கண்ணூர் ஸ்குவாட் – யூகிக்க முடியாத தேடல் வேட்டை!

கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, மலையாளத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் மம்முட்டி.

மோகன்லால் மற்றும் அவரது போட்டியாளர்களாகத் திகழ்ந்த பலர் அந்த ஓட்டத்தில் இருந்து விலகியபோதும், ஓய்வுற்றபோதும், இன்றும் இருவரது திரையாட்டம் தொடர்ந்து வருகிறது.

எழுபதைத் தாண்டிய மம்முட்டியின் முகத்தில், கோவிட் காலகட்டத்திற்குப் பிறகு சிறிய அளவில் சுருக்கங்கள் தென்படுகின்றன.

அந்த தளர்ச்சியையே தான் ஏற்கும் கதாபாத்திரங்களின் அடையாளங்களாக மாற்றிக்கொண்டு, இன்றைய தலைமுறைக்கான திரைப்படங்களில் தன்னையும் ஒரு அங்கமாக்கிக் கொண்டிருப்பது அவரது சாதனை.

அந்த வகையில், மம்முட்டி கம்பெனி சார்பில் அவர் தயாரித்து நாயகனாக நடித்துள்ள ‘கண்ணூர் ஸ்குவாட்’ ரசிகர்களிடையே தற்போது பெரும் வரவேற்பினையும் சிறப்பான விமர்சனத்தையும் பெற்றுள்ளது.

தேடல் வேட்டை!

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் எஸ்பி கிருஷ்ணலால் (விஜயராகவன்) தலைமையில் ‘கண்ணூர் ஸ்குவாட்’ எனும் காவல் படை சிறப்புப் பிரிவு செயல்படுகிறது.

இது இரண்டு குழுக்களாகப் பிரிந்து இயங்குகிறது, முதல் குழுவானது உதவி சப் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மார்ட்டின் (மம்முட்டி) தலைமையில் இயங்குகிறது.

இந்தக் குழுவில் கான்ஸ்டபிள்கள் ஜெயகுமார் (ரோனி டேவிட் ராஜ்), ஜோஸ் சகாரியா (அசீஸ் நெடுமங்காடு), முகம்மது ஷாபி (சபரீஷ் வர்மா) ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

பல்வேறு கொள்ளை, கொலை வழக்குகளில் குற்றவாளிகளைத் தேடிப் பிடித்தது, இவர்களுக்கென்று ஒரு நற்பெயரைக் கேரள காவல்துறை வட்டாரத்தில் உருவாக்குகிறது.

ஆனால், ஜெயகுமார் லஞ்சம் வாங்குவதாக வெளியான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆவதால் அக்குழுவின் செயல்பாடு தடைபடுகிறது.

காசர்கோடு மாவட்டத்தில் ஒரு அரசியல் பிரபலம் கொலை செய்யப்பட்டு, அவரது வீட்டில் கொள்ளை நிகழ்ந்த வழக்கில் துப்பு கிடைக்காமல் காவல் துறை திணறுகிறது.

அது மாநில அரசியலிலும் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதற்குச் சில நாட்களில் தீர்வு கண்டாக வேண்டுமென்ற சிக்கல் நேர்கிறது. அந்த அழுத்தத்தின் காரணமாக, மீண்டும் ஜார்ஜ் தலைமையிலான ‘கண்ணூர் ஸ்குவாட்’ உயிர் பெறுகிறது.

கொலை நிகழ்ந்த வீட்டில் குற்றவாளி ஒருவர் சிறுநீர் கழித்த தடயத்தைத் தவிர வேறெதுவும் கிடைக்காத காரணத்தால், சம்பவம் நிகழ்வதற்கு முன்பான ஒரு வார காலத்தில் அவ்வீடு அமைந்துள்ள செல்போன் டவரில் பதிவான அழைப்புகள் ஆய்வு செய்யப்படுகின்றன.

அவற்றில், இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான கால அளவைக் கொண்ட அழைப்புகள் தனியே பிரிக்கப்படுகின்றன.

அந்த அழைப்புகளில் இருந்து, தற்போது பயன்படுத்தப்படாத எண்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. அதில் இரண்டு மொபைல் எண்கள் மீது கண்ணூர் ஸ்குவாட்டின் கவனம் பதிகிறது.

அவற்றுக்கான சிம் கார்டுகளை திருட்டுத்தனமாகப் பெற்ற ரியாஸ், அவர்களது பிடியில் முதலில் மாட்டுகிறார்.

அதன் தொடர்ச்சியாக, அமீரகத்தில் அவரோடு பணியாற்றிய அமீர் மற்றும் ஜுல்பி இருவரும் இணைந்து அந்த கொள்ளையைத் திட்டமிட்டதும், அந்த பிரமுகரின் வீட்டில் கொடுமைகளை அரங்கேற்றியதும் விசாரணையில் தெரிய வருகிறது.

அவர்களைப் பிடிப்பதற்காக மும்பை, பைசலாபாத், நேபாள எல்லை என்று பல்வேறு பகுதிகளுக்கு கண்ணூர் ஸ்குவாட் தேடிச் செல்வதுதான் இப்படத்தின் மீதிக்கதை.

தேடல் வேட்டையில் ஈடுபடும் காவல் துறை தனிப்படையை மையப்படுத்தியது என்பதால் படம் முழுக்க ஆக்‌ஷன் நிறைந்து வழிகிறது.

அது, மம்முட்டி மற்றும் அவருடன் நடித்தவர்களின் ஆக்‌ஷன் அவதாரத்திற்கு வழி வகுத்திருக்கிறது.

அதேநேரத்தில், இது ஒரு உண்மைக்கதை என்பதை நினைவூட்டும்விதமாகத் திரைக்கதை ட்ரீட்மெண்டில் யதார்த்தத்திற்கு இடம் தரப்பட்டிருக்கிறது.

மம்முட்டியின் மெஸ்மரிசம்!

‘ஜெயிலர்’ படத்திற்கும் ‘கண்ணூர் ஸ்குவாட்’ படத்திற்கும் மிகச்சில ஒற்றுமைகளைக் காண முடியும்.

அவற்றிலொன்று, நாயக பாத்திரத்தைத் திரையில் காட்டிய விதம்.

முன்னதில் ரஜினிகாந்தின் பில்டப் ஷாட்களுக்கு அதீத முக்கியத்துவம் உண்டு என்றால், இதில் மம்முட்டிக்குக் கதையோடு இணைந்து ஹீரோயிசம் காட்டும் வாய்ப்பு மிகச்சன்னமான அளவில் தரப்பட்டுள்ளது.

அதனைச் சரியாகப் புரிந்துகொண்டு, ‘ஜஸ்ட் லைக் தட்’ திரையில் வந்து போயிருக்கிறார் மம்முட்டி. அந்த இருப்பு நம்மை ‘மெஸ்மரிசம்’ செய்துவிடுகிறது.

மம்முட்டிக்கு இணையான அளவுக்கு, அவருடன் நடித்த ரோனி டேவிட் ராஜ், அஜீஸ், சபரீஷுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களில் ரோனி தான் இதன் திரைக்கதை வசனத்தை வடிவமைத்துள்ளார். அவரது சகோதரர் ரோபி வர்கீஸ் ராஜ் படத்தை இயக்கியுள்ளார்.

மலையாள நடிகர் விஜயராகவன் உடன் கிஷோரும் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார். இருவருக்கும் அதிகக் காட்சிகள் இல்லையென்றாலும், அவர்கள் கைத்தட்டல்கள் வாங்கும்படியான இடங்கள் படத்திலுண்டு.

’கண்ணூர் ஸ்குவாட்’டின் பெரும்பலம் முகம்மத் ரஹீலின் ஒளிப்பதிவு. காடு, மேடு, மலைச்சரிவு, போக்குவரத்து நெரிசல் மிகுந்த மும்பை மாநகரம் என்று பல களங்களில் சுற்றிச் சுழன்றிருக்கிறது.

போலவே, ஷாஜி நெடுவில்லின் படத்தொகுப்பு அதற்கேற்ற உள்ளடக்கத்தை பிரேம்களில் நிறைத்துள்ளது.

படத்தில் ஒரு ஷாட்டை கூட தேவையில்லை என்று ஒதுக்க முடியாத அளவுக்குச் செறிவானதாக அமைந்துள்ளது பிரவீன் பிரபாகரின் படத்தொகுப்பு. முக்கியமாக, குழப்பமின்றி கதை நகர ஏதுவாக உள்ளது.

சுஷின் ஷ்யாம் தந்திருக்கும் பின்னணி இசையும் பாடல்களும் திரைக்கதையின் ஓட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, சேஸிங் காட்சிகளில் பரப்பரப்புடன் உத்வேகத்தையும் அளிக்கிறது அவரது பங்களிப்பு.

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட ரோபி வர்கீஸ் ராஜ், முதன்முறையாக இப்படத்தில் இயக்குனர் ஆகியிருக்கிறார்.

ஆதலால், கொண்டாடப்படும்விதமான விஷுவல்களை திரையில் அடுக்கியிருக்கிறார். அதுவே, இப்படத்தை ரசிகர்களை ஈர்க்கும் முதல் காரணி.

பரபரப்பூட்டும் ஆக்‌ஷன் த்ரில்லர்!

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வருவது போல, முதல் பதினைந்து நிமிடங்களில் ‘கண்ணூர் ஸ்குவாட்’டின் சாகசமொன்று திரையில் காட்டப்படுகிறது. அதுவும் கூட முழுக்க சினிமாத்தனமாக இல்லை.

படம் தொடங்கி அரை மணி நேரத்தில் சூடு பிடிக்கும் திரைக்கதை, இடையிடையே வரும் சின்னச் சின்ன உணர்வுப் பிரவாகங்களைத் தாண்டி இறுதி வரை அந்த வெப்பத்தைத் தக்கவைத்திருப்பது அருமை.

முக்கியமாக, இதில் வரும் திருப்பங்கள் ரசிகர்கள் யூகிக்க முடியாத அளவில் உள்ளன. ஆதலால், ஆக்‌ஷன் த்ரில்லரை விரும்புபவர்களுக்கு இப்படம் நிச்சயம் திருப்தி தரும்.

என்னதான் காவல்துறையைப் பெருமைப்படுத்தும் படமாக இருந்தபோதும், இதில் அது குறித்த எதிர்மறை விமர்சனங்களுக்கும் உள்ளன.

‘காவல்துறையில் 80 சதவிகிதம் பேர் கடிகாரத்தைப் பார்த்து வேலை செய்பவர்கள்தான்; மீதமுள்ள 20 சதவிகிதம் பேர் கால நேரம் பார்க்காமல் தங்கள் வேலையோடு ஒன்றியிருப்பவர்கள்.

அவர்களைப் போன்றவர்களால் தான், இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது’ என்று படத்தின் இறுதியில் கிஷோர் பேசுவதாக இடம்பெற்ற வசனமும் அவற்றிலொன்று.

இது போன்ற விமர்சனங்களைத் தாண்டி, ‘இது ஒரு உண்மைக்கதை’ எனும் அம்சமே நம்மைப் பிரமிக்க வைக்கிறது.

அதனாலேயே, ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக அமையும் வகையில் திரைக்கதையில் சேர்க்கப்பட்ட லாஜிக் மீறல்கள் நமக்கு ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை..!

– உதய் பாடகலிங்கம்

You might also like