‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இதன் ஷுட்டிங் முடிந்து விட்டது.
இதனை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. லால் சலாமை தயாரிக்கும் லைகா நிறுவனமே ரஜினியின் 170-வது படத்தையும் தயாரிக்க உள்ளது.
‘தலைவர்- 170’ என இந்த படத்துக்கு தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ‘ஜெய்பீம்’ புகழ் ஞானவேல் இயக்குகிறார்.
இந்தப் படத்தில் ரஜினியுடன், 32 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கிறார். அவர் நேரடியாக நடிக்கும் முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
‘கள்வனின் காதலி’ இயக்குநர் தமிழ்வாணன் டைரக்ஷனில் ‘உயர்ந்த மனிதன்’ என்ற படத்தில் அமிதாப் நடிப்பதாக இருந்தார். அந்தப்படம் ‘டிராப் ‘ஆகி விட்டது.
‘தலைவர்-170’ படத்தில் ஃபஹத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா ரகுபதி, ரித்திகா சிங் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இவர்கள் ரஜினிகாந்துடன் நடிப்பது இதுவே முதல் முறை. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு மூன்று தினங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார்.
போலி என்கவுன்டர்களுக்கு எதிராக உருவாகும் இந்தப் படத்தின் கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்டுள்ளது.
படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புக்காக திருவனந்தபுரம் சென்ற ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
அப்போது, காரின் மேற்கூரை வழியாக நின்று, தனது பாணியில் ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் கையசைத்து வணக்கம் கூறினார்.
ஆரஞ்சு நிற சட்டையுடன் தலையில் தொப்பி அணிந்திருந்த ரஜினியின் புதிய தோற்றம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் வைரலாகி வருகிறது.
படப்பிடிப்பின் போது பத்பநாபசாமி கோயில் உள்ளிட்ட முக்கிய ஆலயங்களில் தரிசனம் செய்ய ரஜினி திட்டமிட்டுள்ளார். இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
-பாப்பாங்குளம் பாரதி.