மக்கள் திலகத்தின் நினைவுகளைப் பகிர்ந்த முக்தா பிலிம்ஸ்
மக்கள் திலகத்தின் ‘நல்ல நேரம்’ படம் 10.03.1972 – ல் வெளிவந்தது. முதல் நாள் முதல் காட்சியிலேயே படத்தின் மாபெரும் வெற்றிச் செய்திகள் தமிழகமெங்கும் திரையிட்ட அரங்கில் இருந்தும் ரசிகர்கள் தெரிவித்தவண்ணம் இருந்தனர்.
அப்போது மக்கள் திலகத்தின் ‘சங்கே முழங்கு’ படம் 5-வது வாரம் தமிழகமெங்கும் ஓடிக்கொண்டிருந்தது. நல்ல நேரம் திரையிட்ட தினமே 13.4.1972 முதல் ‘ராமன் தேடிய சீதை’ விளம்பரம் வந்து விட்டது.
சங்கே முழங்கு – நல்ல நேரம் – ராமன் தேடிய சீதை மூன்று மக்கள் திலகத்தின் வண்ணப்படங்கள் ஒரே நேரத்தில் [பிப் – ஏப்ரல்] ரசிகர்களுக்கு விருந்தாக வந்தது.
நல்ல நேரம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. ராமன் தேடிய சீதை மதுரையில் 12 வாரங்கள் ஓடியது. சங்கே முழங்கு சென்னை கிருஷ்ணாவில் 67 நாட்கள் ஓடியது.
திரை உலகம் – திரைச்செய்தி – காந்தம் போன்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்ற பத்திரிகைகளில் மக்கள் திலகம் நடித்து கொண்டிருக்கும் படங்கள் பற்றியும், புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்கள் பற்றியும், மக்கள் திலகத்தின் படங்கள் ஓடும் தகவல்களையும் விரிவாக எழுதி வந்தார்கள்.
பொம்மை – பேசும் படம் – பிலிமாலயா மற்றும் முரசொலி – தினத்தந்தி – தென்னகம் – தினமணி – சுதேசமித்திரன் – நவமணி போன்ற தினசரி ஏடுகளிலும் மக்கள் திலகத்தின் திரை உலகச் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
அப்போது ஆனந்த விகடனில் நான் ஏன் பிறந்தேன் என்ற தலைப்பில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தொடர் கட்டுரை எழுதி வந்தார்.
அந்த சமயத்தில் தான் மக்கள் திலகத்தின் நான் ஏன் பிறந்தேன் – அன்னமிட்ட கை – இதய வீணை – உலகம் சுற்றும் வாலிபன் – பட்டிக்காட்டு பொன்னையா – நேற்று இன்று நாளை – நினைத்ததை முடிப்பவன் போன்ற படங்களில் மக்கள் திலகம் நடித்துக் கொண்டிருந்தார்.
- நன்றி: முக்தா பிலிம்ஸ் முகநூல் பக்கம்