பெண்ணின் வலியை அவளது பார்வையில் சொல்லும் இந்திர நீலம்!

இந்திர நீலம் என்னும் இந்த சிறுகதைத் தொகுப்பில், மொத்தம் 8 சிறுகதைகள் உள்ளன. கவிஞர் அ. வெண்ணிலாவின் இந்தத் தொகுப்பு பெண்களின் உடல் சார்ந்த தேவைகளைப் பற்றிய நூல்களில் ஒன்று.

‘கழிவறை இருக்கை’ போல கட்டுரைகளாக அல்லாமல் நாம் பரவலாக கேள்விப்பட்ட புராண இலக்கியங்களில் இருந்தே இந்த கதைகள் வேறு ஒரு கோணத்தில் பார்க்கப்பட்டுள்ளன.

முதல் கதையான ‘இந்திர நீலம்’ மட்டும் ஒரு சமகாலக் கதை. தன் உடலில் ஏற்படும் மாறுதல்களை கவனிக்கும் ஒரு மத்திய வயது பெண்ணின் காமம் சார்ந்த நிறைவேறாத ஆசைகள் குறித்து அவள் கொள்ளும் துன்பம் குறித்த கதை.

இந்த தொகுப்பின் தலைப்புக்கு இந்த கதையின் தலைப்பு மிகப் பொருத்தமான தேர்வு.

அடுத்த கதையான ‘தர்மத்தின் ஆகுதி’ நாம் நிறைய கேட்டறிந்த திரௌபதியின் கதையை, திரௌபதியின் பார்வையில் இருந்து சொல்லி இருக்கிறார்.

ஐந்து கணவர்கள் கொண்ட ஒரு பெண்ணின் உணர்வு சார்ந்தும், உடல் சார்ந்தும் அவளின் தேவைகளை, துன்பங்களை ஒரு பெண்ணின் பார்வையில் மிகச் சிறப்பாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

பஞ்சபாண்டவர்கள் ஒவ்வொருவருடன் அவளுக்கு இருக்கும் உறவின் ஆழம் கதையில் அழகாக உள்ளது.

அடுத்த ‘சிலம்பின் ரகசியம்’ என்ற கதையில், புகார் நகரத்தை விடுத்து மதுரைக்கு செல்லும் கோவலனும் கண்ணகியும் வழியில் ஒரு இடத்தில் இளைப்பாற அமரும் நேரத்தில், கண்ணகியின் பார்வையில் விரிகிறது இந்தக் கதை.

கோவலன் தன்னை மறந்து மாதவியுடன் இருந்த காலத்தில் கண்ணகி அடைந்த மன வேதனையும், உடல் வேதனையும் அவளே சொல்வது போல புனையபட்டுள்ளது இந்த கதை.

‘கண்ணனிடமிருந்து வெளியேறாத கோபியர்கள்’ என்ற கதையில், கோபியர்கள் கண்ணை எண்ணி அவர்கள் அடையும் துன்பம் குறித்து அவர்களின் பார்வையில் சொல்லப்பட்டு இருக்கிறது.

‘அட்சயப் பாத்திரத்தின் பசி’ என்ற கதையில் மணிமேகலையின் கதையையும், ‘என்புதோல் உயிர்’ கதையில் புனிதவதியின் கதையும் பெண்ணின் பார்வையில் வேறு ஒரு கோணத்தில், காமம் சார்ந்த தங்கள் தேவைகளை நிறுத்தி சொல்லபட்டுள்ளது.

‘நித்ய சுமங்கலி’ என்ற கதையில் தேவதாசியான நக்கனின் கதை மிக உணர்வுப் பூர்வமாக சொல்லப்பட்டுள்ளது.

ஆண்டவனை கணவனாக ஏற்றுக்கொண்டு கோவிலில் வாழும் ஒரு பெண், அவளின் தேவைகள் நிறைவேறாமல் போகும் பொழுது அவள் அடையும் துன்பங்கள் என கதை மிக ஆழமான உணர்வுகளுடன் உள்ளது.

‘விலக்கப்பட்ட கனி’ என்ற கதையில் ஏசு பிரான் ஒரு பெண்ணுடன் உரையாடுவது போல எழுதப்பட்டுள்ளது. இந்த கதை சற்று வித்தியாசமாக அதே நேரம் ஆழ்ந்த சிந்தனையை தூண்டும் வண்ணம் உள்ளது.

இப்படியாக இந்த தொகுப்பில் உள்ள 8 கதைகளும் பெண்ணின் பார்வையில், அவர்களின் காமம் சார்ந்த தேவைகள் குறித்து பேசப்பட்டுள்ளது.

வயற்றின் பசி போல உடலின் பசியும் ஒரு இயற்கையான ஒன்று என்பதையும், நம் இலக்கியங்கள் பெண்ணை கடவுளாக, பத்தினியாக, கற்புகாரசியாக எல்லாம் போற்றும் அதே நேரத்தில் கோவலன் மாதவியிடம் சென்றுவிட்டபோது கண்ணகியின் நிலை என்ன என்று ஏன் சொல்லவில்லை? மாதவி பரத்தியாக இருந்த போதிலும் கூட ஏன் அவள் கோவலன் ஒருவனை தவிர மற்றவருக்கு இடமாளிக்கவில்லை.

ஏன் என்றால் ஆண் ஆதிக்க சமூகத்தில், ஒரு ஆண் ஊர் மேயலாம். ஆனால் அவன் செல்லுமிடம் பரத்தையர் இல்லமாக இருந்தாலும் அங்கு இருக்கும் பரத்தை அவனுக்கு பத்தினியாக இருக்க வேண்டும்.

இந்த வேறுபாட்டை அடித்து நொறுக்கு இன்னும் இது போன்ற நூல்கள் பல வர வேண்டும்.

நூல்: இந்திர நீலம்
ஆசிரியர்: அ. வெண்ணிலா
பதிப்பு: கிண்டில்
பக்கங்கள்: 224

You might also like