரும் நற்செய்தியாகும்.

கலை ஆர்வம்,

கழக ஆர்வம் ,

மக்கள் நலனில்

குன்றாத ஆர்வம்கொண்ட அவரைப் பாராட்டிச் சிறப்பித்துள்ள தேர்வுக் குழுவினரை நான் பாராட்டுகிறேன்.

“என் மடியில் விழுந்தது ஒரு கனி, அதனை எடுத்து இதயத்தில் வைத்துக்கொண்டேன் என்று” பேரறிஞர் அண்ணா   குறிப்பிட்டதை இப்போது எண்ணி மகிழ்கிறேன்.

இதுபோல் இன்னும் பல சிறப்புகளுக்கும் பொருத்தமான நடிகர், பல்லாண்டு வாழ்ந்திடுக என வாழ்த்துகிறேன்.

அன்பு,

மு.கருணாநிதி.

(ஆனந்த விகடன், 14.05.1972)

நன்றி: ஆனந்த விகடன்

You might also like